புனித யோசேப்பு புனித யோசேப்பு  

மகிழ்வின் மந்திரம் - புனித யோசேப்பு ஆண்டு

ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு புனித யோசேப்பிடம் இருந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

மகனாகிய கடவுளையும் அவரது தாயான கன்னி மரியாவையும் இவ்வுலகில் பாதுகாத்தவர் என்பதால், ‘திருக்குடும்பத்தின் தலைவர்’ என்று அறியப்படுகிறார் புனித யோசேப்பு. அவரை கௌரவிக்கும் விதமாக, 2020ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி முதல், 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முடிய புனித யோசேப்பு ஆண்டாக சிறப்பித்து வருகிறது திருஅவை. திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். அந்த அறிவிப்பின் 150ம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பு ஆண்டை துவக்கி வைத்துள்ளார். 

கன்னி மரியாவுக்கு நிகராக கடவுளின் மீட்புத் திட்டத்தில் யோசேப்பு ஒத்துழைத்திருக்கிறார். இவர் பேசியதாக நற்செய்திகள் எதுவும் கூறாததால், ‘அமைதியான புனிதர்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

மனுவுரு எடுத்த இறைமகனுக்கு இவ்வுலகில் எடுத்துக்காட்டான தந்தையாக செயல்பட யோசேப்பை கடவுள் முன்நியமனம் செய்தார். கன்னி மரியாவைத் திருமணம் செய்ததன் வழியாக இயேசுவின் தந்தை என்ற உரிமை யோசேப்புக்கு கிடைத்தது. ஆகவேதான், மரியாவிடம் பிறந்த இறைமகன், “யோசேப்பின் மகனாகிய இயேசு” (யோவான் 6:42) என்று அழைக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு புனித யோசேப்பிடம் இருந்தது.

யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் அவர் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எகிப்து நாட்டு காப்டிக் கிறிஸ்தவர்கள், ‘தச்சரான புனித யோசேப்பு’ என்ற விழாவை ஜூலை 20ந்தேதி கொண்டாடியதாக அறிகிறோம். 440ஆம் ஆண்டளவில் தோன்றிய ‘தச்சரான யோசேப்பின் வரலாறு’ என்ற நூல், பல கற்பனை புனைவுகளுடன் புனித யோசேப்பு குறித்த தகவல்களை வழங்குகிறது.

ஆண்டவரிடம் செல்வாக்கு பெற்ற புனிதர்களில், அன்னை மரியாவுக்கு அடுத்த இடத்தில் யோசேப்பு இருக்கிறார் என்ற கருத்தியல் 13ஆம் நூற்றாண்டில்தான் ஆழமாக வேரூன்றியது. இதையடுத்து, புனித யோசேப்பு பக்தி மேற்கத்திய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1414ல் கூடிய கான்ஸ்தான்சு பொதுச்சங்கத்தில், கன்னி மரியாவோடு தொடர்புள்ள கருத்தியல்களை புனித யோசேப்புக்கு பொருத்தி, இறையியலாளர் ஜெர்சோன் அவர்கள் வழங்கிய உரைகள், புனித யோசேப்பு மீதான பக்திக்கு, கத்தோலிக்கத் திருஅவையின் அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படுத்தின.

புனித யோசேப்பு விழாவை மார்ச் 19ந்தேதி கொண்டாடுமாறு, 1479ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் உரோமின் திருவழிபாட்டு நாள்காட்டியில் சேர்த்தார். 1570ம் ஆண்டு திருத்தந்தை 5ம் பயஸ், இந்த விழாவை, திருஅவை முழுவதற்கும் விரிவுபடுத்தினார். 1597ல் புனித யோசேப்பின் முதல் மன்றாட்டுமாலை உரோமில் வெளியானது. 1621ம் ஆண்டு, மே 8ம் தேதி, திருத்தந்தை 15ம் கிரகரி, புனித யோசேப்பு விழாவை கடன் திருநாளாக அறிவித்தார். 1870ம் ஆண்டு, டிசம்பர் 8ந்தேதி, ‘புனித யோசேப்பு உலகளாவிய திருஅவையின் பாதுகாவலர்’ என திருத்தந்தை 9ம் பயஸ் அறிவித்தார்.

1955ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பயஸ், ‘தொழிலாளரான புனித யோசேப்பு’ விழாவை மே 1ம் தேதி சிறப்பிக்குமாறு அறிமுகம் செய்தார். 1962ல் திருத்தந்தை 23ம் யோவான், திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை சேர்த்தார். 1969ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் சீரமைத்த நாள்காட்டியின்படி, ‘கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு’ திருநாள் மார்ச் 19ம் தேதி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2013ம் ஆண்டு, மே 1ம் தேதி, திருப்பலியின் மற்ற நற்கருணை மன்றாட்டுகளிலும், புனித யோசேப்பின் பெயரை திருத்தந்தை பிரான்சிஸ் இணைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2021, 08:12