எத்தியோப்பியாவின் Tigray பகுதி திருஅவை எத்தியோப்பியாவின் Tigray பகுதி திருஅவை 

எத்தியோப்பிய வடபகுதி திருஅவை பணியாளர்கள் குறித்து செய்தியில்லை

எத்தியோப்பியாவின் Tigray பகுதியில் இடம்பெறும் மோதல்களால், இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் சூடானில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எத்தியோப்பியாவின் Tigray மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்களால், அப்பகுதி ஆயர், அருள்பணியாளர்கள், மற்றும், துறவிகள் குறித்து தகவல் பெறமுடியாமல் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாகவும் தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எத்தியோப்பியாவின் வடபகுதியில் உள்ள Tigray மாநிலத்தின் கத்தோலிக்க கீழை வழிபாட்டுமுறை ஆயர் Tesfaselassie Medhin, அவருடன் பணியாற்றிய அருள்பணியாளர்கள், துறவிகள், மற்றும் 25 சலேசிய சபை மறைப்பணியாளர்கள் குறித்து எவ்வித செய்தியும் பெறமுடியாமல் உள்ளது என தெரிவித்த தலத்திருஅவை வட்டாரங்கள், மருந்துகள், உணவு, எரிபொருள் என அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட முடியாத நிலையிலிருக்கும் Tigray பகுதி மக்கள் அனுபவிக்கும் துயர்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன.

Tigray மாநிலப் பகுதியின் சில இடங்கள் எத்தியோப்பிய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளபோதிலும், எத்தியோப்பியாவின் சூடான், மற்றும், எரித்ரியா எல்லைப்பகுதியில் இராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதாக அப்பகுதியின் அரசியல் வல்லுநர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவின் வடபகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அவசரத் தேவை அங்கு உள்ளதாகவும் உரைத்தார், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் Michelle Bachelet.

எத்தியோப்பியாவின் Tigray பகுதியில் இடம்பெறும் மோதல்களால், இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் சூடானில் அடைக்கலம் தேடியுள்ளனர். டிசம்பர் மாத இறுதிக்குள் இவ்வெண்ணிக்கை இரண்டு மடங்காகும் என ஐ.நா. நிறுவனம் கணித்துள்ளது. ஏறக்குறைய ஒன்பது இலடசம் பேர், அதிலும் குறிப்பாக பெரும்பான்மையாக, சிறார்கள் பெரும் துயர்களை சந்தித்து வருகின்றனர். (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2020, 14:48