தேடுதல்

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறைக் குறிக்க ஏற்றப்பட்டுள்ள இரு மெழுகுதிரிகள் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறைக் குறிக்க ஏற்றப்பட்டுள்ள இரு மெழுகுதிரிகள் 

திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

மாற்கு நற்செய்தியின் “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்ற அறிமுக வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள 'நற்செய்தி' என்ற சொல்லை, சற்று ஆழமாகச் சிந்திக்க முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் – 2ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 6ம் தேதி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், புனித நிக்கோலஸ் திருநாள் சிறப்பிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் விழாக்காலத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும், 'கிறிஸ்மஸ் தாத்தா', ஆங்கிலத்தில், 'சாந்தா கிளாஸ்' (Santa Claus) என்று அழைக்கப்படுகிறார். 'புனித நிக்கோலஸ்' என்று பொருள்படும், 'Saint Nicholas', என்ற பெயரே, 'Santa Claus'ஆக மாறியுள்ளது. குழந்தைகள் விரும்பும் பரிசுகளைக் கொணரும் கொடைவள்ளலாக, இப்புனிதர் கொண்டாடப்படுகிறார்.

டிசம்பர் 6, இஞ்ஞாயிறன்று, புனித நிக்கோலஸ் திருநாளைச் சிறப்பிக்கும் வேளையில், குழந்தைகள் மட்டுமல்லாமல், நாம் அனைவருமே, குழந்தை உள்ளத்துடன், நல்லவை இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கிறோம். நாம் விரும்பாத 'கொடையாக', நம்மீது திணிக்கப்பட்டுள்ள கொள்ளைநோயை, இறைவன், இவ்வுலகிலிருந்து முற்றிலும் நீக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

கோவிட்-19 என்ற கிருமி உருவாக்கிய கொள்ளைநோய் நம்மை வதைத்துவருவது போதாதென்று, இந்த நோயைக் குறித்து இதுவரை வெளிவந்த, இன்னும் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கும் செய்திகளும், வதந்திகளும் நம்மை, கூடுதலாக வதைத்து வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி, இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை, கோவிட்-19 என்ற பெயரில், எண்ணற்ற செய்திகளும், வதந்திகளும், நம்மை, மீண்டும், மீண்டும் சுற்றிச்சுற்றி வந்து, வதைக்கின்றன. இந்த நோய் ஆரம்பமான இடம், இந்த நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை, அந்த எண்ணிக்கையை வெளியிடாமல் நடைபெற்ற தகனங்கள், இந்த நோயின் இரண்டாம் அலை, நோய் தடுப்பு மருந்து உருவாக்கும் பக்கவிளைவுகள் என்று... ஒவ்வொரு நிலையிலும், வெளியான செய்திகளும், வதந்திகளும் நம்மை செயலற்ற நிலைக்கும், விரக்திக்கும் உள்ளாக்கி வருகின்றன.

நம்மிடையே நிலவும் மனத்தளர்வையும், விரக்தியையும் தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகளும், அவர்களுக்குத் துணைபோகும் ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முரண்பட்ட கருத்துக்களை, செய்திகள் என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றன.

ஊடகங்கள் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வழிகளைப் புரிந்துகொள்ளவும், சமூக வலைத்தளங்கள் வழியே நாம் செய்திகளை எவ்வாறு பகிர்ந்துகொள்கிறோம் என்பதைப்பற்றி சிந்திக்கவும், திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு, நமக்கொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்ற இந்த அறிமுகச் சொற்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. மாற்கு நற்செய்தியின் அறிமுக வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள 'நற்செய்தி' என்ற சொல்லை, சற்று ஆழமாகச் சிந்திக்க முயல்வோம்.

'நற்செய்தி' என்பதைக் குறிப்பிட, நற்செய்தியாளர் மாற்கு அவர்கள், 'euangélion' என்ற கிரேக்கச் சொல்லை பயன்படுத்தியுள்ளார். இந்தச் சொல், 'நல்ல செய்தியைச் சொல்பவர்' என்ற பொருளையும் உள்ளடக்கியது. 'நற்செய்தி' என்பது, ஒரு கருத்தோ, அல்லது, ஏதோ ஒரு காலத்தில், எங்கோ ஓரிடத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று குறிப்போ அல்ல. மாறாக, 'நற்செய்தி' என்பது, தலைசிறந்த ஒருவரை, கடவுளின் தூதரைப் பற்றியது என்பதை நற்செய்தியாளர் மாற்கு அவர்கள், உணர்த்துகிறார். எனவே, அவர், ஒரு ‘நற்செய்தி’யை அறிமுகம் செய்கிறார் என்பதைவிட, ‘நல்ல செய்தியாக வாழ்ந்த ஒருவரை’ அறிமுகம் செய்கிறார் என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

நல்ல செய்தியாக வாழ்ந்தவர் இயேசு. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும், நம்மைப் போலவே, தன்னைச் சுற்றிலும் ஒவ்வொரு நாளும் மோசமானச் செய்திகளைக் கேட்டும், பார்த்தும் வளர்ந்தவர். சிரியா, ஈராக், பாலஸ்தீனம் என்று நாம் இன்று பேச ஆரம்பித்த உடனே, அங்கிருந்து நல்லது எதுவும் வராது என்று சொல்லும் அளவுக்கு, மோசமானவற்றையே கேட்டு நாம் அலுத்துப்போய்விட்டோம். நமக்கே இந்த நிலை என்றால், அங்கு வாழ்பவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். அங்கு வாழ்பவர்கள், தங்கள் நம்பிக்கையை எல்லாம் இழந்து, நொறுங்கிப் போயுள்ளனர் என்று, அப்பகுதியில் பணியாற்றும் திருஅவைத் தலைவர்கள் அவ்வப்போது நமக்கு நினைவுறுத்தி வருகின்றனர்.

இயேசு வாழ்ந்த காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும், அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்டவர் இயேசு. எனினும், அச்செய்திகளின் சுமையால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்று சக்தியாக, நம்பிக்கை தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார் இயேசு.

நல்ல செய்திகளே நிரந்தரமானவை, மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை, மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையேப் பணயம் வைத்து உழைத்தவர் இயேசு. இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையையும் அவர் தந்தார்.

இயேசு என்ற நற்செய்தி வாழ்ந்ததால் புண்ணியம் பெற்ற அந்தப் புனிதப் பூமியில், அவரைப் போலவே, இன்றும், நல்ல செய்திகளை வாழ்ந்துவரும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர், மருத்துவரான, இசெல்டின் அபுலாய்ஷ் (Izzeldin Abuelaish)  அவர்கள்.

போர் என்ற பெயரால் வரைமுறையற்ற வன்முறையை வளர்த்துவரும் மனிதர்கள் நடுவில், "இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை" என்ற நற்செய்தியை விதைப்பவர்களில் ஒருவர், மருத்துவர் அபுலாய்ஷ். அவர் எழுதிய “I Shall Not Hate: A Gaza Doctor’s Journey” அதாவது, "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்: காசாப் பகுதி மருத்துவரின் பயணம்" என்ற நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட வேளையில், (24-26, மே, 2014) அவருக்கு, பரிசாக வழங்கப்பட்டது. அந்நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், நமக்கு, பல பாடங்களைச் சொல்லித் தருகின்றன.

முதலில், மருத்துவர் அபுலாய்ஷ் அவர்களைப் பற்றி ஒரு சில விவரங்கள்:

இஸ்ரேல் இராணுவத்தினரும், பாலஸ்தீனப் போராளிகளும், பல ஆண்டுகளாக, மோதல்களில் ஈடுபட்டுவரும் காசாப் பகுதியில், Jabalia என்ற முகாமில் வளர்ந்தவர், இசெல்டின் அபுலாய்ஷ். தன் மருத்துவப் படிப்பை முடித்தபின்னர், இஸ்ரேல் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றச் சென்ற முதல் பாலஸ்தீனியர் இவரே. இவ்விரு நாடுகளிடையே பாலங்களை உருவாக்க தான் செய்யும் சிறு முயற்சி அது என்று கூறினார். 2009ம் ஆண்டு, இஸ்ரேல் இராணுவம், காசாப் பகுதியில் மேற்கொண்ட ஒரு தாக்குதலில், மருத்துவர் அபுலாய்ஷ் அவர்களின் இல்லம் தாக்கப்பட்டு, Bessan (21); Mayar (15); Aya (13) என்ற அவரது மூன்று மகள்களும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்குப் பின்னரும், ஒருசில ஆண்டுகள், அவர், இஸ்ரேல் பகுதிக்குச் சென்று மருத்துவப் பணிகள் ஆற்றிவந்தார். இவரது இல்லம் தாக்கப்பட்ட நிகழ்வு, தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது. இருப்பினும், இன்றுவரை, மருத்துவர் அபுலாய்ஷ் அவர்கள், இஸ்ரேல் இராணுவமோ, ஏனையக் குழுக்களோ, தன் துன்பங்களுக்குக் காரணம் என்று, பழிசுமத்தாமல் வாழ்ந்துவருகிறார்.

"மற்றவர்களின் மீது பழிசுமத்துவதற்கு நாம் பயன்படுத்தும் சக்தியை, நல்லது செய்வதற்குப் பயன்படும் சக்தியாக மாற்றினால், நாம் முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு" என்று மருத்துவர் அபுலாய்ஷ் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இராணுவத்தினரின் தாக்குதலில் தன் இல்லத்தையும், மூன்று மகள்களையும் பறிகொடுத்த மருத்துவர் அபுலாய்ஷ் அவர்கள், தன் வேதனையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினார். நம்மிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும்விட, மிக வலிமையான ஆயுதம் கல்வியே என்று கூறும் மருத்துவர் அபுலாய்ஷ் அவர்கள், அந்தக் கல்வியை, மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் பெண்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு, கொல்லப்பட்ட தன் மூன்று மகள்களின் நினைவாக, "Daughters for Life", அதாவது, "வாழ்வுக்காக மகள்கள்" என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நடத்திவருகிறார். "இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் முயற்சிகளுக்கு, என்னுடைய மூன்று மகள்களின் உயிர்கள், இறுதிப் பலிகளாக அமைந்தன என்பதை அறிந்தால், என் மனம் அமைதிபெறும்" என்று மருத்துவர் அபுலாய்ஷ் அவர்கள், "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்" என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஐந்து முறை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவர் அபுலாய்ஷ் அவர்கள், ‘மத்தியக்கிழக்கின் மார்ட்டின் லூத்தர் கிங்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடப்பதெல்லாம் அழிவு மட்டுமே என்பதைச் செய்திகளாக வெளியிட்டுவரும் ஊடகங்களை நம்புவதைக் காட்டிலும், அப்பகுதிகளிலும் 'நற்செய்தி'களாக வாழ்பவர்கள் உள்ளனர் என்பதை, அப்பகுதியில் வாழ்ந்த நற்செய்தியான இயேசுவின் வழியாகவும், மருத்துவர் அபுலாய்ஷ் போன்று, அங்கு தொடர்ந்து வாழும் நல்லவர்கள் வழியாகவும் அறிய முயல்வோம்.

இந்த நற்செய்திகளை பரப்புவதற்கு ஊடகங்கள் முன்வராது. இருப்பினும், நல்லவை இவ்வுலகில் நடக்கத்தான் செய்கின்றன என்ற நம்பிக்கையை வளர்ப்பது, நாம் ஆற்றக்கூடிய முதல் 'நற்செய்தி'ப்பணி. அமைதியின் இளவரசர் வருவதை எதிபார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக ஆயிரமாயிரம் உள்ளங்கள் நம்மைச் சுற்றி வாழ்கின்றனர் என்ற 'நற்செய்தி'யை, நம்மால் முடிந்தவரை இவ்வுலகில் பரப்ப முயற்சிகள் மேற்கொள்வோம்.

வாழ்வில் நாம் நல்லவை சிலவற்றை அனுபவிக்கும்போது, அதை மற்றவர்களுக்குச் சொல்வதில்லையா? நாம் படித்த ஒரு நல்ல நூல், நாம் சுவைத்த ஒரு நல்ல உணவு, நாம் பயன்பெற்ற ஒரு நல்ல மருந்து, அல்லது, நாம் கண்டு இரசித்த ஓர் இடம், ஒரு திரைப்படம்... என்று, நாம் பெற்ற நல்ல அனுபவத்தை மற்றவர்களும் பெறுவதற்கு பரிந்துரைக்கிறோம். அழைப்பு விடுக்கிறோம். அல்லது, குறைந்தபட்சம், நம் அனுபவத்தை ஒரு 'நல்ல செய்தி'யாக அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? அல்லது, அந்த 'நற்செய்தி', எப்போதாவது ஒருநாள், தூசி துடைத்து, புரட்டப்படும் ஒரு நூலாக, நம் வாழ்வின் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறதா?

விடைகள் தேடுவோம்! .... நற்செய்தியாக வாழ முற்படுவோம்!

அமைதியின் இளவரசரான இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் நாம், அண்மைய ஓராண்டாளவாக நல்ல செய்திகளை மிக அரிதாகக் கேட்டு வருகிறோம். இவ்வேளையில், இன்றைய வழிபாட்டின் முதலிரு வாசகங்களில் நாம் காணும் ஆறுதல் தரும் ஒரு சில வரிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

இறைவாக்கினர் எசாயா 40: 1-2, 10-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது.... இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்."

புனித பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3: 9,13

ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2020, 14:31