சிரியாவின் அலெப்போ நகர் ஆர்மேனியன் கோவிலில் உரை வழங்கும் கர்தினால் மாரியோ செனாரி - கோப்புப் படம் 2019 சிரியாவின் அலெப்போ நகர் ஆர்மேனியன் கோவிலில் உரை வழங்கும் கர்தினால் மாரியோ செனாரி - கோப்புப் படம் 2019 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு கிறிஸ்தவர்கள் திரும்பிவர...

சிரியா, ஈராக், லெபனான், ஜோர்டான் உட்பட பல்வேறு நாடுகளின் மனிதாபிமானச் சூழல்கள் குறித்து விவாதித்த, வத்திக்கானின் இணைய வழி மெய்நிகர் கருத்தரங்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியகிழக்கு நாடுகளின் அமைதி முயற்சிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் ஊக்கமளித்துவருவதாக, மீண்டுமொருமுறை எடுத்துரைத்தார் சிரியா நாட்டிற்கான திருப்பீடத்தூதர், கர்தினால் Mario Zenari.

மத்தியகிழக்கு நாடுகளின் இன்றைய  நிலைகளை மையப்படுத்தி, இம்மாதம் 10ம் தேதி, மனித உரிமைகள் நாளன்று இடம்பெற்ற இணைய வழி கருத்தரங்கு குறித்து எடுத்துரைத்த கர்தினால் Zenari அவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள் மீண்டும் தங்களிடங்களில் குடியமர, அகில உலக சமுதாயம் உதவிட வேண்டும் என இக்கருத்தரங்கின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்ததாக தெரிவித்தார்.

போரால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் மத்தியக் கிழக்குப்பகுதியில் சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் மட்டுமல்ல, லெபனான், ஜோர்டான் உட்பட பல்வேறு நாடுகளின் மனிதாபிமானச் சூழல்கள் குறித்து இந்த இணைய வழி மெய்நிகர் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாக கர்தினால் Zenari அவர்கள் எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கு குறித்து வத்திக்கான் செய்திகளுடன் தன் கருத்துக்களைப்  பகிர்ந்துகொண்ட கர்தினால் Zenari அவர்கள், சிரியா நாட்டில் இடம்பெறும் மோதல்களால், கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பெருமளவில் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், ஏறக்குறைய 83 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும் கவலையை வெளியிட்டார்.

சிரியா நாட்டில் பொருளாதார மீட்பு திட்டங்கள் மட்டுமல்ல, மீள்கட்டுமானத்திற்குரிய அறிகுறிகள்கூட தென்படவில்லை என்று கூறிய கர்தினால் Zenari அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் இருப்பதால், உள்நாட்டு மக்கள் மட்டுமல்ல, சொந்தநாட்டிற்குத் திரும்ப ஆவல்கொள்ளும் புலம்பெயர்ந்தோரும், தடைகளையும், சிரமங்களையும், சந்தித்துவருவதாகத் தெரிவித்தார்.

நம்பிக்கை எனும் உணர்வு சிரியா நாட்டில் குறைந்துவருவதால், நாட்டிலிருந்து வெளியேற விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தன் கவலையை வெளியிட்டார், சிரியாவிற்கான திருப்பீடத்தூதர் கர்தினால் Zenari.

மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் கிறிஸ்தவ சமுதாயங்கள், தங்கள் நாடுகளின் முன்னேற்றத்தில் குறிப்பிட்ட பங்கை ஆற்றியுள்ளதால், தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவர அனுமதிக்கப்படுவதன் வழியாக, மத்தியக் கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக, கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள் வழியாக உதவமுடியும் என்பதை திருத்தந்தை இக்கருத்தரங்கில் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார் கர்தினால்.

கத்தோலிக்க மனிதாபிமான நிறுவனங்களின் உதவிகள் சிரியா நாட்டில் பெருமளவில் தொடர்ந்துகொண்டிருந்தாலும், விவசாயத்தையும், தொழிற்கூடங்களையும் முன்னேற்ற வேண்டியதும், கல்விக்கூடங்கள்,மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கிராமங்கள் என அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் உள்ளது என்றார் கர்தினால் Zenari.

இந்த கிறித்துமஸ் காலத்தின் குளிரில், வீடுகளை கதகதப்பாக மாற்ற  போதிய எரிசக்தி எண்ணெய் இன்மையாலும், உண்பதற்கு போதிய உணவு இன்மையாலும், துன்புறும் சிரியா மக்களுக்கு விரைவில் அமைதியும், வளமும் திரும்பவேண்டும் என தான் ஆவல் கொள்வதாக மேலும் கூறினார் கர்தினால் Zenari.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2020, 15:19