இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் விவசாயிகள் போராட்டம்  

வேளாண் சட்டங்கள் குறித்த இடைக்காலத் தடைக்கு வரவேற்பு

விவசாயிகள், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக, திறந்தவெளியில் போராடுவதை அனுமதிப்பது, எந்தவொரு நாட்டிற்கும் நல்லதல்ல - ஆயர் Alex Vadakumthala

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதை, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி மாநகரின் எல்லைகளில் 49வது நாளாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றவேளை, சனவரி 12, இச்செவ்வாயன்று, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த, இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது, இந்திய உச்ச நீதிமன்றம்.

இந்த தடை உத்தரவு குறித்து, சனவரி 12, இச்செவ்வாயன்று, யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் தொழிலாளர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Alex Vadakumthala அவர்கள், அரசின் வேளாண் சட்டங்களுக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்ற விவசாயிகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை சிறிது நம்பிக்கையளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

விவசாயிகள், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக, திறந்தவெளியில் போராடுவதை அனுமதிப்பது, எந்தவொரு நாட்டிற்கும் நல்லதல்ல என்றுரைத்த ஆயர் Vadakumthala அவர்கள், விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு, அரசு நட்புமுறையில் தீர்வுகண்டு, அதற்கு முடிவு காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த தடைஉத்தரவு, விவசாயிகளின் போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணும் பாதையில் முன்னோக்கிச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ள ஆயர் Vadakumthala அவர்கள், இவ்விவகாரம் குறித்து தீர்வு காண்பதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடும் குளிர்காலம் ஆரம்பித்த காலக்கட்டத்தில், 2020ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி தொடங்கிய விவசாயிகளின் தொடர் போராட்டத்தில், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், நலவாழ்வுக் குறைவால் இறந்துள்ளனர். மேலும், நடுவண் அரசு விவசாயிகளோடு மேற்கொண்ட எட்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இந்தியாவின் 130 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், எழுபது விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள், விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மை விவசாயிகள், ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாகவே வைத்துள்ளனர். .

இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு, வேளாண் சட்டங்களுக்கும், அரசுக்கும் ஆதரவானது என்று சொல்லி, அந்த குழுவை விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணித்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2021, 14:39