புனித  Laurent Imbert புனித Laurent Imbert 

சிங்கப்பூர்: நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 200ம் ஆண்டு

1821ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, MEP எனப்படும், பிரெஞ்ச் வெளிநாட்டு மறைப்பணி சபையின் அருள்பணியாளர் Laurent Ilbert அவர்கள், சிங்கப்பூரில் முதன் முதலில் தன் மறைப்பணியை ஆரம்பித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிங்கப்பூர் கத்தோலிக்கர், தங்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், மறைப்பணி ஆர்வத்தை உயிர்த்துடிப்புள்ளதாக வளர்க்கவும் வேண்டும் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர், அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் இருநூறாம் யூபிலி ஆண்டு நிகழ்வுகளை, டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, இணையம் வழி திருப்பலி நிறைவேற்றி ஆரம்பித்துவைத்த, சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள், உயிரூட்டமுள்ள தலத்திருஅவையை உருவாக்குவதற்கு, அனைத்து கத்தோலிக்கரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த துவக்க நிகழ்வின் ஒரு கட்டமாக, புதிய யூபிலி இணையதளம் மற்றும், யூபிலி ஆண்டு இலச்சினை திறந்து வைக்கப்பட்டன. மேலும், இந்த சிறிய தென்கிழக்கு ஆசிய நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை, சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள நல்தாக்கங்களை விளக்கும் ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.

‘நம்பிக்கையோடு சுடர்விடுங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் யூபிலி ஆண்டின் நிறைவு, எட்டு நாள் விழாக் கொண்டாட்டங்களோடு, 2021ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி நிறைவடையும்.

1819ம் ஆண்டில், Sir Stamford Raffles என்ற பிரித்தானியர், பிரித்தானிய பேரரசின் வர்த்தக இடமாக, சிங்கப்பூரை உருவாக்கினார். அதற்கு இரு ஆண்டுகள் சென்று, 1821ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, MEP எனப்படும், பிரெஞ்ச் வெளிநாட்டு மறைப்பணி சபையின் அருள்பணியாளர் Laurent Imbert அவர்கள், சிங்கப்பூரில் தன் மறைப்பணியை ஆரம்பித்தார். அதுவே, சிங்கப்பூரில் கத்தோலிக்கத் திருஅவை உருவாக அடித்தளமானது. அருள்பணியாளர் Laurent Imbert அவர்கள், கொரியா நாட்டின் Saenamteoவில், 1839ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். 1984ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி, திருத்தந்தை புனித யோவான் பவுல் அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்திய 103 கொரிய மறைசாட்சிகளுள் இவரும் ஒருவர்.

தற்போது சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்திலுள்ள மூன்று இலட்சத்து அறுபது ஆயிரம் கத்தோலிக்கர், 32 பங்குத்தளங்களில் வாழ்கின்றனர்.

பல இனம் மற்றும், பல மதங்களைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் 56 இலட்சம் மக்களில் 76 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சீனர்கள். மேலும், 15 விழுக்காட்டு மலாய் இன மக்களும், 7.4 விழுக்காட்டு இந்தியர்களும் உள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2020, 14:54