இராஞ்சியில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு ஆதரவாக மக்கள் இராஞ்சியில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு ஆதரவாக மக்கள்  

அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு மிதியடி, உறுஞ்சு குழாய்

இந்தியாவில், 2019ம் ஆண்டில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஐந்து தடுப்புக்காவல் மரணங்கள் என்ற நிலையில், 1,731 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், 1,606 மரணங்கள் நீதிமன்ற காவலிலும், 125, காவல்துறை காவலிலும் இடம்பெற்றுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பார்க்கின்சன்ஸ் நோய் உட்பட, பல்வேறு உடல்நலக் குறைகளால் துன்புறும்வேளை, ஏறத்தாழ ஒரு மாதம் சென்று, அவருக்கு குளிர்கால ஆடைகள் உட்பட, காலணி,  உறுஞ்சு குழாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்று, ஊடகங்கள் கூறியுள்ளன.

கடந்த அக்டோபர் 9ம் தேதியிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், முதுமையின் காரணமாகவும், பார்க்கின்சன்ஸ் உடல் நோயின் காரணமாகவும் பிணையலில் வருவதற்கு விடுத்துவரும் விண்ணப்பத்திற்கு, தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுவரும்வேளையில், தண்ணீர் மற்றும் ஏனைய திரவங்களைப் பருகுவதற்கு உறுஞ்சு குழாயைப் பயன்படுத்த, கடந்த நவம்பர் 6ம் தேதியிலிருந்து அனுமதி விண்ணப்பிக்கப்பட்டு வந்தது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில், ஏழை பழங்குடி இன மக்களுக்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்ததே அவர் செய்த ஒரே குற்றம் என்று, அவரது வழக்கறிஞர் ஒருவர், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளைப் பதிவுசெய்ய கருவிகள்

மேலும், இந்தியாவில் இடம்பெறும் அனைத்து கைதுகள் மற்றும், குற்ற விசாரணைகள், டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்படவேண்டும் என்று, இந்திய உச்ச நீதிமன்றம், காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதை, தலத்திருஅவை குழுக்கள் வரவேற்றுள்ளன.

டிசம்பர் 2, இச்செவ்வாயன்று, இந்திய உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும், மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில், குடிமக்களை கைது செய்வதற்கு அதிகாரம் கொண்டிருக்கும் அனைத்து விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில், புகைப்பட மற்றும், பதிவுசெய்வதற்குரிய கருவிகளைப் பொருத்துமாறு கூறியுள்ளது.

கைது செய்யப்படும் மக்களின் உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் முறையில், அரசுகள், இந்த ஆணையை கண்டிப்பாகச் செயல்படுத்தவேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையின்போது உரிமைகள் மீறப்பட்டால், அது குறித்து குடிமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, இயேசு சபை வழக்கறிஞர் அருள்பணி சகாய ஃபிலோமின் ராஜ் அவர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என்று கூறினார்.

இந்தியாவில், 2019ம் ஆண்டில், நாளொன்றுக்கு, ஏறத்தாழ, ஐந்து தடுப்புக்காவல் மரணங்கள் என்ற அளவில், 1,731 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், 1,606 மரணங்கள், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தோருக்கும், 125 மரணங்கள், காவல்நிலையங்களிலும் இடம்பெற்றுள்ளன என்று, சித்ரவதைக்கு எதிரான தேசிய அமைப்பு ஒன்று, அண்மையில் கூறியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2020, 14:49