தேடுதல்

"என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." (மாற்கு 1:11) "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." (மாற்கு 1:11) 

ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா: ஞாயிறு சிந்தனை

தந்தைமீது நம்பிக்கை கொண்டு, தன் பணியைத் துவக்க, இயேசு எடுத்து வைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்துவைத்தார் என்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா: ஞாயிறு சிந்தனை

20 ஆண்டுகளுக்கு முன், சனவரி 1, புத்தாண்டு நாளன்று நடந்த ஒரு நிகழ்வு, என் வாழ்வில் ஆழமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. அருள்பணியாளர் ஒருவருடன் நான், புத்தாண்டு நாளன்று, சென்னை அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்தது. எங்கள் இயேசு சபையைச் சேர்ந்த ஓர் அருள்பணியாளர், அன்று காலை, சாலை விபத்தில் மரணமடைந்தார். புத்தாண்டு விழாவையொட்டி, நள்ளிரவு, மற்றும் காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில், துறவு இல்லத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த அவர், வேறொரு வாகன ஓட்டியின் தவறால் உயிரிழந்தார். அவரது உடலை, அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து மீட்டுவர, நாங்கள் சென்றிருந்தோம்.

அந்தச் சவக்கிடங்கில் நான் அடைந்த அதிர்ச்சியை, என்னால், பல மாதங்கள் மறக்க முடியவில்லை. புத்தாண்டு நாளுக்கு முந்தைய இரவில் நடக்கும் சாலை விபத்துக்களை நாம் அறிவோம். எனவே, அந்தச் சவக்கிடங்கில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தன. அத்துடன், அச்சடலங்கள், ஒன்றன்மேல் ஒன்றாக, தாறுமாறாகப் போடப்பட்டிருந்தன. அத்தனை சடலங்களின் மத்தியில் எங்கள் அருள்பணியாளரை அங்கிருந்த காவல்துறையினரிடம் அடையாளம் காட்டினோம். நாங்கள் அந்தச் சவக்கிடங்கில் செலவிட்ட நேரம், ஒருவேளை 10 நிமிடங்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அது, பல மணி நேரங்கள் போல் தோன்றியது.

அந்த சவக்கிடங்கில், இறந்த உடல்களுக்கு மத்தியில், வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு எனக்குக் கிடைத்ததை உணர்ந்தேன். அந்தப் புத்தாண்டு நாள், என் வாழ்வை, புரட்டிப்போட்ட ஒரு நாள் என்றே சொல்லவேண்டும்.

உலகில், பலருக்கு, அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வு, அவர்களது வாழ்வை, புரட்டிப்போட்டது, மாற்றங்களைக் கொணர்ந்தது. கிறிஸ்தவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவர, கொலை வெறியோடு, தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலை, பார்வை இழக்கச்செய்து, பின்னர் மறுபார்வை தந்த இறைவன், அவரை, திருத்தூதர் பவுலாக மாற்றினார். பாம்பலோனா கோட்டையில், காலில் பட்ட குண்டு, இலயோலா இஞ்ஞாசியாரின் வாழ்வைப் புரட்டிப்போட்டது.

தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட இராஜ் மோகன் காந்தியின் அந்தப் பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப்போட்டது. அவரை மகாத்மாவாக்கியது. கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. அதுவரை, அவர் வாழ்ந்துவந்த வாழ்வும், அந்த அனுபவத்திற்குப்பின் தொடர்ந்த வாழ்வும் முற்றிலும் மாறுபட்டு நின்றன.

இவர்கள் அனைவரும் சந்தித்த அந்நிகழ்வுகள், அவர்கள் புதியதொரு வாழ்வைத் தொடர்வதற்கு, பெற்றுக்கொண்ட திருமுழுக்கு என்றே சொல்லவேண்டும். இத்தகைய அனுபவத்தை, இறைமகன் இயேசு, யோர்தான் நதியில், தன் திருமுழுக்கின் வழியே பெற்றதை, இன்று சிந்திக்க வந்துள்ளோம்.

முன்பு ஒரு முறை படித்த சிரிப்புத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கின்றனர். “நான் கடவுளைப் பார்த்தால், ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்” என்று ஒரு நண்பர் ஆரம்பிக்கிறார். “என்ன கேள்வி?” என்று அடுத்தவர் கேட்கிறார். “கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்யமாட்டியா?” என்பதே தன் கேள்வி என்று நண்பர் சொல்ல, “நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே?” என்று அடுத்தவர் சொல்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், முதல் நண்பர், “கேட்கலாம். ஆனா, அதே கேள்வியை கடவுள் என்கிட்டே திருப்பி கேட்டா?” என்று, அவர் எழுப்பும் கேள்வியோடு, சிரிப்புத் துணுக்கு முடிகிறது. சிரிப்புத் துணுக்குகள், பலநேரங்களில், நம் சிந்தனைகளைப் பற்றவைக்கும் தீக்குச்சிகள். இல்லையா?

கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்யமாட்டியா? என்ற இந்தக் கேள்வியை, பல கோடி மக்கள், இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். நானும் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. ஏன்? எனக்கும் இதே பயம். விண்ணை நோக்கி நான் ஏவிவிடும் அந்தக் கேள்வி, மீண்டும் என்னைத் தாக்கும் அம்பாக மாறுமோ என்ற பயம்.

ஒரு சராசரி மனிதர் என்ற கோணத்தில் சிந்தித்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள், அமைதியாக, நாசரேத்தில், தானுண்டு, தன் வேலையுண்டு, தன் தாயுண்டு என்று இயேசு வாழ்ந்தபோது, அவரைச்சுற்றி நடந்த பல அநியாயங்கள், அவர் மனதில் கேள்விக்கணைகளை தைத்திருக்கும்.

அவரைப்போன்ற இளையோர் பலர், இந்த அநியாயங்களுக்கு விடைதேடி, புரட்சிக்குழுக்களை உருவாக்கியதையும், அக்குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார். அச்சிந்தனைகளின் விடையாக, அவர் எடுத்த முதல் முடிவு, மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு. அந்த முடிவோடு, அந்த முனைப்போடு, யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவுடன், திருவழிபாட்டு ஆண்டில், கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவுபெறுகிறது. மனிதகுலத்தை மீட்க, இறைவனுக்கு எத்தனையோ பல வழிகள் இருந்திருக்கும். வானிலிருந்தவண்ணம், அவர் மக்களைக் காக்க வழியிருந்தும், இயேசு, நம்மில் ஒருவராக தன்னையே இணைத்துக்கொண்டார். தான் காக்கவந்த மக்களில் ஒருவராக, இயேசு, தன்னையே கரைத்துக்கொண்டது, பல நூறு உன்னத உள்ளங்களுக்கு உந்துசக்தியாக அமைந்தது. அவர்களும், மக்களின் நல்வாழ்விற்காக பணியாற்ற, தங்களை அர்ப்பணித்த வேளையில், அம்மக்களில் ஒருவராக தங்களையே முற்றிலும் கரைத்துக்கொண்டனர். அவர்களில் ஒருவர், புனித டேமியன் தெ வூஸ்டர் (St Damien de Veuster).

1850ம் ஆண்டு, ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு, அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அந்தத் தீவுக்கு அனுப்பப்படுவது, ஏறத்தாழ மரணதண்டனை தீர்ப்புக்குச் சமம். ஏனெனில், அந்தத் தீவில், மருத்துவர், மருந்துகள், குடியிருப்பு என்று எதுவும் கிடையாது. அங்கு செல்லும் அனைவரும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கடும் குளிரிலும் துன்புற்று, விரைவில் சாகவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு அனுப்பப்பட்டனர்.

அத்தீவில், ஒரு சிற்றாலயத்தை நிறுவுவதற்கென, இளம் அருள்பணியாளர், டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், ஆயரால் அனுப்பப்பட்டார். அந்த இளையவர், தச்சுவேலையில் திறமை பெற்றவர் என்பதால், இப்பணிக்கென அனுப்பப்பட்டார். தன் 33வது வயதில் மொலக்காய் தீவை அடைந்தார், இளம் அருள்பணியாளர் டேமியன். 33 வயது நிறைந்தவர், தச்சு வேலை தெரிந்தவர், அருள்பணியாளர் என்று, பல கோணங்களில், அவர் இயேசுவின் பிரதிபலிப்பாக இருப்பதை நாம் உணரலாம். டேமியன் அவர்கள், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு அந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு, இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார்.

ஆயரின் அனுமதியுடன், அருள்பணி டேமியன் அவர்கள் அத்தீவில் தங்கினார். விரைவில், அவர், அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களுக்கு இல்லங்கள் அமைத்துத் தருவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஒரு சில மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பமான அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. 11 ஆண்டுகள் சென்றபின், ஒருநாள், அவர் குளிக்கச்சென்ற வேளையில், தன் கால்களைக் கொதிக்கும் நீரில் தவறுதலாக வைத்தார். அவரது கால்களில் கொப்பளங்கள் உருவாயின; ஆனால், அவர் அந்த வலியை உணரவில்லை. அன்று, அவர், தானும் தொழுநோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்தார்.

வழக்கமாக, அவர் திருப்பலியில் மறையுரை வழங்கும்போது, 'தொழுநோயுற்றோர்' என்று பொதுவாகக் குறிப்பிட்டுப் பேசுவார். தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அன்று, அவர் திருப்பலி நிறைவேற்றியபோது, "தொழுநோயாளிகளாகிய நாம்" என்று, அவர்களோடு தன்னை, முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் ஒரு தொழுநோயாளியாக அவர்கள் நடுவே உழைத்துவந்த அருள்பணி டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி தன் 49வது வயதில் இறைவனடி சேர்ந்தார். கொதிக்கும் நீரில் கால்களைப் பதித்து, அந்த வெப்பத்தை உணராதபோது, தானும் ஒரு தொழுநோயாளி என்பதை, அருள்பணி டேமியன் அவர்கள் உணர்ந்ததை, அவரது யோர்தான் அனுபவம் என்று எண்ணிப் பார்க்கலாம்.

இயேசு, யோர்தான் நதியில், மக்களோடு மக்களாய் தன்னைக் கரைத்துக்கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம், தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை. தந்தைமீது நம்பிக்கை கொண்டு, தன் பணியைத் துவக்க, இயேசு எடுத்து வைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்துவைத்தார் என்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. ஓடும் நீரில் நிற்கும்போது, நம் பாதங்களுக்குக் கீழ் பூமி நழுவிச்செல்வது போன்று நிலையற்ற ஓர் உணர்வைப் பெறுவோம்.

கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் நம்மைச் சுற்றி நிகழ்ந்தவை, நம்மை ஓடும் நீரில் நிற்கவைத்ததைப் போன்ற உணர்வைத் தந்திருக்கவேண்டும். கோவிட்-19 கொள்ளைநோயால் உருவான குழப்பங்கள் போதாதென்று, அதைச்சுற்றி நிகழ்ந்த அரசியல், பொருளாதார விளைவுகள், நிலையற்ற ஓர் உலகை உருவாக்கியுள்ளன.

இவ்வேளையில், யோர்தான் நதியில், ஓடும் நீரில் இறங்கத் துணிந்த இயேசு நமக்கு சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்:

ஓடும் நீரில் இறங்கி தன் பணிவாழ்வை இயேசு துவக்கியபோது, இனி தன் வாழ்வில் பல பாதுகாப்புகள் தன்னிடமிருந்து நழுவிச்செல்லும் என்பதை சொல்லாமல், சொன்னாரோ? தந்தையாம் இறைவனின் அன்பைத்தவிர, வேறு எதுவும் தனக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த, அவர், தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்துவைத்தாரோ?

ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு... ஓடும் நீரில் உயிர்கள் வாழ, வளர, வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப்போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்றுநீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தாரோ?

வாழ்வளிக்கும் சக்திபெற்ற நீரைக் குறித்து இன்றைய முதல் வாசகமும், பதிலுரைப்பாடலும் பேசுகின்றன. தன்னை ஒரு நீர்நிலையாக உருவகித்து, ஆண்டவர் விடுக்கும் அழைப்பை, இறைவாக்கினர் எசாயா இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;... எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். (எசா. 55:1,3)

இந்த அழைப்பை மீண்டும் வலியுறுத்தும்வண்ணம், "மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்" (எசா. 12:3) என்ற சொற்கள், நம் பதிலுரைப்பாடலாக ஒலிக்கின்றது.

யோர்தான் நதியில் இயேசு தன் திருமுழுக்கைத் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை, விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது.

தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும்போது, அவர்களை அரவணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும், அத்தகைய அரவணைப்பையும், ஆசீரையும் அனுபவித்திருக்கிறோம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க, தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்: "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." (மாற்கு 1:11)

"என் அன்பார்ந்த மகன் நீயே, மகள் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." (மாற்கு 1:11) என்ற வார்த்தைகளை, உள்ளார்ந்த பூரிப்புடன், உன்னத இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். அன்னையும் தந்தையுமான இறைவன், நம்மை வாரி அணைத்து, உச்சி முகந்து, இந்த அன்பு மொழிகளை, இந்த புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளிலும், நம் ஒவ்வொருவருக்கும் சொல்லட்டும்.

இறுதியாக அன்புள்ளங்களே, சிறப்பான ஒரு வேண்டுதலோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவுசெய்வோம். இன்னும் சிலநாள்களில் நாம் பொங்கல் விழாவைக் கொண்டாடவிருக்கிறோம். இவ்வேளையில், புது டில்லியைச் சுற்றி 40 நாள்களுக்கு மேலாகப் போராடிக்கொண்டிருக்கும் வேளாண் பெருமக்களை நினைவில் கொள்வோம். அனைத்து நாடுகளிலும், குறிப்பாக இந்தியாவில், கார்ப்பரேட் முதலைகளுடனும், அவர்களுக்குத் துதிபாடும் அரசுகளுடனும் போராடிவரும் விவசாயிகளுக்கு, வளமான, நிலையான எதிர்காலத்தை இறைவன் உருவாக்கவேண்டும் என்று இறைஞ்சுவோம்.

09 January 2021, 15:01