பேராயர் Miguel Cabrejos பேராயர் Miguel Cabrejos  

மிகக் கடினமான 2020ம் ஆண்டு, பிறரன்பிற்கும் எடுத்துக்காட்டு

நெருக்கடிகள் நிறைந்த 2020ம் ஆண்டில், தான் ஒரு நல்ல சமாரியர் என்பதை, கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலகிற்குப் பறைசாற்றியது - பேராயர் Cabrejos

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு, மிகக் கடினமான ஓர் ஆண்டாக அமைந்த அதே வேளையில், இந்த ஆண்டு, கிறிஸ்தவ பிறரன்பிற்கும், மனிதாபிமானத்திற்கும் எடுத்துக்காட்டான ஓர் ஆண்டாகவும் விளங்கியது என்று, CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, பேராயர் Miguel Cabrejos அவர்கள் கூறியுள்ளார்.

புத்தாண்டையொட்டி தன் செய்தியை வெளியிட்டுள்ள பேராயர் Cabrejos அவர்கள், நெருங்கிய உறவுகளை இழப்பதற்கும், பொருளாதார சீர்குலைவைச் சந்திப்பதற்கும் காரணமான 2020ம் ஆண்டு, பல வழிகளிலும், ஒரு பெரும் சுமையாக விளங்கியது என்று கூறியுள்ளார்.

நெருக்கடிகள் நிறைந்த 2020ம் ஆண்டில், தான் ஒரு நல்ல சமாரியர் என்பதை, கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலகிற்குப் பறைசாற்றியது என்று தன் செய்தியில் கூறியுள்ள பேராயர் Cabrejos அவர்கள், CELAM அமைப்பும், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், கோவிட் நோயினால் பெரிதும் காயப்பட்ட தென் அமெரிக்க நாடுகளுக்கு நம்பிக்கையைக் கொணர்ந்தன என்று கூறியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ள சமுதாய ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் சீரழிவு, நலவாழ்வு பிரச்சனைகள், குடும்பங்களில் நிலவும் வன்முறைகள் ஆகிய அனைத்திற்கும் தீர்வு காண்பது நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள பெரும் சவால் என்று CELAM தலைவர், பேராயர் Cabrejos அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள தடுப்பூசி மருந்து, சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் சமமாகச் சென்றடைவது, நமக்கு முன்னிருக்கும் மிக அவசரமான தேவை என்ற விண்ணப்பத்துடன், பேராயர் Cabrejos அவர்கள், தன் புத்தாண்டு செய்தியை நிறைவு செய்துள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2021, 15:24