திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ  

நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கும் திருத்தூதுப் பயணம்

கொள்ளைநோயால் மட்டுமின்றி, நிலையற்ற அரசியல் சூழல்களாலும் துன்புறும் ஈராக் மக்களுக்கும், அவர்களைப்போல் துன்புறும் சிரியா, லெபனான் மக்களுக்கும், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் மாபெரும் ஆறுதலாக விளங்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்து தன் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்ட அந்நாட்டு கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், திருத்தந்தையின் வரவு, தங்கள் நாட்டிற்குத் தேவையான நம்பிக்கையை வழங்கும் என்று கூறினார்.

திருத்தந்தையின் வருகை ஒரு பெரும் கொடையாக...

2021ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி முதல் 8ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த கர்தினால் சாக்கோ அவர்கள், பெரும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்துவரும் ஈராக் மக்களுக்கு திருத்தந்தையின் வருகை ஒரு பெரும் கொடையாக அமையும் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் செல்லுமிடங்களில் எல்லாம், அமைதியையும், உடன் பிறந்த உணர்வையும் நிலைநாட்டி வருவதால், அவர், ஈராக் நாட்டிலும், அவற்றை உறுதிசெய்வார் என்று தான் நம்புவதாக, கர்தினால் சாக்கோ அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் வருகை கிறிஸ்தவர்களை தங்கவைக்கும்

மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருவதால், அவர்களில் பலர் வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் சாக்கோ அவர்கள், திருத்தந்தையின் வருகை, கிறிஸ்தவர்களை தங்கள் சொந்த ஊர்களிலேயே தங்கும்படி விடுக்கப்படும் ஓர் அழைப்பாக விளங்கும் என்று கூறினார்.

கொள்ளைநோயால் மட்டுமின்றி, நிலையற்ற அரசியல் சூழல்களாலும் துன்புறும் ஈராக் மக்களுக்கும், அவர்களைப்போல் துன்புறும் சிரியா, லெபனான் மக்களுக்கும், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் ஒரு மாபெரும் ஆறுதலாக விளங்கும் என்று, கர்தினால் சாக்கோ அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் வருகை - ஈராக் அரசுத்தலைவர்

திருத்தந்தையின் வருகையைக் குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள ஈராக் அரசுத்தலைவர், Barham Salih அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, ஈராக்கில் வாழும் அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கு அமைதியின் செய்தியைக் கொணரும் என்றும், நீதியையும், அமைதியையும் விரும்பும் ஈராக் நாட்டின் விழுமியங்களுக்கு இப்பயணம் பெரியதொரு உந்துசக்தியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கிய நெருக்கடிகளின் காரணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15 மாதங்களுக்குப் பிறகு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணம் இது என்பதும், ஈராக் நாட்டிற்குச் செல்லும் முதல் திருத்தந்தை இவரே என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2020, 15:25