தேடுதல்

அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இஸ்தான்புல் (கான்ஸ்தாந்திநோபிள்) தொன்மை ஆலயம் அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இஸ்தான்புல் (கான்ஸ்தாந்திநோபிள்) தொன்மை ஆலயம் 

திருத்தந்தையர் வரலாறு: அதிகார தலையீடுகளும் மோதல்களும்

மன்னர் Basiliscus, தன் அதிகாரத்தை திருஅவைக்குள் அதிகம் அதிகமாக புகுத்த விரும்பினார். இந்த நிலையில் திருத்தந்தை புனித Simplicius இறைபதம் சேர்ந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பெரிய லியோ அவர்கள் காலத்தில், 449ம் ஆண்டு, Ephesusல் இடம்பெற்ற ஆயர்கள் மாநாட்டில் திருத்தந்தையின் சார்பில் பிரதிநிதியாக கலந்துகொண்டார் தலைமை திருத்தொண்டர் Hillarius. இம்மாநாட்டில் திருப்பீடத்தின் அதிகாரம் குறித்தும், அதன் தலைமைத்துவ பண்பு குறித்தும் உறுதியான கருத்துக்களை எடுத்துரைத்ததோடு, கான்ஸ்தாந்திநோபிளின் பேராயர் Flavian அவர்களுக்கு கீழ்ப்படிய மறுத்த சில ஆயர்களையும் வன்மையாகக் கண்டித்தார். இதனால் இவருக்கு எதிராகக் கிளர்ச்சியும் வன்முறைகளும் துவங்கின. திருத்தந்தையின் பிரதிநிதியாகச் சென்ற இவர், திருத்தந்தையிடம், அங்கு விவாதிக்கப்பட்டவைகளை எடுத்துச் சொல்லவேண்டுமே என்பதற்காக, அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த தலைமை திருத்தொண்டர் ஹிலாரியுஸ் அவர்கள்தான், 461ம் ஆண்டு திருத்தந்தை பெரிய லியோ அவர்கள் உயிரிழந்தபோது, புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்புதிய திருத்தந்தை முதலாம் ஹிலாரியுஸும், திருத்தந்தை பெரிய லியோ அவர்கள் போல் திருஅவையை ஒரே குடையின்கீழ் வைத்திருக்க உதவும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக பாடுபட்டு உழைத்தார்.

திருச்சட்டங்கள் எச்சூழலிலும் மீறப்பட முடியாதவை என்பதில் உறுதியாக நின்றார் திருத்தந்தை ஹிலாரியுஸ். Gaul, மற்றும், ஸ்பெயின் திருஅவைகளில் இடம்பெற்ற எதிர்ப்புகளை திறம்படக் கையாண்டு வெற்றிகண்டார் இத்திருத்தந்தை. இஸ்பெயின் திருஅவையில், திருஅவை அதிகாரிகளின் பணியமர்த்தல்கள், மற்றும், இடமாற்றல்கள் குறித்து, மோதல் நிலை உருவாகியபோது, 465ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி, உரோம் நகரின் மேரி மேஜர் பெருங்கோவிலில், ஆயர் மாநாட்டை நடத்தி, அதிகார மோதல்களை அகற்ற தெளிவான திருச்சட்ட விதிகளைக் கொணர்ந்தார் திருத்தந்தை ஹிலாரியுஸ். விசுவாசத்தைப் பாதுகாக்க உழைத்த இவர், உரோம் நகரில் பல கோவில்களையும் கட்டினார். மக்களுக்கென பொது குளியலறைகள், நூலகங்கள் ஆகியவைகளையும் கட்டிக்கொடுத்தார் நம் திருத்தந்தை முதலாம் ஹில்லாரியுஸ். ஆறு ஆண்டுகள், மூன்று மாதங்கள், பத்து நாட்கள் பதவி வகித்தபின், 468ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 28ந்தேதி காலமானார் திருத்தந்தை ஹிலாரியுஸ்.

இத்தாலியின் சர்தேஞ்சா தீவைச் சேர்ந்த திருத்தந்தை ஹிலாரியுஸ் அவர்களின் மரணத்திற்குப்பின் திருத்தந்தையானவர் உரோம் நகருக்கு வெகு அருகாமையிலுள்ள தீவொலி(Tivoli) என்ற குன்று நகரைச் சேர்ந்த புனித Simplicius. இவர் காலத்தில் மேற்கத்திய பேரரசர்கள் பலவீனமானவர்களாகவே இருந்தனர். வெளிநாடுகளின் படையெடுப்பும் இத்தாலியில் இருந்தது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த Flavius Odoacer என்ற படைத் தளபதி,  இத்தாலியின் இளம் பேரரசரான Romulus Augustulusஐ பதவியிறக்கி இத்தாலியின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார். இந்த ஆட்சி மாற்றம், உரோம் நகரில் எவ்வித தாக்கத்தையும் கொணரவில்லை. ஏனெனில், மன்னர் Odoacer, கத்தோலிக்க திருஅவைக்கு உரிய மரியாதையைக் கொடுத்தே ஆட்சி புரிந்தார். உரோம் நகரின் நிர்வாகத்திலும் அவர் எந்த மாற்றத்தையும் கொணரவில்லை. ஆகவே ஆட்சி மாற்றம் என்பது உரோம் நகரில் உணரப்படவில்லை.

இந்த வேளையில், Constantinople பகுதியில் புதிய ஒரு முரண்பாடு உருவெடுத்தது. அதற்கு ஒரு சிறிய முன்னுரையை நாம் வழங்கவேண்டியுள்ளது. திருஅவையில், உலக ஆயர் மாநாடு, அதாவது, பொதுச்சங்கம் முதலில் 325ம் ஆண்டு நீசேயாவிலும், 381ம் ஆண்டு கான்ஸ்தாந்திநோபிளிலும், மூன்றாவதாக 431ம் ஆண்டு எபேசு நகரிலும், 4வதாக 451ம் ஆண்டு கால்செதோன் நகரிலும் இடம்பெற்றன. இப்படியே தொடர்ந்து, 21வது பொதுச்சங்கம் 1962ம் ஆண்டு வத்திக்கானில் துவங்கி 1965ம் ஆண்டு நிறைவுற்றது நாம் அறிந்ததே. இந்த பொதுச்சங்கங்கள் பல்வேற கூறுகளைக் குறித்து விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. 4வது கால்செதோன் பொதுச்சங்கத்தில் Constantinople தலத்திருஅவைக்கு, உரோமைத் திருஅவைக்கு அடுத்தபடியான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. ஆனால், Byzantine வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தைக்கு, இத்தனை அதிகாரங்களைக் கொடுப்பதை பலர் எதிர்த்ததால் இவ்வதிகாரம் Constantinople பேராயரால் செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. ஏனெனில் Constantinopleக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டபோது, ஏனைய முதுபெரும்தந்தையர்களின் அதிகாரம் இதன்வழி இயல்பாகவே கட்டுப்படுத்தப்பட்டது. திருத்தந்தை Simplicius பதவியேற்ற காலத்தில் Constantinople பேராயர், தனக்கு கால்செதோன் பொதுச்சங்கம் வரையறுத்த அதிகாரங்களைச் செயல்படுத்த விரும்பினார். பேரரசர் லியோவும் அதற்கு ஆதரவளித்து, திருத்தந்தை Simplicius அவர்களிடம், இதற்கென பரிந்துரைத்தார். ஆனால், திருத்தந்தையோ இதனை ஏற்க மறுத்தார்.  

இந்த வேளையில் 476ம் ஆண்டு, கான்ஸ்தாந்திநோபிளில் இடம்பெற்ற புரட்சியால்,  பேரரசர் Geno வெளியேற்றப்பட்டு, பேரரசர் முதலாம் லியோவின் மனைவியின் சகோதரர் Flavius Basiliscus, Byzantine அரசாட்சியைக் கைப்பற்றினார். திருத்தந்தையுடன் திருமறைக்கோட்பாடுகளில் முரண்பட்டு வெளியேற்றப்படடிருந்த Alexandriaவின்  பிதாப்பிதா Timotheus ஐயும்  Antiochia வின் பிதாப்பிதா Peter Fullo வையும் மீண்டும் பதவியில் வந்து அமருமாறு அழைத்தார் மன்னர் Basiliscus. அது மட்டுமன்றி, கால்செதோன் பொதுச்சங்கத்தின் தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார். வெளியேற்றப்பட்ட முதுபெரும் தந்தையர்களை மீண்டும் ஏற்கவும், கால்செதோன் பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை ஒதுக்கவும், மன்னர் Basiliscus மேற்கொண்ட முயற்சிகளுக்கு Constantinople  ஆயர் Acaciusம், அருள்பணியாளர்களும், பொது மக்களும் அதரவு அளிக்கவில்லை. இந்த பிரச்சனை சில காலம் தொடர்ந்தது. மன்னர் Basiliscus, தன் அதிகாரத்தை திருஅவைக்குள் அதிகம் அதிகமாக புகுத்த விரும்பினார். ஆனால், அவரால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. இந்த நிலையில் 483ம் ஆண்டு மார்ச் 10ம் நாள், திருத்தந்தை புனித Simplicius இறைபதம் சேர்ந்தார்.

இத்தகைய ஒரு பின்னணியில், அடுத்து திருத்தந்தையாக வந்தார், மூன்றாம் Felix. 483 முதல் 492 வரை, திருஅவை தலைமைப் பதவியில் இருந்து, திருஅவையை வழிநடத்திய இத்திருத்தந்தை குறித்து வரும் வாரத்தில் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2020, 15:38