விண்மீன்களின் ஒளியில் பயணம் செய்த ஞானிகள்  விண்மீன்களின் ஒளியில் பயணம் செய்த ஞானிகள்  

திருக்காட்சிப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதை முதலில் சிந்திக்கலாம். விண்மீன்களின் துணையோடு, இறைவனைச் சந்தித்தபின், நாம் பின்பற்றவேண்டிய மாற்று வழிகளைப்பற்றி சிந்திக்கலாம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருக்காட்சிப் பெருவிழா : ஞாயிறு சிந்தனை 2021

கிரகோரியன் நாள்காட்டியின்படி, ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜனவரி (சனவரி) என்றழைக்கப்படுகிறது. ஜானுஸ் தெய்வத்திற்கு இரு முகங்கள் உள்ளன. ஒரு முகம், பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பதுபோலவும் இவ்விரு முகங்களும் அமைந்திருக்கும். கடந்துவந்த ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும், ஜானுஸ் தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதத்திற்கு, அந்தத் தெய்வத்தின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

கடந்துவந்த 2020ம் ஆண்டை பின்னோக்கிப் பார்க்க, நமக்குள் தயக்கங்கள் எழுவதை உணர்கிறோம். ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயுடன், 2020ம் ஆண்டு ஆரம்பமானது. அந்த நெருப்பு மார்ச் மாதத்தையொட்டி குறைந்துவந்த வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று என்ற நெருப்பு, அனைத்து நாடுகளிலும் பற்றியெரிந்தது.

காட்டுத்தீ, கொள்ளைநோய் என்ற நெருப்புகளால் பற்றியெரிந்த இவ்வாண்டை திரும்பிப் பார்ப்பது, தொடக்க நூலில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வை, நினைவுக்குக் கொணர்கிறது. சோதோம், கொமோரா நகரங்கள் பற்றியெரிந்தபோது, அவற்றைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும்படி, லோத்தின் குடும்பத்தினருக்கு, இறைவனின் தூதர் கட்டளையிட்டார் (தொ.நூ. 19:17). ஆனால், அந்தக் கட்டளைக்குக் கீழ்படியாமல், லோத்தின் மனைவி, திரும்பிப் பார்த்தபோது, உப்புத்தூணாக மாறினார் (தொ.நூ. 19:26) என்று தொடக்க நூலில் வாசிக்கிறோம்.

கொள்ளைநோய், மரணம், வேலை இழப்பு, பஞ்சம், முழு அடைப்பு, கறுப்பின மக்களின் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீதிக்காக குரல் எழுப்பியோரின் சிறைவாசம் என்று, பல வழிகளிலும் பற்றியெரிந்த 2020ம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும், தூண்களாக உறைந்துபோக வாய்ப்புண்டு. வேதனை, வெறுப்பு, விரக்தி, கசப்பு, கோபம் என்ற உணர்வுகளை ஊட்டும் செய்திகளை ஒவ்வொருநாளும் வெளியிட்டு, செயலற்றுபோன தூண்களாக, நம்மை, வீட்டில் அடைத்துவைக்க, ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சிகளை நாம் அறிவோம்.

இத்தருணத்தில், ஊடகங்கள் காட்டும் நம்பிக்கையற்ற உலகைக் காணப்போகிறோமா, அல்லது, வெளியே சென்று, வானத்தை நிமிர்ந்து பார்க்கப்போகிறோமா என்ற கேள்வியை, சென்ற ஞாயிறு எழுப்பியதைப் போலவே, இந்த ஞாயிறும் எழுப்புகிறோம். வெளியே சென்று "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார்" (தொ.நூ. 15:5) என்று, சென்ற ஞாயிறு, ஆபிராமுக்கு ஆண்டவர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்குச் செவிமடுத்த ஆபிராம், நம்பிக்கை கொண்ட பல தலைமுறைகளுக்கு தந்தையான ஆபிரகாமாக மாறினார்.

அத்தகையதோர் அழைப்பு, இந்த வார வழிபாட்டிலும் நம்மை வந்துசேருகிறது. விண்மீனைக் கண்டு, அது காட்டிய வழியில் பயணம் மேற்கொண்ட கீழ்த்திசை ஞானிகள் வழியே இந்த அழைப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானின் வடபகுதியில், பால்க் (Balkh) நாட்டை ஆட்சி செய்த மன்னர் இப்ராகிம், அளவற்ற செல்வங்களால் சூழப்பட்டிருந்தார். அதேவேளை, அவர், ஆன்மீக உண்மைகளைக் காணும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

ஒருநாள் இரவு, பட்டாடை அணிந்து, தங்கக் கட்டிலில் படுத்தவண்ணம், கடவுளை எங்கு காணமுடியும் என்பதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார், மன்னர். அப்போது, அரண்மனையின் கூரையில் யாரோ நடந்து செல்வதுபோல் சப்தம் கேட்டது. அரசர் உடனே, "யாரங்கே?" என்று கத்தினார். "உங்கள் நண்பன்" என்று, கூரையிலிருந்து பதில் வந்தது. "இந்த இரவு நேரத்தில் என் கூரைமீது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று மன்னர் எரிச்சலுடன் கேட்க, "தொலைந்துபோன என் ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று பதில் வந்தது.

மதியற்ற அந்தப் பதிலைக் கேட்டு, மேலும் எரிச்சலடைந்த மன்னர், "முட்டாளே! தொலைந்துபோன ஒட்டகத்தை, என் கூரைமீது தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்று ஏளனமாகக் கேட்டார். உடனே, "முட்டாளே! பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, நீ கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்ற கேள்வி, கூரையிலிருந்து ஒலித்தது.

பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, இறைவனைத் தேடுவது கடினம். இறைவனைத் தேடிக் கண்டுபிடிக்க, கடினமான, ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த உண்மையை உணர்த்தும் திருநாளை, இன்று நாம் கொண்டாடுகிறோம்.

மூன்று அரசர்கள், அல்லது, மூன்று ஞானிகள் என்று அழைக்கப்படும் நமது விழா நாயகர்கள், கடினமான ஒரு பயணத்தின் இறுதியில், கடவுளைக் கண்டனர். இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் நடந்தனர் என்றும், இறைவனைச் சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறுவழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதை முதலில் சிந்திக்கலாம். விண்மீன்களின் துணையோடு, இறைவனைச் சந்தித்தபின், நாம் பின்பற்றவேண்டிய மாற்று வழிகளைப்பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்களைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகள், "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்பது, இன்றைய நற்செய்தி சொல்லும் மற்றுமொரு விவரம்: இந்த ஞானிகள், ஆசியாவிலிருந்து, ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்றும், கோள்களை, நட்சத்திரங்களை ஆய்வுசெய்த அறிஞர்கள் என்றும், சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

உலகின் பல நாடுகளில், குறிப்பாக, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், கோள்களை, நட்சத்திரங்களை, வைத்து, பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம். கோள்களையும், நட்சத்திரங்களையும், வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று நம்பி வாழ்வதற்குப் பதில், நட்சத்திரங்களை உருவாக்கிய இறைவனையும், அவர் காட்டும் வழிகளையும், நம்பிவாழ்வது, எவ்வளவோ மேல் என்பதை, இத்திருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது.

இந்த மூன்று ஞானிகள், விண்மீன் வழியே வந்த அழைப்பை ஏற்று, இறைவனைத் தேடி, பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. பல இரவுகள், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில், மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து, தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை இரவுகள், எத்தனை எத்தனை இடர்பாடுகள்? அத்தனையின் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், பல்லாயிரம் மைல்கள் பயணம்செய்த அந்த ஞானிகளின் மனஉறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.

கருமேகம் சூழும்போது, சந்தேகத்தோடு நிமிர்ந்து வானத்தைப் பார்க்க பழகிவிட்ட நாம், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம். சந்தேகம் என்பது, கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும். சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின்னிருந்து, கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் நமக்குப் புரியாது.

நட்சத்திரங்கள், ‘ஸ்டார்’கள் என்ற சொல், மனதில் ஒருசில எண்ணங்களை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில், திரை உலகில் பல 'ஸ்டார்'களை உருவாக்கி, கடவுளுக்கு இணையான ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்கும் பல்லாயிரம் இளையோரை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. இந்த ‘ஸ்டார்’களின் செயற்கை ஒளியை, உண்மை ஒளியென்று நம்பி, அதைச்சுற்றி வட்டமிட்டு, தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளும் விட்டில் பூச்சிகளாக வாழும் இரசிகர்களை நினைத்து வேதனையாய் இருக்கிறது. 'ஸ்டார்'களை நம்பி, தங்கள் வாழ்வை அடகுவைக்கும் இரசிகர்கள், குறிப்பாக, இளையோர், தங்கள் மயக்கத்திலிருந்து விழித்தெழவேண்டும் என்று மன்றாடுவோம்.

விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்ட ஞானிகள், அதன்பின்,  தங்கள் கனவின் வழியே கடவுள் தந்த எச்சரிக்கைக்கு செவிமடுத்து, வாழ்க்கைப் பாதையையே மாற்றிக்கொண்டனர். இந்த ஞானிகளைப்போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் இறைவனைச் சந்தித்தபின், தங்களையும், தங்களைச் சுற்றியிருந்த உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். உறுதியான உள்ளத்துடன் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில், நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும், தேவையான இறையருளை வேண்டுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம் – ஆண்டவர் நமக்கு ஆசி வழங்க, எப்போதும் காத்திருக்கிறார் என்பதை உணர்த்த, ஒவ்வோர் ஆண்டும், சனவரி 1ம் தேதி, மரியா, இறைவனின் தாய் என்ற பெருவிழாவன்று, நாம் சிறப்பிக்கும் திருப்பலியில் ஒலிக்கும் முதல் வாசகம் நமக்கு உதவியாக உள்ளது. ஆண்டின் முதல் நாள் திருப்பலியில் நாம் கேட்ட முதல் வாசகம் ஆசி நிறைந்த சொற்களால் நிறைந்துள்ளன. மோசே, ஆரோன் மற்றும் ஏனைய இறைப் பணியாளர்கள், இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கும்போது அவர்கள் கூறவேண்டிய சொற்கள் என்ன என்பதை இறைவனே சொல்லித்தருகிறார்: ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:22-26)

இறைவன் சொல்லித்தந்துள்ள இந்த ஆசிமொழிகளை, புலர்ந்திருக்கும் இவ்வாண்டில், நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கு கற்றுக்கொள்வோமாக! ஆசிமொழிகளை வழங்கும் நாம் ஆசியால் நிறைவோம் என்பது உறுதி!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2021, 14:25