2023 உலக இளையோர் நாள் – மையக்கருத்து பாடல்

"ஒவ்வொருவரும் நம் குரலை கேட்பார்கள், காற்றில் ஒரு வேகம் தெரிகிறது, இயேசு வாழ்கிறார், அவர் நம்மை தனியே விடுவதில்லை, அன்புகூர்வதை நாம் நிறுத்தப்போவதில்லை" – உலக இளையோர் நாள் பாடல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2023ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளுக்கென, போர்த்துகீசிய மொழியில், "காற்றில் ஒரு வேகம் தெரிகிறது" என்ற பொருள்படும், “Há Pressa no Ar” என்ற தலைப்பில், பாடல் ஒன்று, சனவரி 27, இப்புதனன்று வெளியானது.

உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் விருதுவாக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள "மரியா புறப்பட்டு ... விரைந்து சென்றார்" (லூக். 1:39) என்ற சொற்களில் பொதிந்திருக்கும் அவசரம், வேகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு "காற்றில் ஒரு வேகம் தெரிகிறது" என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

தன் உறவினர் எலிசபெத்திற்கு பணிவிடை செய்ய விரைந்து புறப்பட்ட மரியாவைப்போல், இளையோர் இவ்வுலகிற்குப் பணியாற்ற விரைந்து செல்லவேண்டும் என்ற கருத்தை, மரியாவோடு இணைந்து பாடுவதாக இந்தப் பாடல் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாடல், போர்த்துகீசிய மொழியில் தனியாகவும், ஆங்கிலம், இஸ்பானியம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளுடன் கூடிய பன்னாட்டு பதிப்பாகவும், இரு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் கோயிம்ப்ரா (Coimbra) மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி João Paulo Vaz அவர்கள் உருவாக்கிய பாடல் வரிகளுக்கு, Pedro Ferreira என்ற இசை ஆசிரியர் பண்ணமைத்துள்ளார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர் போர்த்துக்கல் நாட்டிற்கு வருகை தந்து, அங்குள்ளவர்களைச் சந்தித்து, அவர்களுடன் இணைந்து பாடுவதைப்போல், இந்தப் பாடலின் காணொளிப் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொருவரும் நம் குரலை கேட்பார்கள், காற்றில் ஒரு வேகம் தெரிகிறது, இயேசு வாழ்கிறார், அவர் நம்மை தனியே விடுவதில்லை, அன்புகூர்வதை நாம் நிறுத்தப்போவதில்லை" என்ற சொற்கள், இப்பாடலின் பல்லவியாக ஒலிக்கின்றன.

2022ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உலக இளையோர் நாள் நிகழ்வுகள், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும், இந்தப் பெருந்தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, இந்த நிகழ்வுகளின் தேதிகள், இவ்வாண்டு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2021, 15:19