புதுமைகள் நின்றுவிட்டனவா? என்ற கேள்வி புதுமைகள் நின்றுவிட்டனவா? என்ற கேள்வி 

விவிலியத்தேடல்: இயேசு ஆற்றிய புதுமைகள் – மீள்பார்வை 1

கடந்த மூன்றாண்டுகளாக இயேசு ஆற்றிய புதுமைகளை மையப்படுத்தி நாம் மேற்கொண்டுவந்த தேடல் பயணம், தன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: இயேசு ஆற்றிய புதுமைகள் – மீள்பார்வை 1

இயேசு ஆற்றிய புதுமைகளை மையப்படுத்திய ஒரு விவிலியத்தேடல் தொடரை, மூன்று ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டு, சனவரி 3ம் தேதியன்று, துவங்கினோம். கடந்த மூன்றாண்டுகளாக நாம் மேற்கொண்டுவந்த இந்த தேடல் பயணம், தன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இனி வரும் தேடல்களில், இயேசுவின் புதுமைகள் என்ற இத்தொடரை நிறைவுக்குக் கொணர முயல்வோம்.

2018ம் ஆண்டு, இந்த விவிலியத்தேடல் தொடரைத் துவக்கிய வேளையில், முன்னுரையாக வழங்கப்பட்ட சொற்களை மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொணர்வோம்:

 “புத்தாண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில், புதுமைகளைப்பற்றி சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது. கடந்துசென்ற ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, நம்மை வியப்பில், ஆழ்த்திய நிகழ்வுகளை இப்போது அசைபோட்டுக்கொண்டிருக்கிறோம். இந்நிகழ்வுகளை, அதிசயம், ஆச்சரியம், அற்புதம், அபாரம் என்ற சொற்களால் விவரிக்க முயல்கிறோம். இத்தருணத்தில், நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் துவக்குகிறோம்” என்ற சொற்களுடன் நம் தேடல் முயற்சி ஆரம்பமானது.

2018, 2019 ஆகிய இரு ஆண்டுகள், பெரிய அளவு பிரச்சனைகள் அதிகமின்றி, வழக்கமான ஆண்டுகளாக உருண்டோடின. ஆனால், 2020ம் ஆண்டு, இவ்வுலகை, ஏறத்தாழ, தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஆண்டு என்றே சொல்லலாம். நாம் கடந்துவந்துள்ள 2020ம் ஆண்டை திரும்பிப்பார்க்கும் வேளையில், அனைவரின் உள்ளங்களிலும் கோவிட்-19 என்ற கொள்ளைநோயைப் பற்றிய எண்ணங்களே மிக அதிகமாக பதிந்திருக்கும். இலட்சக்கணக்கான மரணங்கள், முழு அடைப்பு, வேலை இழப்பு, பசி, பட்டினி என்று... இக்கொள்ளைநோய் உருவாக்கியுள்ள வேதனைகள், இவ்வாண்டின் அடையாளங்களாக இருக்கின்றன.

இத்தனை கருமேகங்கள் சூழ்ந்திருந்த இவ்வாண்டிலும், ஆங்காங்கே ஒளிக்கீற்றுகளாய் நல்ல செயல்கள் நடைபெற்றன. இவற்றில் பெரும்பாலான செயல்கள், தனி மனிதரின் நன்மைத்தனத்தை வெளிக்கொணர்ந்த செயல்களாக இருந்தன. அவற்றை, ‘புதுமைகள்’ என்று கூறுவது பொருத்தமாகத் தெரிகிறது. தங்கள் சொந்த நலனை ஒத்துக்கிவைத்து, நோயுற்றோருக்கு பணிகள் செய்த மருத்துவப்பணியாளர்கள், நம் மத்தியில் வாழ்ந்த புதுமைகள். முழு அடைப்புக் காலத்தில், இந்தத் தொற்றுநோயின் ஆபத்தையும், அரசின் விதிமுறைகளையும் மீறி, வறியோரின் பசி தீர்க்க, வீதி, வீதியாகச் சென்று, உணவு வழங்கிய பல நல்ல உள்ளங்கள், நம் மத்தியில் வாழ்ந்த புதுமைகள். வறிய நிலையில் தான் வாழ்ந்தாலும், தன் வீட்டுக்கூரையை பழுதுபார்க்க சேமித்துவைத்திருந்த பணத்தில், மளிகைப்பொருள்கள் வாங்கி, பல ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய ஒரு பெண்மணி, தங்கள் பிறந்தநாளுக்கென சேர்த்துவைத்திருந்த உண்டியல் பணத்தைக் கொண்டு, வறியோருக்கு உணவு வழங்கிய குழந்தைகள், பள்ளிக்குச் செல்ல இயலாமலும், கணணி வழியில் பயில இயலாமலும் தவித்த ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டிய இளைஞர்கள் என்று... நம்மைச் சுற்றி நிகழ்ந்த புதுமைகளை, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், ஊடகங்கள் வழியாகவோ, நேரடியாகவோ கேள்விப்பட்டோம். இன்னும் சிறப்பாக, இத்தகையப் புதுமைகளாக நாமும் வாழ முயற்சிகள் செய்திருக்கிறோம்.

இங்கே நாம் குறிப்பிட்ட இந்நிகழ்வுகளை, ‘புதுமைகள்’ என்று கூறுவதற்கு ஒரு சிலர் தயங்கலாம். இவற்றிற்கு வேறு பல வழிகளில் விளக்கங்கள் சொல்லவும் முற்படலாம். பொதுவாகவே, அறிவியலில் வளர்ந்துவிட்டதாக எண்ணும் நம் தலைமுறையினருக்கு, 'புதுமை' இவ்வுலகில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்வது, கடினமாக உள்ளது. 'புதுமை' என்ற சொல் பயன்படுத்தப்படுவதை, குழந்தைத்தனம் என்று கூறிவிடுகிறோம்.

குழந்தைப் பருவத்தில், நம்மை வியப்பில், பிரமிப்பில் ஆழ்த்திய தருணங்கள் அதிகம் இருந்தன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். வயது வளர, வளர, நமது வியப்பும், பிரமிப்பும் குறைந்துபோகின்றன. வேறு பல அறிவுசார்ந்த விளக்கங்கள் நம் எண்ணங்களை நிறைக்கின்றன.

அதேபோல், மனித இனம், குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, இயற்கையில் நிகழ்ந்தது அனைத்தும், மனிதர்களை வியப்பில் ஆழ்த்தின. இயற்கையின் சக்திகளாக வெளிப்பட்ட இடி, மின்னல் போன்றவற்றையும், இயற்கையின் கொடைகளான மலை, கடல் போன்றவற்றையும், தெய்வங்களாக வழிபட்டனர், நம் முன்னோர். ஆனால், அறிவியலில் நாம் வளர்ந்தபிறகு, நமது வியக்கும் திறமை குறைந்துவிட்டதென்று தோன்றுகிறது. அனைத்திற்கும் விளக்கம் கூறமுடியும் என்ற ஆணவம், நம்மிடையே வளர்ந்து வருவதால், புதுமைகள் குறைந்துவருகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

3ஆண்டுகளுக்கு முன், புதுமைகள் பற்றிய நம் தேடல் தொடரை, துவக்கிய வேளையில், "புதுமைகளின் காலம் முடிந்துவிட்டதா?" (Has the Day of Miracles Ceased?) என்ற தலைப்பில், இணையத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரையைப்பற்றி குறிப்பிட்டோம். டோனல்ட் ஹால்ஸ்டிராம் (Donald Haalstrom) என்பவர், 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கிய ஓர் உரை, கட்டுரை வடிவில் வெளியானது.

அந்தக் கட்டுரையில் பதிவான எண்ணங்களை மீண்டும் ஒருமுறை நாம் அசைபோடுவது பயனளிக்கும். குறிப்பாக, நாம் கடந்து வந்துள்ள இந்த 2020ம் ஆண்டு, புதுமைகளைப் பற்றிய நம் நம்பிக்கையை பெருமளவு குலைத்திருப்பதால், இந்த உரையில் ஹால்ஸ்டிராம் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை நாம் மீண்டும் ஒரு முறை அசைபோட முயல்வோம். இந்த உரையின் துவக்கத்தில் ஹால்ஸ்டிராம் அவர்கள், தான் சந்தித்த கிளார்க் ஃபாலெஸ் (Clark Fales) என்பவருக்கு ஏற்பட்ட ஓர் அற்புத அனுபவத்தை விவரிக்கிறார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் வாழும் கிளார்க் அவர்களும், இன்னும் 30 பேரும் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஷாஸ்ட்டா (Shasta) என்ற எரிமலையின் உச்சியை அடையும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சிக்காக, அக்குழுவினர் பல மாதங்களாகப் பயிற்சிபெற்று வந்தனர். இறுதியில், அவர்கள் 14,180 அடி உயரமுள்ள அச்சிகரத்தை அடைந்தனர். அக்குழுவில், கிளார்க் அவர்கள், முதலில் அச்சிகரத்தை அடைந்தார்.

வெற்றிக்களிப்பில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த கிளார்க் அவர்கள், அச்சிகரத்தின் மறுபக்கம் என்ன உள்ளது என்பதை ஆய்வுசெய்ய சென்ற வேளையில், திடீரென, தடுமாறி விழுந்தார். 40 அடி உயரத்திலிருந்து பின்புறமாக விழுந்த கிளார்க் அவர்கள், மேலும் ஒரு 300 அடிக்குமேல் மலைச்சரிவில் தாறுமாறாக, உருண்டு, புரண்டு சென்றார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தவற்றை, கிளார்க் அவர்கள், ‘புதுமை’ என்று விவரிக்கிறார். ஏறத்தாழ 350 அடி விழுந்து, புரண்டு சென்றவரை, ஒரு பாறை தடுத்து நிறுத்தியது. அந்நேரம் அவ்வழியே, மலையுச்சியை அடைவதற்கு மற்றொரு குழு ஏறிக்கொண்டிருந்தது. அக்குழுவில், மலையேறுபவர்களுக்கு பயிற்சியளிப்பவர்களும், அவசர மருத்துவ உதவி செய்யத் தெரிந்தவர்களும் இருந்ததால், கிளார்க் அவர்களுக்கு முதலுதவிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதே குழுவிடம், அவசர உதவி கோருவதற்கென பயன்படுத்தப்படும் புதுவகையான தொடர்புசாதனக் கருவிகள் இருந்தன. அக்கருவிகளின் சக்தியை ஆய்வுசெய்வதற்கென அவற்றை, அக்குழுவினர், முதன்முறையாக எடுத்து சென்றிருந்தனர். அக்கருவிகள் சக்தி மிகுந்தவையாக இருந்ததால், கிளார்க் விபத்துக்குள்ளான சில நிமிடங்களில் அப்பகுதிக்கு, 'ஹெலிகாப்டர்' விரைந்து வந்தது. கிளார்க் அவர்கள் விழுந்திருந்த சரிவில் காற்று பலமாக வீசியதால், ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இரண்டு முறை அவ்விடத்தை ஹெலிகாப்டர் வட்டமடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென, அங்கு வீசிக்கொண்டிருந்த காற்று நின்றதால், ஹெலிகாப்டர் மலைச்சரிவில் இறங்கி, கிளார்க் அவர்களை மருத்துவமனைக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டு சேர்க்கமுடிந்தது.

மருத்துவமனையில் சோதனைகள் நிகழ்ந்தன. கிளார்க் அவர்களின், கழுத்து, முதுகுத்தண்டு, மார்புப்பகுதி, இடுப்பு அனைத்திலும் எலும்புகள் பல முறிந்திருந்தன. மார்புப்பகுதியில் உடைந்த ஓர் எலும்பு, அவரது நுரையீரலைக் குத்திக் கிழித்திருந்தது.

கலிபோர்னியா மாநிலத்திலேயே தலைசிறந்த மருத்துவர் ஒருவர், கிளார்க் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்று, அந்த மருத்துவமனையில் இருந்தார். அவர் வழக்கமாக, ஆண்டிற்கு நான்கு முறை மட்டுமே அந்த மருத்துவமனைக்குச் செல்வார்.

கிளார்க் அவர்களின் நிலையைக் கண்ட அந்த மருத்துவர், அவர் உயிரோடு இருப்பதே பெரிய அதிசயம் என்று கூறினார். முதுகுத்தண்டில் இத்தனை இடங்களில் முறிவுகள் இருக்கும் ஒருவர், இவ்வளவு நேரம் உயிரோடு இருப்பதை தன் மருத்துவ அனுபவத்தில் முதல்முறை காண்பதாகக் கூறினார், அந்த மருத்துவர். தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை தெளிவாகக் கூறிய அந்த மருத்துவர், கிளார்க் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதை, மருத்துவ அறிவுகொண்டு விளக்கஇயலாது என்பதையும் கூறினார். கிளார்க் அவர்களுக்கு நிகழ்ந்தவை அனைத்தும், மருத்துவ அறிவுகொண்டு விளக்கமுடியாத உண்மைகள் என்று, டோனல்ட் ஹால்ஸ்டிராம் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கிளார்க் ஃபாலெஸ் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த விபத்தில், ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தவற்றை வேறுபட்டக் கோணங்களில் பார்க்கமுடியும். கிளார்க் அவர்கள் விழுந்துகிடந்த பகுதியில் மற்றொரு குழு அவ்வேளையில் மலையேறிச் சென்றது; அந்தக் குழுவில், மருத்துவ உதவிகள் செய்யத் தெரிந்தவர்கள் இருந்தது; அவர்களிடம் சக்தி வாய்ந்த தொடர்புக் கருவிகள் கைவசம் இருந்தது; ஹெலிகாப்டர் இறங்குவதற்கு உதவி செய்யும் வண்ணம், வீசிக்கொண்டிருந்த காற்று நின்றுபோனது; கிளார்க் அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவ மனையில் புகழ்பெற்ற மருத்துவர், அவ்வேளையில் வந்துசேர்ந்தது… என்று, ஒவ்வொரு நிகழ்வாக அலசிப் பார்க்கும்போது, பல்வேறு விளக்கங்கள் அளிக்கமுடியும். இவற்றை, தற்செயலாக நிகழ்ந்தவை என்று தட்டிக்கழிக்கலாம். அல்லது, கிளார்க் அவர்களின் பிறந்தநாள், நட்சத்திரம் இவற்றை வைத்து கணக்கிட்டு, அவருக்கு நீண்ட ஆயுள் உள்ளது என்பதால், இவை நிகழ்ந்தன என்று கூறலாம்.

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடந்த இந்நிகழ்வுகள், தற்செயலாக நிகழ்ந்ததுபோல் தோன்றினாலும், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்த சக்தி இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட சக்தி என்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த சக்தியை நாம் இறைவன் என்று ஏற்றுக்கொள்ளும்போது, அவரது அருளால் நிகழும் அற்புதச் செயல்களை, நாம் 'புதுமை' என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

நம்மைச்சுற்றி ஒவ்வொரு நாளும், அற்புதங்கள், அதிசயங்கள், புதுமைகள் நிகழ்ந்தவண்ணம்தான் உள்ளன. அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இல்லாததால், அல்லது, நிகழும் அனைத்தையும் அறிவியல் விதிமுறைகளுக்கு உட்படுத்தி விளக்கம் தேடுவதால், புதுமைகளைப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகிறோம்.

PBS எனப்படும் பொதுப்பணி தொலைக்காட்சியில், 1995ம் ஆண்டு, அறிவியல் ஆய்வாளர் ஒருவர் புதுமைகள்பற்றி பேசியபோது, "புதுமைகள் என்று ஒன்றுமில்லை. இயற்கையில் இதுவரை கண்டுபிடிக்க இயலாத விதிமுறையை நாம் புதுமை என்கிறோம்" என்று தன் பேட்டியில் கூறினார். நாம் காணும் உலகமனைத்தையும் அறிவியல் அளவுகோல் கொண்டு அளந்துவிடமுடியும் என்று எண்ணுகிறவர்கள், இன்று உலகில் மலிந்துவருகின்றனர். இத்தகைய ஒரு கண்ணோட்டத்தால், புதுமைகளை வியந்து போற்றும் மனநிலையை இழந்து, அனைத்திற்கும் விளக்கம் கூறுகிறோம்; விளக்கிக் கூற முடியாதவற்றிற்கும் அரைகுறையான விளக்கங்கள் தர முயல்கிறோம்.

இதற்கு மாறாக, வார இதழ் ஒன்றில், புதுமைகள்பற்றி வெளியான ஒரு கூற்று நம் கவனத்தில் பதிகிறது: “Coincidence is a miracle where God chooses to remain anonymous.” அதாவது, "தற்செயலாக நிகழ்ந்தது என்று நாம் சொல்வது, ஒரு புதுமை. அங்கு, இறைவன் தன்னை மறைத்துக்கொள்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்வன எதுவும் இறைவனின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நிகழ்வதில்லை. ஒரு சில  வேளைகளில், மனித வாழ்வில், இவ்வுலகில், இயற்கையைத் தாண்டிய பல நிகழ்வுகள் நடைபெறும் வேளையில், அவற்றில் இறைவனின் கரம் செயலாற்றுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு, பணிவுள்ள மனம் தேவை.

இத்தகைய ஒரு பணிவுடன், நாம் கடந்த மூன்று ஆண்டுகளாக, இயேசு ஆற்றிய புதுமைகளில் நம் தேடல்களை மேற்கொண்டோம். பணிவோடு நாம் மேற்கொண்ட இந்தப் பயணத்தின் இறுதியில், இயேசுவின் புதுமைகளில் நாம் காணும் பண்புகளையும், அவை சொல்லித்தரும் பாடங்களையும் அடுத்துவரும் தேடல்களில் புரிந்துகொள்ள முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2020, 13:10