மெழுகுதிரியால் ஒளியேற்றப்பட்ட  எயிட்ஸ் குறியீடு மெழுகுதிரியால் ஒளியேற்றப்பட்ட எயிட்ஸ் குறியீடு 

உலக எயிட்ஸ் தின செபவழிபாடு

HIV நோய்க்கிருமிகளாலும், கோவிட்-19 கொள்ளைநோயாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நாம் எவ்விதம் உதவ முடியும்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 1, எயிட்ஸ் விழிப்புணர்வு உலக நாளை முன்னிட்டு, வலைத்தொடர்பு வழியாக செபவழிபாடு ஒன்றை இச்செவ்வாய்க்கிழமையன்று நடத்தியுள்ளது, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகளின் அவை.

HIV நோய்க்கிருமிகளாலும், கோவிட்-19 கொள்ளைநோயாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நாம் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்து சிந்தித்துச் செயல்பட, இந்த செப வழிபாடு உதவும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கணனி வலைத்தொடர்பு செப வழிபாட்டில் பங்குபெற்றோர், இன்றைய சமுதாயத்தின் நோய் சூழல்கள் முன்வைக்கும் சவால்களை எவ்வாறு ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் வெற்றிகொள்வது என்பது குறித்து சிந்திக்க அழைப்பு விடப்பட்டனர்.

HIV நோய்க்கிருமிகள் குறித்து அறிய வந்ததிலிருந்து இதுவரை எயிட்ஸ் நோய்க்குப் பலியாகியுள்ள 3 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்காகவும், HIV நோய்க்கிருமிகளுடன் இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏறக்குறைய 4 கோடி மக்களுக்காகவும் இந்த வலைத்தொடர்பு செபவழிபாட்டில் செபிக்கப்பட்டது.

எயிட்ஸ் நோயாளிகளிடையே பணியாற்றும் மத குழுக்கள், இவர்களோடு ஒருமைப்பாட்டை வெளியிட்டு சேவையாற்றுவோர் என அனைவருக்கும், இவ்வுலக எயிட்ஸ் நாளில், உலக கிறிஸ்தவ சபைகளின் அவையால் சிறப்பான விதத்தில் செபிக்கப்பட்டது. (ICN) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2020, 15:18