கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ 

பெருந்தொற்று மட்டுமல்ல, பாகுபாட்டு நிலைகளும், கொல்கின்றன

நோய்க்கு தடுப்பூசிபோல், பாகுபாட்டு நிலைகளையும், ஏழ்மையையும் களைய அறுவை சிகிச்சைத் தேவைப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் 12 கோடியே 20 இலட்சம் மக்கள் பசியால் வாடியது, உலக மக்கள் அனைவரையும் ஒரு பெருந்தொற்று தாக்கியது, என 2020ம் ஆண்டு தந்த சவால்களை பின்னுக்குத் தள்ளி, நம்பிக்கையுடன் புதிய ஆண்டில் நடைபோடுவோம் என மியான்மார் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், மக்களின் ஒருமைப்பாட்டுணர்வு அதிக அளவில் வெளிப்பட்டு, உதவிகள் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் கிடைத்தது குறித்தும் மகிழ்ச்சியை வெளியிட்ட கர்தினால் போ அவர்கள், மிகக் குறுகிய காலத்தில் இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், புதிய நம்பிக்கைகளை விதைப்பதாக உள்ளது என தன் புத்தாண்டு செய்தியில்  கூறியுள்ளார்.

இயற்கை நம்மை தாக்கியபோதெல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவியுள்ளோம் என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் போ  அவர்கள், இப்பெருந்தொற்று காலத்தில் நலப்பணியாளர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது என தன் செய்தியில் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலம், சமுதாயத்தில் நிலவும் அநீதியான சூழல்களை படம்பிடித்துக்காட்டியுள்ளது எனக்கூறும் மியான்மார் கர்தினாலின் செய்தி,  பெருந்தொற்று மட்டுமல்ல, பாகுபாட்டு நிலைகளும், ஏழ்மையும் மக்களைக் கொல்கின்றன என்பதால், நோய்க்கு தடுப்பூசிபோல், பாகுபாட்டு நிலைகளையும், ஏழ்மையையும் களைய அறுவை சிகிச்சையொன்று தேவைப்படுகின்றது, என மேலும் உரைக்கின்றது.

சமூக ஒழுங்கமைவுகளில் காணப்படும் சீர்கேடுகளை ஒரு சவாலாக பார்க்கும் அதேவேளை, அவைகளை சமுதாய சீர்திருத்தத்தைக் கொணர்வதற்கான வாய்ப்பாகவும் நோக்கவேண்டும் எனவும், தன் புத்தாண்டு செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் போ.

இன்று மியான்மாரில் நிலவும் பெருந்தொற்று, கோவிட்-19 மட்டுமல்ல, உள்நாட்டு மோதல்கள், எழுபது ஆண்டுகளாக மக்கள் குடிபெயர்ந்திருக்கும் நிலை, இளையோர் குடிபெயர்தல், நவீன அடிமைத்தனம் என, பல்வேறு பெருந்தொற்றுகள் உள்ளன, அவை சீர்செய்யப்பட்ட வேண்டியுள்ளது என உரைக்கும் கர்தினால் போ அவர்கள், காயப்பட்டுள்ள வரலாற்றிலிருந்து இந்த பெருந்தொற்றுகளை அப்புறப்படுத்த உழைக்க வேண்டியது அனைவரின் கடமை எனவும் விண்ணப்பித்துள்ளார்.

பல ஆண்டுகளாக சுரண்டப்படுவதாலும், முறையற்ற பொருளாதார நடவடிக்கைகளாலும், மியான்மார் மக்கள் துன்பங்களை அனுபவித்துவரும் நிலைகள் மாற்றப்பட்டு, பொருளாதார, மற்றும், சுற்றுச்சூழல் நீதியை அடிப்படையாகக்கொண்ட அமைதி, நாட்டில் நிலவவேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து கனவுகாண்போம் என, தன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மேலும் அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் போ. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2021, 14:58