பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான் அவர்களுடன் அந்நாட்டு கிறிஸ்தவ பிரதிநிதிகள் -   05.07.2019 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடன் அந்நாட்டு கிறிஸ்தவ பிரதிநிதிகள் - 05.07.2019 

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் பற்றி பரிசீலனை செய்ய

தெய்வநிந்தனை சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுடன், பாகிஸ்தான் கத்தோலிக்க மற்றும், கிறிஸ்தவ சபைகளின் ஆயர்கள், அரசு உயர் அதிகாரியை சந்தித்தனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெறும் கட்டாய மதமாற்றம், மற்றும், சிறுமிகள் திருமணம்பற்றி பரிசீலனை செய்வதற்கென்று, சிறப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளது, தலத்திருஅவை.

பாகிஸ்தானில் மத விவகாரம் குறித்தவைகளில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அவர்களின் சிறப்பு உதவியாளராகவும், அந்நாட்டின் Ulema அவையின் தலைவருமான, Hafiz Tahir Ashrafi அவர்கள், டிசம்பர் 16, இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த தகவலை பதிவுசெய்துள்ளார்.

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம், மற்றும், சிறுமிகள் திருமணம் செய்யப்படுவது குறித்த விவகாரங்களால், சிறுபான்மையினர் பேரச்சம் கொள்வதை தவிர்க்கும் நோக்கத்தில், அவை குறித்து பரிசீலனை செய்வதற்கென சிறப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று, Ashrafi அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், கத்தோலிக்க மற்றும், கிறிஸ்தவ சபைகளின் ஆயர்கள், Ashrafi அவர்களைச் சந்தித்து, தெய்வநிந்தனை சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று குறை கூறியதையடுத்து, Ashrafi அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கராச்சியின் இரயில்வே காலனி பகுதியில் வாழ்ந்த 13 வயது நிறைந்த Arzoo Raja என்ற சிறுமி, கடத்தப்பட்டு, கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டு, 44 வயது நிறைந்த Syed Ali Azhar என்ற முஸ்லிமுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

அச்சிறுமியின் பெற்றோர், சிந்து உயர்நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, அந்த திருமணம் செல்லாது என அறிவித்து, அச்சிறுமி தன் இல்லத்திற்குத் திரும்புவதற்கு நீதிமன்றம் உதவியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2020, 14:00