பேரக் குழந்தையுடன் தாத்தா, பாட்டி பேரக் குழந்தையுடன் தாத்தா, பாட்டி 

மகிழ்வின் மந்திரம் : பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல்

பெற்றோர், ஒரு குடும்பத்தின் அடிக்கல் என்றால், குழந்தைகள், அவ்வில்லத்தின், உயிருள்ள கற்கள் (அன்பின் மகிழ்வு 14)

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நீங்களும் உங்கள் மனைவியும்' என்ற தலைப்பில் ஒரு சில எண்ணங்களை முதலில் பகிர்ந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து அவரது சிந்தனை குழந்தைகள் பக்கம் திரும்புகிறது.

மீண்டுமொருமுறை திருப்பாடலை நோக்கி நம் சிந்தனைகளை திருப்பினால், அங்கு, சாப்பாட்டு மேசையில் கணவனும் மனைவியும் அமர்ந்திருக்க, உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர் (தி.பா. 128:3), என கூறப்படுவதைக் காண்கிறோம். பெற்றோர், ஒரு குடும்பத்தின் அடிக்கல் என்றால், புனித பேதுரு தன் முதல் திருமடலில் கூறுவதுபோல், குழந்தைகள், அவ்வில்லத்தின், குடும்பத்தின், உயிருள்ள கற்கள் (1 பேதுரு 2:5). பழைய ஏற்பாட்டில், அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள, ‘கடவுள்’ (யாவே, ஆண்டவர்) என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, ‘குழந்தை’ (ben, மகன்) என்பதாகும்.  குழந்தையை, மகனை, குறிப்பிட எபிரேய மொழியில் பயன்படுத்தப்படும் இந்த ben என்ற வார்த்தை, ‘கட்டியெழுப்புதல்’ என்ற எண்ணத்துடன் தொடர்புடையது. இதனால்தான், குழந்தைகள் எனும் கொடையைப்பற்றிப் பேசும் திருப்பாடல், ‘வீட்டைக் கட்டியெழுப்பும்’ உருவகத்தோடு, அதனை விளக்குவதைக் காண்கிறோம்.  

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்,

அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்;...

பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்;

மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசு.

இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர்

வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.

அவற்றால் தம் அம்பறாத் தூணியை

நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்;

நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது

அவர் இகழ்ச்சியடையமாட்டார். (தி.பா. 127:1, 3-5).

இந்த உருவகமானது, அக்கால சமுதாயத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இருப்பினும், மீட்பு வரலாறு முழுவதும், குழந்தைகள், தலைமுறை, தலைமுறையாக,  குடும்பங்கள் தொடர்ந்து செல்வதன் அடையாளமாக உள்ளனர். (அன்பின் மகிழ்வு  14)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2021, 14:16