நைஜீரியாவில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிச் சிறார் நைஜீரியாவில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிச் சிறார் 

நைஜீய மக்களைக் காப்பாற்றுங்கள், அரசுக்கு அழைப்பு

நைஜீரியாவில் மேலும் பலர் காணாமல்போயுள்ளவேளை, அவர்களைக் கடத்தி வைத்திருப்பவர்கள், எவ்வித காலவரையறையின்றி விடுதலை செய்யவேண்டும் – அந்தோனியோ கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பள்ளிச் சிறாரும், இரு கத்தோலிக்க அருள்பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை, நைஜீரிய குடிமக்களைப் பாதுகாப்பதற்கு, அரசும், உலகளாவிய சமுதாயமும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். 

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில், ஏறத்தாழ ஒரு வாரமாகக் காணாமல்போயிருந்த 344 மாணவர்களும், கடந்த சில வாரங்களில் கடத்தப்பட்டிருந்த இரு கத்தோலிக்க அருள்பணியாளர்களும், எவ்வித காயங்களும் இன்றி, நைஜீரிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அருள்பணி Matthew Dajo அவர்கள், கடத்தப்பட்ட பத்து நாள்களுக்குப் பிறகும், அருள்பணி Valentine Ezeugu அவர்கள், கடத்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வத்திக்கான் செய்திக்குப் பேட்டியளித்த அபுஜா பேராயர்  Ignatius Kaigama அவர்கள், இவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது, மனதிற்கு நிம்மதியைத் தரும் அதேநேரம், நைஜீரியாவில் நிலவும் சட்டஒழுங்கின்மை கவலை தருகின்றது என்று கூறியுள்ளார்.

அந்தோனியோ கூட்டேரஸ்

மேலும், இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், நைஜீரிய அரசு துரிதமாகச் செயல்பட்டு, பள்ளி மாணவர்களை மீட்டெடுத்து அவர்களின் குடும்பங்களோடு இணைத்துள்ளது என்று, அரசை பாராட்டியுள்ளார்.

அதேநேரம், மேலும் பலர் காணாமல்போயுள்ளனர் என்றும், அவர்களைக் கடத்தி வைத்திருப்பவர்கள், எவ்வித நிபந்தனையுமின்றி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2020, 14:14