திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் இசைக்குறிப்பு திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் இசைக்குறிப்பு 

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 4

நாம் இன்று, திருவழிபாடுகளிலும், இறைவேண்டல் கூட்டங்களிலும் பயன்படுத்தும் பாடல் புத்தகங்களைப்போல், திருப்பாடல்கள் நூல், இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 4

சனவரி 26, இச்செவ்வாயன்று, இந்தியாவின் 72வது குடியரசு நாளைச் சிறப்பித்துள்ளோம். குடியரசு என்ற சொல்லின் இலக்கணமாக விளங்கவேண்டிய குடிமக்கள், இந்நாளை சிறப்பித்தனர் என்று சொல்வதைவிட, இந்நாளை, இந்திய நடுவண் அரசும், ஏனைய மாநில அரசுகளும், தங்கள் பெருமையை விளம்பரப்படுத்தும் அணிவகுப்புக்களின் வழியே சிறப்பித்தன என்றே சொல்லவேண்டும்.

இந்தியாவின் உண்மையான உயிர்நாடியாக, முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருமக்கள், கடந்த 60 நாள்களுக்கும் மேலாக, தலைநகர் டில்லியில் மேற்கொண்டுவரும் போராட்டங்கள், இந்தியக் குடியரசின் அவலநிலையையும், அதேவேளை, உழைக்கும் மக்களின் உண்மைச் சக்தியையும் உலகறியச் செய்துவருகின்றன.

மகாகவி பாரதியார், "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்..." என்ற பாடலில், பாரத தேசத்தின், இந்திய நாட்டின் உண்மையானச் சக்தியை கனவுகளாக வடித்துள்ளார். இலங்கையுடன் நட்புறவு, நதிகளின் இணைப்பு, நாட்டின் ஒற்றுமை, உள்நாட்டு உற்பத்தி என்ற பல கோணங்களில் பாரதியார் படைத்துள்ள கனவு வரிகள், நமக்கு, பெரும் உந்துசக்தியாகவும், சவாலாகவும் அமைந்துள்ளன.

நம் விவிலியத் தேடல்களில், திருப்பாடல்கள் நூலில் காணப்படும் கவிதைத் திறனை சிந்திக்கும் இவ்வேளையில், சனவரி 26, இந்தியாவின் குடியரசு நாளை நினைவுகூர்ந்துள்ள இவ்வேளையில், பாரதி, தன் கவிதை வழியே கண்ட கனவை நாமும் உணர்வதற்கு,

  • பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
  • பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்

என்று துவங்கும் இந்தக் கவிதையை, ஒருமுறையாகிலும் வாசித்து பயனடைவோம்.

பாரதத்தைப் பற்றி தான் கண்ட கனவை, மக்கள் பாடலாகப் பாடினால் இன்னும் அதிகப் பயன்பெறுவர் என்ற எண்ணத்தில், பாரதியார், இக்கவிதையை, ஒரு பாடல் வடிவில், வழங்கியுள்ளார்.

கட்டுரைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் பதியலாம், ஆனால், அதே கருத்துக்கள் கவிதை வடிவில் வெளியானால், கருத்தும், கவிதை வரிகளும் மனதில் பதியும் என்பதை, சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். கவிதைகள், இசையுடன் கூடிய பாடல்களாக உருவாகும்போது, அக்கவிதையின் வரிகள், நம் உள்ளங்களில், இன்னும் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கும்.

அத்தகைய ஒரு தாக்கத்தை திருப்பாடல்களும் உருவாக்குகின்றன. ஏனெனில், திருப்பாடல்களும் இசையுடன் பாடக்கூடிய பாடல்களாக, இஸ்ரயேல் மக்கள் நடுவே பயன்படுத்தப்பட்டன. இசையும், கவிதை வரிகளும் இணைவதால், திருப்பாடல்கள் உருவாக்கும் தாக்கத்தை, இன்றையத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

20 ஆண்டுகளுக்குமுன், வத்திக்கான் வானொலியில் பணியாற்றி, 12 ஆண்டுகளுக்குமுன் இறையடி சேர்ந்த அருள்பணி ம.ப.ஜேசுதாஸ் அவர்கள் எழுதி இசையமைத்த பொன்மாலை நேரம் என்ற பாடல், இன்றைய நம் தேடலுக்கு உதவியாக உள்ளது.

  • பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
  • என் ஜீவ ராகம் கரைந்தோடுமே...

அந்தப் பாடல் வரிகள் கூறுவதுபோல், நம் வாழ்வு முழுவதும் ஒரு இராகமாக மாறி, காற்றில் கரைந்துவிட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம், பல வேளைகளில், என் மனதில் எழுந்துள்ளது. இசையைக் கேட்கவோ, அல்லது, பாடி மகிழவோ விரும்பாத மனிதர்கள், மிகச் சிலராகத்தான் இருக்கமுடியும் என்பது என் கணிப்பு.

இசையும் மதமும், இசையும் கடவுளும் மிக நெருங்கியவர்கள். அதிலும் சிறப்பாக, இந்திய மரபில், தமிழ் மரபில், இசை, ஒரு தெய்வீக வடிவம் பெற்றுள்ளது. இறைவனே இசை வடிவம் என்று கூறுவது, தமிழ் மரபு.

யூத மரபிலும், மதமும் இசையும் மிக நெருங்கியத் தொடர்புடையவை. திருப்பாடல்கள், இசையோடு பாடப்பட வேண்டியவை. சென்ற விவிலியத்தேடலில், திருப்பாடல்கள், அழகான எபிரேயக் கவிதைகள் என்று சிந்தித்தோம். இன்று, திருப்பாடல்கள், இசையோடு பாடக்கூடிய கவிதைகள் என்பதை சிந்திப்போம்.

நாம் இன்று, திருவழிபாடுகளிலும், இறைவேண்டல் கூட்டங்களிலும் பயன்படுத்தும் பாடல் புத்தகங்களைப்போல், திருப்பாடல்கள் நூல், இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. பல திருப்பாடல்களின் ஆரம்பத்தில், அந்த பாடல் எதற்காக எழுதப்பட்டது, எந்த இசைக்கருவியுடன், எந்த ராகத்தில் பாடப்பட வேண்டும் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, திருப்பாடல் 4ன் துவக்கத்தில் காணப்படும் குறிப்பு இது: பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா. திருப்பாடல் 6ன் துவக்கத்தில் இன்னும் விரிவான ஒரு குறிப்பு காணப்படுகிறது: பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா. எந்த இராகத்தில் பாடல் அமையவேண்டும் என்பதை, 22ம் திருப்பாடலின் குறிப்பில் காண்கிறோம்: பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா.

திருப்பாடல்களின் பல வரிகளில் பாடுவேன், ஆடிப் பாடுவேன், பாடுங்கள் என்ற சொற்கள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசில எடுத்துக்காட்டுகள் இதோ:

  • திருப்பாடல் 9: 1-2
  • ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்: வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்: உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
  • திருப்பாடல் 95: 1-2
  • வாருங்கள்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்: புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

இதேபோல், திருப்பாடல்கள் 30, 67, 81, 98, 149 என, பல பாடல்கள் வழியே, பாடுவதற்கும், பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

திருப்பாடல்கள் நூலின் இறுதிப்பாடலான 150ம் திருப்பாடல் முழுவதுமே இறைவனை, நாவார, மனதார போற்றிப் பாட, நமக்கு விடப்படும் ஓர் அழகான அழைப்பு.

  • திருப்பாடல் 150: 1,3-6
  • அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! கலீர் எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலூயா!

மொத்தத்தில் திருப்பாடல்கள் நூல், இஸ்ராயலர்கள் அதிகம் பயன்படுத்திய ஒரு பாடல் புத்தகம் என்பதை எளிதில் உணரலாம். எருசலேம் கோவில் அழிக்கப்பட்டபோது, இஸ்ராயலர்கள் மத்தியில், இசையும், பாடலும் அழிந்துவிடும் ஆபத்து உருவானது.

எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதும், பாபிலோன், பாரசீகம், ஆகிய நாடுகளில் அடிமைகளாக இஸ்ராயலர்கள் துன்புற்றபோது, இசை அவர்கள் மத்தியில் ஒலிக்கக் கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டது. சட்டங்களாலும், அடக்குமுறைகளாலும் இசையை அழித்துவிட முடியுமா என்ன? மௌனமாகத் தங்கள் அடிமைத்தனத்தை ஏற்று வாழ வேண்டும் என்ற அந்நிய நாட்டுச் சட்டங்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், யூதர்கள் மனதில் இசை ஒலித்துக்கொண்டே இருந்திருக்கும். அந்நேரத்தில், அவர்களுக்கு அதிகம் உதவியாக இருந்தவை, திருப்பாடல்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

யூதர்களைக் கொன்று குவித்த நாத்சி வதை முகாம்களில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அங்கு கைது செய்யப்பட்டிருந்த பல கைதிகள் மத்தியில் வயலின் வாசிக்கத் தெரிந்த ஒருவர் முதல் நாள் இரவு தன் இசைக் கருவியை வாசித்தபடி பாடல்கள் பாடினார். முகாமில் இருந்த கைதிகள் அவரைச் சுற்றி நின்று பாடலை இரசித்தனர். சேர்ந்து பாடினர். பாடலை நிறுத்திவிட்டு, அவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள் சிறை அதிகாரிகள்.

அடுத்த நாள் இரவு, அவர் மீண்டும் தன் இசைக்கருவியுடன் பாடிக் கொண்டிருந்தபோது, அதிகாரிகள் வந்து அவரது இசைக் கருவியை உடைத்து எறிந்தனர். இசைக் கருவியை வாசித்த அவரது விரல்களை வெட்டினர். கைதிகள் அதிர்ச்சியில் கலைந்துசென்றனர்.

அடுத்த நாள், விரல்கள் வெட்டப்பட்ட நிலையில், அவர், அந்த வளாகத்திற்கு வந்து, பாட ஆரம்பித்தார். மற்றவர்களும் சேர்ந்து பாடினர். அதிகாரிகள் வந்து அவரை இழுத்துச் சென்று, அவரது நாக்கை வெட்டினர். முகாம் முழுவதும், அதிர்ச்சியில், மௌனத்தில் உறைந்தது.

அடுத்த நாள் விரல்களும், நாவும் வெட்டப்பட்ட அந்த பாடகர், மீண்டும் வளாகத்திற்கு வந்தார். மற்ற கைதிகளும் அச்சத்துடன், ஒருவித எதிர்பார்ப்புடன் சுற்றி வந்து நின்றனர். அந்தப் பாடகர், கண்களை மூடி, தன் மனதில் எழுந்த ஓர் இசையை எழுப்பி அந்த இசைக்குத் தகுந்தது போல் வார்த்தைகள் எழாத தன் வாயைத் திறந்து, தெளிவில்லாத ஒரு குரலில் பாடி, உடலை அசைத்து, ஆட ஆரம்பித்தார். மற்ற கைதிகளும் அந்த ஒலியில் தங்களை இணைத்து, அவருடன் சேர்ந்து ஆடினர். இதைக் கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சியில், மௌனத்தில் உறைந்தனர்.

அடிமைத்தளைகளுக்கு, அடக்குமுறைகளுக்கு ஆளான பல குழுக்கள் இசையால் வாழ்ந்துள்ளன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன. பழைய ஏற்பாட்டு காலம் முதல், இன்றுவரை, துன்பங்களைத் தாங்கி வாழும் யூதர்கள், இசை வழியே,, பாடல்கள் வழியே தங்கள் சக்தியைப் பெற்றனர் என்பது, நமக்கு நல்லதொரு பாடம். இசையை, பாடல்களை அவர்கள் மத்தியில் வளர்த்த பெருமையின் பெரும்பகுதி திருப்பாடல்களைச் சாரும்.

பூந்தென்றல் காற்றில் நம் வாழ்வு ஒரு இராகமாக கரைந்தோடுவதை கற்பனை செய்த அருள்பணி ம.ப.ஜேசுதாஸ் அவர்களின் பாடலுடன் துவங்கியது இன்றையத் தேடல். இறைவனை சங்கீதமாக உருவகித்து அவர் இயற்றிய மற்றுமொரு பாடலுடன் இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2021, 15:08