ஈராக் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ ஈராக் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ 

அமைதியைக் கண்டுகொள்ள, தன்னலப்போக்குகளை கைவிடுக

கர்தினால் சாக்கோ - துன்ப காலங்களில், அன்பு, அமைதி, மற்றும், ஒன்றிணைந்து வாழ்தலின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டியது மதங்களின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்றாலும், பல்வேறு துன்ப நிலைகளாலும், போர்களாலும் துவண்டு போயிருக்கும் ஈராக் நாட்டில், 2021ல் இடம்பெற உள்ள திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம், வன்முறையற்ற நாடாக, ஒரு புதிய நாடாக ஈராக் நாடு உருவாக உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், ஈராக் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.

ஈராக் நாட்டு கிறிஸ்தவர்களுக்கென புத்தாண்டு செய்தி ஒன்றை வெளியிட்ட, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், துன்ப காலங்களில், அன்பு, அமைதி, மற்றும் ஒன்றிணைந்து வாழ்தலின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டியது மதங்களின் கடமை என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஈராக் ஒரு புதிய நாடாக உருவெடுப்பதற்கு திருத்தந்தையின் இவ்வாண்டு திருத்தூதுப்பணம் பெரிய அளவில் உதவுவதாக இருக்கும் என்று தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய கடமையை மறந்து, அதிகாரம், மற்றும், பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், அமைதியைக் கண்டுகொள்ளவேண்டுமெனில், தன்னலப்போக்குகளைக் கைவிடவேண்டும் என தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைதியின்றி வளர்ச்சியும் வாழ்வும் இல்லை என்பதை உணர்ந்தவர்களாக அனைவரும், ஒன்றிணைந்த வாழ்வு, சகிப்புத்தன்மை, வன்முறையற்ற நிலை, ஒருமைப்பாடு ஆகியவைகளின் மதிப்பீடுகளை உணர்ந்து செயல்பட அழைப்பு விடுக்கும் கர்தினால் சாக்கோ அவர்கள், இத்தகைய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் மதங்கள், மற்றும், அரசுகளின் கடமையை வலியுறுத்தியுள்ளார்.

ஈராக், மத்தியக் கிழக்கு நாடுகள், மற்றும், உலக மக்களின் இதயங்களில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்த கர்தினால் சாக்கோ அவர்கள், பகைமை மற்றும் வன்முறைகளின் சுவர்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட வேண்டும் எனவும், திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் ஈராக் நாட்டில் வெற்றியடைய செபிக்குமாறும், தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2021, 15:02