திருஅவையின் 51வது திருத்தந்தை, புனித சிமாக்கஸ் திருஅவையின் 51வது திருத்தந்தை, புனித சிமாக்கஸ்  

திருத்தந்தையர் வரலாறு – புனித சிமாக்கஸ் (Symmachus,498-514)

திருத்தந்தை சிமாக்கஸ் அவர்கள், தன் காலத்தில் பல கோவில்களை புதுப்பித்ததோடு ஆப்ரிக்க திருஅவைக்கு பல நிதியுதவிகளையும் செய்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையின் 51வது திருத்தந்தையாக 498ம் ஆண்டு பதவியேற்ற புனித சிமாக்கஸ் (Symmachus) அவர்கள், 16 ஆண்டு காலம் திருஅவையை வழிநடத்தியபின், 514ல் இறைபதம் சேர்ந்தார். இத்தாலியின் சர்தேனியா (Sardenia) தீவைச் சேர்ந்த இத்திருத்தந்தை, உரோம் நகரில் திருமுழுக்குப் பெற்று, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளராகத் திருநிலைபடுத்தப்பட்டார். திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் அவர்கள் (Anastasius) இறந்தவுடன், இலாத்தரன் பெருங்கோவிலில் 498ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ந் தேதி, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இவர், உரோம் ஆயராகத் தேர்வு செய்யப்பட்டார். உரோமைய செனட் அவையின் பெரும் பகுதியும், இதற்கு தன் அங்கீகாரத்தை வழங்கியது. எல்லாமே சுலபமாக நடந்துவிட்டால், வாழ்வில் சுவை என்பது இருக்காதுதானே. நம் பாப்பிறை Symmachus அவர்கள், உரோம் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட அன்று மாலையே, செனட் அவை அங்கத்தினர் Festus என்பவரின் தூண்டுதலின்பேரில், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர் சிலர், மேரி மேஜர் பெருங்கோவிலில் கூடி, Laurentius என்பவரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். தற்போது யார் உண்மையான திருத்தந்தை, யாரின் கீழ் விசுவாசிகள் செல்வது என்ற கேள்வி எழுந்தது. இத்தாலியின் மன்னராக, அப்போது Ravenna நகரில் இருந்த அரசர் Thedoric முன்னிலையில் இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. பெரும்பான்மை அருள்பணியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான Symmachus அவர்களே, பாப்பிறை பதவிக்கு உரியவர் என தீர்ப்பு வழங்கினார் மன்னர். Laurentiusம் இதனை ஏற்றுக்கொண்டார். திருத்தந்தைக்கு எதிராக தன்னை திருத்தந்தையாக அறிவிப்பவர்கள் எவரும் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என உரோம் திருஅவை அதிகாரிகள் குழு தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், Laurentius ஐ அன்புடன் அரவணைத்து, அவருக்கு இத்தாலியின் Nocera மறைமாவட்ட ஆயர் பதவியை வழங்கினார் பாப்பிறை Symmachus.  பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆம், தற்காலிகமாக மட்டுமே முடிவுக்கு வந்தது. ஏனெனில், பாப்பிறை பதவியை தங்களுக்கு ஆதரவாக, அதாவது, Byzantine வழிபாட்டுமுறைக்கு ஆதரவாக  மாற்ற விரும்பிய செனட் அவை அங்கத்தினர்கள் Festusம், Probinusம், திருத்தந்தை Symmachus அவர்களை பதவியிறக்கம் செய்யும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தனர். 501ம் ஆண்டு அதற்கான ஒரு வாய்ப்பும் வந்தது. அதாவது, அவ்வாண்டு மார்ச் மாதம் 25ந்தேதி, பழைய உரோமைய நாட்காட்டியை பின்பற்றி, திருத்தந்தை, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாட, Byzantine வழிபாட்டுமுறை திருஅவையோ, புதிய நாட்காட்டியுடன் ஏப்ரல் 22ந்தேதி அதனை சிறப்பித்தது. இதை மிகப்பெரும் பிரச்சனையாக மாற்றி, ஆயர் Laurentius அவர்களின் ஆதரவாளர்கள், மன்னர் Thedoricன் முன் கொண்டு சென்றனர். அது மட்டுமல்ல, திருஅவைச் சொத்துக்களை அழிப்பதாகவும் திருத்தந்தை Symmachus அவர்கள் மீது குற்றம் சுமத்தினர். அத்தோடு நிற்காமல், திருத்தந்தை Symmachus ன் இருப்பிடமான  இலாத்தரன்  பசிலிக்காவையும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

திருத்தந்தை மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என அவரை ரவென்னா நகருக்கு வரச் சொன்னார் மன்னர். திருத்தந்தையும் ரவென்னாவுக்குச் செல்லும் வழியில், ரிமினியில் தங்கியிருந்தபோது, தனக்கு எதிரான தீர்ப்பு மன்னரால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என்பதை அறிய வந்து, அங்கு செல்லாமலேயே உரோம் நகர் திரும்பிவிட்டார்., ஏற்கனவே, தன்னை எதிர்த்தவர்களால், இலாத்தரன் பெருங்கோவில் ஆக்ரமிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது, உரோம் நகர் எல்லைக்கோட்டைக்கு வெளியே இருந்த புனித பேதுரு கோவிலருகே வந்து தங்கினார் திருத்தந்தை சிமாக்கஸ். இப்பிரச்சனைகள் குறித்து ஆயர் பேரவையைக் கூட்ட, மன்னர் உத்தரவிடவேண்டும் எனவும், இந்த கூட்டத்திற்கு மன்னர் ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் எனவும் திருத்தந்தைக்கு எதிரானவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆயர் பேரவை கூட்டத்திற்கு இசைவளித்த திருத்தந்தை, மன்னரின் பிரதிநிதிக்கு மறுப்பு சொன்னார். இருப்பினும், மன்னர், வட இத்தாலியின் Altinum ஆயர், பேதுரு என்பவரை அனுப்பி வைத்தார். அதில் எம்முடிவும் காணப்படவில்லை, இதனால் 502ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி இரண்டாவது கூட்டம் Sessorian பெருங்கோவிலில் (‘யெருசலேமின் திருச்சிலுவை’ என்ற உரோம் பெருங்கோவில்) நடப்பதாக திட்டமிடப்பட்டது. பெருங்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு திருத்தந்தை Symmachus அவர்கள்  சென்றுகொண்டிருந்த வழியில் தாக்கப்பட்டார். அவரோடு சென்றவர்கள் சிலர் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர். காயமடைந்த திருத்தந்தை சிமாக்கஸ், புனித பேதுரு கோவிலுக்கு தப்பியோடவேண்டியிருந்தது,

இதற்கிடையே, ஆயர் பேரவைக் கூட்டத்தில் குழுமியிருந்த ஆயர்களும் திருத்தந்தை குற்றமற்றவர் என்றே இறுதியில் தீர்ப்பு வழங்கினர். திருத்தந்தைக்கும் திருஅவைக்கும் ஆதரவாக இயற்றப்பட்ட அறிக்கையில், 75 ஆயர்கள் கையெழுத்திட்டனர். இதில் மிலான், மற்றும், ரவென்னா நகர் ஆயர்களும் அடங்குவர். ஆயர்களின் தீர்மானத்தை மன்னர் Theodoric ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆயர் Laurentius உரோம் நகர் திரும்பி இலாத்தரன் பெருங்கோவிலிலும், திருத்தந்தை சிமாக்கஸ், புனித பேதுரு கோவிலுக்கு அருகிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலை ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் நீடித்தது.  இதற்கிடையில்,  அலெக்சாந்திரியாவில் இருந்து வந்த திருத்தொண்டர் Dioscurus என்பவர், தன் செல்வாக்கை பயன்படுத்தி, மன்னரை சந்தித்து, அவரை திருத்தந்தை சிமாக்கசுக்கு சார்பான முடிவுகளை எடுக்க வைத்தார். இப்போது ஆயர் Laurentianன் ஆதரவாளர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் குறைந்தது. அதுவும், அடுத்த திருத்தந்தை Hormisdasன் காலத்தில் முற்றிலுமாக திருஅவையோடு ஒப்புரவானது.

திருத்தந்தை Symmachus அவர்கள், தன் காலத்தில் பல கோவில்களைப் புதுப்பித்ததோடு ஆப்ரிக்க திருஅவைக்கு பல நிதியுதவிகளையும் செய்துள்ளார். இவர், புனிதர்கள் பேதுரு, பவுல், மற்றும் இலாரன்ல் ஆகியோரின் பெயர்களில் இருந்த பெருங்கோவில்களின் அருகே ஏழைகளுக்கான புகலிடங்களையும் கட்டிக்கொடுத்தார். இத்திருத்தந்தை சிமாக்கஸ், புனித பேதுரு கோவிலுக்கு இரு பக்கங்களிலும் ஆயர் இல்லங்களைக் கட்டினார். இவர் இறைபதம் அடைந்தபோது, புனித பேதுரு கோவிலிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு அடுத்துவந்த திருத்தந்தை புனித Hormisdas குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2020, 15:16