யோர்தான் நதிக்கரையோர திருவழிபாட்டில் பேராயர் Pizzaballa யோர்தான் நதிக்கரையோர திருவழிபாட்டில் பேராயர் Pizzaballa  

ஜோர்டன் நாட்டில், எருசலேம் முதுபெரும் தந்தையின் பயணம்

இந்த கோவிட்-19 கொள்ளைநோய்க் காலம், குடும்ப இறைவேண்டல்களையும், குடும்ப உறவுகளையும் பலப்படுத்தவேண்டிய காலம் – பேராயர் Pierbattista Pizzaballa

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜோர்டன் நாட்டில் மேய்ப்புப்பணி சார்ந்த இரு வார பயணத்தை மேற்கொண்டு வருகிறார், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாக  நியமிக்கப்பட்டபின், முதன் முறையாக ஜோர்டன் நாட்டிற்கு மேய்ப்புப்பணி சார்ந்த பயணம்  மேற்கொண்டுவரும் பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள்,  யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்குப்பெற்ற பகுதிக்கு, பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் திருப்பயணத்திற்கும் தலைமைதாங்கிச் சென்றார்.

கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, பொதுமக்கள் எவரும் பங்குபெற இயலாத நிலையிலும், இயேசுவின் திருமுழுக்கு கோவிலில், முதுபெரும்தந்தை ஆற்றிய திருப்பலி, கணனி வலைத்தொடர்புகள் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

ஜோர்டான் நாட்டின் கத்தோலிக்க, மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும், அந்நாட்டு சுற்றுலா அமைச்சகத்தின் பொதுச்செயலர் Imad Hijazin ஆகியோரும் கலந்துகொண்ட இத்திருப்பலியில் மறையுரை வழங்கிய முதுபெரும் தந்தை Pizzaballa அவர்கள், இந்த கோவிட்-19 கொள்ளைநோய்க் காலம், குடும்ப  இறைவேண்டல்களையும், குடும்ப உறவுகளையும், பலப்படுத்தவேண்டிய காலம் என .அழைப்புவிடுத்தார்.

முதுபெரும் தந்தை Pizzaballa அவர்கள், கணனி வலைத்தொடர்பு வழியாக சந்திப்பை மேற்கொண்டபோது, ஜோர்டன் நாட்டு மன்னர் அப்துல்லா அவர்கள், ஜோர்டன் நாட்டிற்கும், வத்திக்கானுக்கும், திருத்தந்தைக்கும் இடையே நிலவிவரும் ஆழ்ந்த உறவுகுறித்து மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், எருசலேமில், ஒன்றிப்பு வாழ்வுக்கென, முதுபெரும் தந்தை ஆற்றிவரும் சிறப்புப் பணிகள் குறித்து தன் பாராட்டுக்களையும்  வெளியிட்டார்.

இம்மாதம் 21ம் தேதிவரை ஜோர்டன் நாட்டில் மேய்ப்புப்பணி சார்ந்த பயணம் மேற்கொண்டுவரும் முதுபெரும் தந்தை Pizzaballa அவர்கள், ஜோர்டன் நாட்டு அருள்பணியாளர்கள், மற்றும், துறவிகளை, கணனி வலைத்தொடர்பு வழியாக சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன், அந்நாட்டில், எருசலேம் முதுபெரும் தந்தையின் தலைமையகத்தால் நடத்தப்படும் கல்விநிலையம் ஒன்றையும் பார்வையிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2021, 14:33