ஜப்பானில், முகக் கவசத்துடன் தோன்றும் கிறிஸ்மஸ் தாத்தாவின் பொம்மை ஜப்பானில், முகக் கவசத்துடன் தோன்றும் கிறிஸ்மஸ் தாத்தாவின் பொம்மை  

கிறிஸ்தவ சபைகளின் உலக அவை - கிறிஸ்மஸ் செய்தி

ஆதிக்கம் செலுத்திவந்த உரோமையப் பேரரசின் விளிம்பில் இருந்த ஒரு கிராமத்தில், வலுவற்ற ஒரு சூழலில் பிறந்த சிறு குழந்தையின் வழியே, மீட்பு இவ்வுலகிற்கு வந்தது என்ற உண்மை, நமக்கு நம்பிக்கையைக் கொணரவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடி காலத்தில், கிறிஸ்துவின் பிறப்பு, நம்பிக்கை தரும் நல்லதொரு செய்தியாக இவ்வுலகை வந்தடைகிறது என்று, WCC எனப்படும் கிறிஸ்தவ சபைகளின் உலக அவை, சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

WCC அவையின் இடைக்கால பொதுச்செயலர், பேராசிரியர் Ioan Sauca அவர்கள் வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டுக்குரிய கிறிஸ்மஸ் செய்தியில், கிறிஸ்தவர்களும், உலக மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மனித வரலாற்றின் மிகவும் கடினமான ஒரு காலத்தில் வாழும் நாம், நம்பிக்கையிழந்து விரக்தியடைய பல காரணங்கள் இருந்தாலும், கிறிஸ்துவின் பிறப்பு என்ற நற்செய்தி கொணரும் நம்பிக்கை நமக்கு ஆறுதல் அளிக்கிறது என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமுதாய தூரம், குறைவான எண்ணிக்கையில் பங்கேற்பு, முகக்கவசங்கள் என்று பல்வேறு வழிகளில் நம் வழிபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதும், இந்தக் கொள்ளைநோயினால் இறந்தோரின் நினைவுகள் இன்னும் சுமையாக உள்ளன என்பதும் இவ்வாண்டின் கிறிஸ்மஸ் விழாவை பாதித்துள்ளன என்பதை, பேராசிரியர் Sauca அவர்கள் தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

உடல்நலக் குறைவு மட்டுமல்லாமல், பொருளாதாரச் சீர்குலைவு, பசி, வேலையின்மை என்று, பல தளங்களில், இந்தக் கொள்ளைநோய், நம்மைப் பாதித்துள்ள வேளையில், போரும் வன்முறைகளும் மக்களை தொடர்ந்து வதைத்துவருவது கொடுமையான உண்மை என்று பேராசிரியர் Sauca அவர்கள், இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதிக்கம் செலுத்திவந்த உரோமையப் பேரரசின் விளிம்பில் இருந்த ஒரு கிராமத்தில், வலுவற்ற ஒரு சூழலில் பிறந்த சிறு குழந்தையின் வழியே, மீட்பு இவ்வுலகிற்கு வந்தது என்ற உண்மை, நமக்கு மீண்டும் நம்பிக்கையைக் கொணரவேண்டும் என்று பேராசிரியர் Sauca அவர்களின் செய்தி கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2020, 15:19