லூர்து நகர் திருத்தலத்தின் 70வது புதமையைப் பெற்ற அருள்சகோதரி Bernadette Moriau திருத்தந்தையைச் சந்தித்தபோது.... லூர்து நகர் திருத்தலத்தின் 70வது புதமையைப் பெற்ற அருள்சகோதரி Bernadette Moriau திருத்தந்தையைச் சந்தித்தபோது.... 

விவிலியத்தேடல்: இயேசு ஆற்றிய புதுமைகள் – மீள்பார்வை 2

உலகை வியக்கவைக்கும் வண்ணம் ஒருவர் உடல் நலம் பெறுவது, புதுமைதான். ஆனால், உடல் நலம் பெறாத ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் குறைபாடுகளையும் கடந்து, இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதை, இன்னும் சிறந்த புதுமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: இயேசு ஆற்றிய புதுமைகள் – மீள்பார்வை 2

டிசம்பர் 21, இத்திங்களன்று, வானில் 'கிறிஸ்மஸ் விண்மீன்', தெரியும் என்ற தலைப்புடன் செய்திகள் வெளிவந்தன. சூரியனைச் சுற்றிவரும் வியாழன், சனி ஆகிய இரு கோள்களும் ஒன்றன்மீது ஒன்று அமர்ந்திருந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில் இவ்விரு கோள்களுக்கும் இடையே உள்ள தூரம், 735 மில்லியன் கி.மீ. அதாவது, 73 கோடியே 50 இலட்சம் கி.மீ. என்று இருந்தாலும், பூமியிலிருந்து காண்பவர்களுக்கு, அவை ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருந்ததைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. அத்தோற்றத்தை, 'கிறிஸ்மஸ் விண்மீன்' என்று ஊடகங்கள் கூறின.

கிறிஸ்மஸ் விண்மீன் கீழ்த்திசை ஞானிகளுக்குத் தோன்றியதை, ஒரு புதுமை என்று சொல்கிறோம். ஆனால், வான்வெளி ஆய்வாளர்களோ, கீழ்த்திசை ஞானிகளுக்குத் தோன்றிய விண்மீன் ஒரு புதுமை அல்ல என்றும், தற்போது நிகழ்ந்துள்ள வியாழன்-சனி கோள்களின் சந்திப்பு, கி.மு. 7ம் ஆண்டில் நிகழ்ந்ததென்றும் சொல்கின்றனர். பொதுவாகவே, கிறிஸ்மஸ் காலத்தையொட்டி சொல்லப்படும் பல கதைகளை, நாம் புதுமை என்ற கண்ணோட்டத்தில் காணும்போது, இந்தக் காலம், மென்மையான உள்ளுணர்வைத் தருகிறது.

"நேர்மறையாய் சிந்திப்பதால் விளையும் சக்தி" - "The Power of Positive Thinking" என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய Norman Vincent Peale அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து பேசுகையில், "உலகத்தின் மீது வீசப்படும் ஒரு மந்திரக்கோல் போல் கிறிஸ்மஸ் விழா வருகிறது. இந்த மந்திரக்கோல் வீசப்பட்டதும், உலகமெல்லாம் மென்மையாக, இன்னும் அழகாக மாறிவிடுகிறது" என்று கூறியுள்ளார். "எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை" (லூக்கா 2:10) கொணர்ந்த இயேசுவின் பிறப்பை, இவ்வெள்ளியன்று கொண்டாடுகிறோம். இவ்வேளையில், நம்மைச் சூழ்ந்துள்ள இந்தக் கொடிய கொள்ளைநோயின் இருளையும் தாண்டி, மகிழ்வின் ஒளி மக்களனைவரையும் அடையவேண்டும் என்ற புதுமைக்காகக் காத்திருக்கிறோம். இத்தருணத்தில், இயேசுவின் புதுமைகளைப்பற்றிய நம் தேடல் தொடரின் நிறைவு முயற்சியில் நாம் ஈடுபட்டிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது.

அறிவியலில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக எண்ணிவரும் நம் தலைமுறையினருக்கு, 'புதுமை' என்ற சொல், குழந்தைப்பருவத்திற்குப் பொருத்தமான ஒரு சொல்லாக தெரிகிறது. இருப்பினும், நம் நடுவே, புதுமைகள் பல வடிவங்களில் தொடர்கின்றன என்பதைக் காண நம் மனக்கண்கள் திறந்திருக்கவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில், அன்னை மரியாவின் பெயராலும், புனிதர்களின் பெயராலும் நிறுவப்பட்டுள்ள திருத்தலங்களில், புதுமைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இத்திருத்தலங்களில் புகழ்பெற்றது, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள திருத்தலம். 1858ம் ஆண்டு முதல், பக்தர்களை தன் வசம் ஈர்த்துவரும் அன்னை மரியாவின் திருத்தலத்தில், 7000த்திற்கும் அதிகமான புதுமைகள் நிகழ்ந்துள்ளதாக, அத்திருத்தலத்தின் அலுவலகத்தில் மக்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், இவற்றில் 70 புதுமைகளே, இதுவரை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 70வது புதுமையென்று அறிவிக்கப்பட்ட நிகழ்வு, புதுமைகளைக் குறித்த நம் எண்ணங்களை இன்னும் தெளிவாக்க உதவியாக இருக்கும்.

தண்டுவடத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால், படிப்படியாக முடக்குவாதமுற்று, 1980ம் ஆண்டு முதல், சக்கர நாற்காலியில் வாழ்ந்துவந்தவர், அருள்சகோதரி Bernadette Moriau. இவர், 2008ம் ஆண்டு, ஜூலை மாதம், லூர்து நகர் திருத்தலத்திற்குச் சென்ற வேளையில், அங்கு நடந்ததை அவர் சொல்வதாகவே கேட்போம்: “அன்று, அத்திருத்தலத்தில், புனித பெர்னதெத், அன்னை மரியாவை, காட்சியில் கண்ட அந்த கெபிக்கு முன் செபித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அன்னை மரியா, புனித பெர்னதெத் ஆகியோரின் பிரசன்னத்தை சிறப்பான முறையில் என்னால் உணரமுடிந்தது. அவ்வேளையில், நான் எந்த ஒரு புதுமைக்காகவும் குறிப்பாக செபிக்கவில்லை, மாறாக, என் உடல்நலக் குறையோடு, வாழ்வுப் பயணத்தை நம்பிக்கையோடு தொடர்வதற்குத் தேவையான அருளுக்காக செபித்தேன். கெபியிலிருந்து புறப்பட்ட வேளையில், எனக்குள் ஒருவகை புத்துணர்வு எழுந்ததைப்போல் உணர்ந்தேன். என் அறைக்குத் திரும்பியதும், அதுவரை என் இடுப்புக்குக் கீழே போடப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை கழற்றிவைக்கும்படி எனக்குள் ஒரு குரல் கேட்டது. நான் அவற்றை அவிழ்த்து வைத்தபின், என்னால், சக்கர நாற்காலியைவிட்டு எழுந்து நிற்கமுடிந்தது. அடுத்து, என்னால் நடக்கவும் முடிந்தது" என்று, 79 வயதான அருள்சகோதரி பெர்னதெத் அவர்கள் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் பலர், அருள்சகோதரி பெர்னதெத் அவர்களை சோதித்தனர். அவருக்கு நிகழ்ந்துள்ள மாற்றத்திற்கு மருத்துவ அறிவுகொண்டு எந்த விளக்கமும் தரஇயலாது என்று கூறினர். இது நடந்து, 10 ஆண்டுகள் சென்று, அருள்சகோதரி பெர்னதெத் அவர்களுக்கு நிகழ்ந்தது ஒரு புதுமை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது..

லூர்து அன்னை திருத்தலம் அமைந்துள்ள அந்த மறைமாவட்டத்தின் ஆயர் Nicolas Brouwet அவர்கள், 2018ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, அத்திருத்தலத்தின் 160வது ஆண்டு நிறைவு நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், அருள்சகோதரி பெர்னதெத் அவர்கள் குணம்பெற்றதை, அத்திருத்தலத்தின் 70வது புதுமையாக அறிவித்தார். இதை அறிவித்த வேளையில், ஆயர் Nicolas Brouwet அவர்கள், கூறிய சொற்கள், புதுமைகளைக் குறித்து இன்னும் சில தெளிவுகளை வழங்குகின்றன.

"இந்தச் செய்தியை நாம் பெரும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இறையருள் என்ற கடலின் காணக்கூடிய அடையாளங்களாக, இத்திருத்தலத்தின் புதுமைகள் அமைந்துள்ளன. இப்புதுமைகளையும் தாண்டி, நம் வாழ்வில் இறைவன் செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கை, நாம் ஒவ்வொருநாளும் அனுபவிக்கக்கூடிய நிரந்தரப் புதுமை" என்று ஆயர் கூறினார்.

லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்குச் செல்லும் மக்கள் அனைவருமே, தாங்கள் விரும்பிக்கேட்கும் புதுமைகளைப் பெறுவதில்லை. அவர்களில் பலர், உடல்நலம் பெறாமல் திரும்பியிருந்தாலும், உள்ளத்தில் இன்னும் கூடுதலாக நம்பிக்கை பெற்று, தங்கள் வாழ்வைத் தொடர்ந்திருப்பர் என்று நாம் நம்பலாம். 70வது புதுமையைப் பெற்ற அருள்சகோதரி பெர்னதெத் அவர்களும், தன் முடக்குவாதத்திலிருந்து குணம் பெற்றிருக்காவிடினும், அவர், தன் குறைபாட்டுடன் வாழ்வை நடத்தத் தேவையான அருளைப் பெற்றிருப்பார். அவர் அன்று, அன்னை மரியாவின் கெபியில் வேண்டிக்கொண்டதும் அந்த அருளுக்காகத்தானே! உலகை வியக்கவைக்கும் வண்ணம் ஒருவர் உடல் நலம் பெறுவது, புதுமைதான். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் குறைபாடுகளையும் கடந்து, இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதை, குணமடையும் புதுமையைவிட, இன்னும் சிறந்த புதுமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

2017ம் ஆண்டு டோனல்ட் ஹால்ஸ்ட்ராம் (Donald Haalstrom) என்ற மறைப்போதகர், "புதுமைகளின் காலம் முடிந்துவிட்டதா?" என்ற தலைப்பில் வழங்கிய உரையின் ஒரு சில எண்ணங்களை சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஷாஸ்ட்டா (Shasta) மலைச்சரிவில், கிளார்க் பாலெஸ் (Clark Fales) என்பவருக்கு ஏற்பட்ட விபத்தையும், அதைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அவருக்கு நடந்த பல அற்புத நிகழ்வுகளையும் விவரித்த டோனல்ட் அவர்கள், அந்த உரையின் பிற்பகுதியில், கிளார்க் பாலெஸ் அவர்களின் குடும்பத்தில் தான் கண்ட மற்றொரு வகைப் புதுமையைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கிளார்க் அவர்களுக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை, அவரும், அவரது துணைவியார் ஹாலி (Holly) அவர்களும் கூறி முடித்தபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த டோனல்ட் அவர்கள், தன்னால் எதுவும் பேசமுடியவில்லை என்று கூறியுள்ளார். அந்த விபத்துடன் தொடர்புள்ள அத்தனை நிகழ்வுகளும் தனக்குள் உருவாக்கிய பிரமிப்பு, தன்னைப் பேச்சிழக்கச் செய்தது என்று கூறிய டோனல்டு அவர்கள், அதைவிட பெரிய புதுமையை, தான், கிளார்க் அவர்களின் குடும்பத்தில் கண்டதாகக் கூறியுள்ளார். கிளார்க், ஹாலி தம்பதியரும் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த ஐந்து பிள்ளைகளும் வெளிப்படுத்திய ஆழ்ந்த, பக்குவம் நிறைந்த அமைதி, தனக்கு பெரியதொரு புதுமையாகத் தோன்றியது என்று கூறிய டோனல்டு அவர்கள், தொடர்ந்து, “கிளார்க் அவர்கள், அந்த விபத்திற்குள்ளானபோது, அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த நற்செயல்கள் ஒவ்வொன்றையும் நாம் புதுமை என்று ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நிகழாமல், அந்த விபத்தினால், வேறுபட்ட, துயரம் நிறைந்த, விளைவுகள் உருவாகியிருந்தாலும், அக்குடும்பத்தினர், அவற்றை, இறைவனின் திருவுளம் என்று ஏற்று, தங்கள் வாழ்வைத் தொடர்ந்திருப்பர்” என்று டோனல்டு அவர்கள் தன் உரையில் கூறினார்.. அவரைப் பொருத்தவரை அந்தக் குடும்பத்தில் நிலவிய. அந்த அருள்நிறைந்த மனநிலையை, பெரியதொரு புதுமையாக தான் கருதுவதாக தன் உரையில் கூறினார் டோனல்டு.

விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து மீண்டுவருவது, உண்மையிலேயே புதுமைதான். ஆனால், அவ்வாறு மீண்டுவர இயலாதபோதும், தங்களுக்கு நேர்ந்ததை, இறைவனின் திருவுளம் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், நம்பிக்கா ஆகியவை, முன்னதைவிட மிகப்பெரிய புதுமை. இயேசு ஆற்றிய புதுமைகளிலும், இவ்வுலகில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் புதுமைகளிலும், மக்கள் அடைந்துள்ள நம்பிக்கை என்ற மாபெரும் புதுமையைக் குறித்து, நம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2020, 13:32