சிரியாவின் அலெப்போ நகரில் கிறிஸ்மஸ் மரம் - கோப்புப் படம் 2018 சிரியாவின் அலெப்போ நகரில் கிறிஸ்மஸ் மரம் - கோப்புப் படம் 2018 

சிரியாவில் எளியமுறையில் கிறிஸ்மஸ்

சிரியாவில் போர்க் காலத்தில் குண்டுகளால் உயிரிழந்த மக்களைவிட, தற்போதைய பொருளாதாரத் தடைகள் மற்றும், Caesar Act என்ற கூடுதல் தடையால், மக்கள் அதிகம் துன்புறுகின்றனர் மற்றும், உயிரிழக்கின்றனர் – ஆயர் Abou Khazen

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டில் கிறிஸ்மஸ் பெருவிழா, பெத்லகேம் குடிலில் திருக்குடும்பம் இருந்ததை நினைவுகூரும் வகையில், அலங்காரங்கள் அதிகமின்றி, எளிமையாகச் சிறப்பிக்கப்படும் அதேநேரம், விசுவாசிகளின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என்று, அலெப்போ இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறினார்.

சிரியாவின் வடபகுதியிலுள்ள பெரிய நகரமான அலெப்போவில் திருவருகைக் காலத்தின் சூழல் குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய ஆயர் Abou Khazen அவர்கள், போர்க் காலத்தில் குண்டுகளால் உயிரிழந்த மக்களைவிட, தற்போதைய பொருளாதாரத் தடைகளால் மக்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்று கூறினார்.

சிரியாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாக, 2016ம் ஆண்டு டிசம்பரில் அலெப்போ நகர், விடுவிக்கப்படும்வரை, அது பெரிய போர்க்களமாக இருந்தது என்றும்,  தற்போது அந்நகரின் கிறிஸ்தவர்களுக்கு, இயேசுவின் பிறப்பு எப்போதும், நம்பிக்கை மற்றும், மகிழ்வின் ஊற்றாக உள்ளது என்றும் ஆயர் Abou Khazen அவர்கள் கூறினார்.

சிரியாவில் கிறிஸ்மஸ் பெருவிழா எளிமையாக இருப்பதற்கு, கோவிட்-19 பெருந்தொற்று பரவல் உருவாக்கியுள்ள அச்சம் முக்கிய காரணமல்ல, மாறாக, அமெரிக்க ஐக்கிய நாடும் ஐரோப்பாவும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் உருவாக்கியுள்ள வறிய நிலையே அதற்கு காரணம் என்று, ஆயர் Abou Khazen அவர்கள் கூறினார்.

இந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமன்றி, சிரியாவின் பாதுகாப்பு பணிகள், இராணுவம் ஆகிய அனைத்து துறைகளிலும் அமெரிக்க ஐக்கிய நாடு விதித்துள்ள Caesar Act என்ற கட்டுப்பாட்டால், மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆயர் Abou Khazen அவர்கள், சிரியா நாட்டிற்காக குரல் எழுப்பும் வெகு சிலரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒருவர் என்றுரைத்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2020, 14:13