திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மகிழ்வின் மந்திரம்: சிறு பிள்ளைகளைப் போதகர்களாக...

இயேசு, தன்னை, இவ்வுலகப் பெற்றோரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தி, அவர்களுக்குப் பணிந்திருப்பதில் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் (அன்பின் மகிழ்வு 18)

மேரி தெரேசா: வத்திக்கான்

“தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்” (சீரா.3,3-4). இவ்வாறு திருவிவிலியத்தின் சீராக்கின் ஞானம் நூலின் பிரிவு 3ல், பிள்ளைகள், தாய் தந்தையரை மதிப்பதால் பெறுகின்ற நன்மைகள் பற்றிச் சொல்கின்றது (அன்பின் மகிழ்வு 17).  பிள்ளைகள், ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல, மாறாக, அவர்கள், முன்னெடுத்துச் செல்வதற்குரிய சொந்த வாழ்வைக் கொண்டிருக்கின்றனர் என்று, நற்செய்தி நமக்கு நினைவுறுத்துகின்றது. இயேசு, தன்னை, இவ்வுலகப் பெற்றோரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தி, அவர்களுக்குப் பணிந்திருப்பதில் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் (காண்க.லூக்.2:51). ஆயினும், பிள்ளைகள், தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் தீர்மானங்கள் மற்றும், அவர்களின் கிறிஸ்தவ அழைப்பு, இறையாட்சிக்காகப் பணியாற்றவும் வலியுறுத்துகிறது என்பதையும் இயேசு காட்டியுள்ளார் (காண்க.மத்.10:34-37; லூக்.9:59-62). இவ்வுலகக் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மிகப்பெரும் பணியை தான் கொண்டிருப்பதாக, இயேசுவே, தன் பன்னிரண்டாவது வயதில், மரியாவிடமும், யோசேப்பிடமும் கூறுகிறார் (காண்க லூக்.2:48-50). இவ்வாறு, குடும்பத்திற்குள்ளேயும்கூட அடுத்தவரின் தேவை இருப்பதை, ஓர் ஆழமான பிணைப்பு இருப்பதை, இயேசு காட்டுகிறார். “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” (லூக்.8: 21).  இருந்தபோதிலும், சிறு பிள்ளைகள் மீதுள்ள அக்கறையையும் இயேசு காட்டுகிறார். ஏனெனில், பழங்கால அண்மை கிழக்கு நாடுகளில், சிறு பிள்ளைகள் எந்தவித குறிப்பிட்ட உரிமைகளின்றியும், குடும்பச் சொத்து இன்றியும்கூட, பொருள்களாக நோக்கப்பட்டனர். இயேசு, அவர்களின் சிறப்பை எந்த அளவிற்கு எடுத்துரைத்தார் என்றால், அவர்கள் மற்றவர் மீது கொண்டிருக்கும் எளிய நம்பிக்கை மற்றும், இயல்பான தன்மையால், அவர்களை ஆசிரியர்களாக குறிப்பிடுகிறார். “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்”.  (மத்.18: 3-4).  (அன்பின் மகிழ்வு 18)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்வு (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடல் எண் 18ல், இவ்வாறு, சிறு பிள்ளைகள் பற்றிய இயேசுவின் கண்ணோட்டம் கூறப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2021, 14:19