அநீதியாக சிறைவைக்கப்பட்டுள்ள அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு ஆதரவாக... அநீதியாக சிறைவைக்கப்பட்டுள்ள அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு ஆதரவாக... 

கூண்டுப் பறவைகளாலும் பாடமுடியும் - அருள்பணி சுவாமி சே.ச.

2019ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட கைதிகள், விசாரணைக்காக, ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலமாகக் காத்திருக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை நகரின் Taloja மத்திய சிறையில், நூறு நாள்களுக்கு மேலாக, அநீதியான முறையில் அடைக்கப்பட்டிருக்கும், 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கூண்டில் அடைபட்டுள்ள பறவைகளாலும் பாட இயலும் என்ற கருத்துடன், தனது நூறு நாள் சிறை அனுபவம் பற்றி, கூறியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் அனுபவங்கள் குறித்து, தனது இயேசு சபை சகோதரர்களுக்கு மடல் ஒன்று எழுதியுள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தாங்கள் எதற்காக சிறைவைக்கப்பட்டுள்ளோம் என்பதைக்கூட அறியாமல், விசாரணைக் கைதிகளாக, சிறையில் துன்புறும் வறியோரின் நிலை பற்றி விளக்கியுள்ளார்.

சிறையில், நிச்சயமற்றதன்மை மட்டுமே, நிச்சயமான ஒன்றாகவும், இங்கு வாழ்க்கை, ஒரேமாதிரியாகவும் உள்ளவேளை, தனது சிறைவாழ்வின் நூறாவது நாளை முன்னிட்டு, மிகப்பெரிய அளவில் தனக்கு வழங்கப்பட்ட தோழமை மற்றும், ஊக்கங்களுக்கு, உளமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார், அருள்பணி ஸ்டான் சுவாமி.

இம்மாதம் 15ம் தேதி, தனது சிறைவாசத்தின் நூறாவது நாளை நிறைவு செய்துள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தனது அனுபவம் பற்றி எழுதியுள்ள மடலில், தன்னைப் பற்றி அதிகம் குறிப்பிடாமல், விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் நிலை பற்றியே அதிகம் விவரித்துள்ளார்.

இந்த கைதிகளில் பலர், தாங்கள் எந்தக் குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறியாமலும், தங்களின் குற்றப்பதிவைப் பார்க்காமலும், எவ்வித சட்ட அல்லது மற்றவரின் உதவியின்றியும், பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்று கூறியுள்ள அருள்பணி சுவாமி அவர்கள், சிறையில் இத்தகைய கைதிகளே, எனது பலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைக் கதைகளில் பெரும்பாலானோர், பொருளாதார மற்றும், சமுதாய அளவில், நலிந்த குழுமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் கல்வியறிவின்மை மற்றும், பொருளாதார ஏழ்மை ஆகியவற்றால், தங்களுக்கென, வழக்கறிஞரின் உதவியைத் தேட இயலாமல் உள்ளனர் என்றும், அருள்பணி சுவாமி அவர்களின் மடலில் கூறப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட கைதிகள், விசாரணைக்காக, ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலமாகக் காத்திருக்கின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2021, 15:23