வறியோர் உலக  நாள் 151120 வறியோர் உலக நாள் 151120 

வாரம் ஓர் அலசல்: அருளப்படுவது, அளிப்பதற்காக

ஏன், எதற்கு என்றே தெரியாமல், சிலநேரங்களில் யாருக்காவது நாம் உதவிசெய்யத் தோன்றும். அன்றைக்கு அந்த நொடியில் அந்த உதவியைச் செய்துவிடவேண்டும். அந்த நொடியைத் தவறவிட்டால், பின்னர் நமது உதவி அவர்களுக்கு தேவைப்படாமல்கூட இருந்துவிடலாம்.

மேரி தெரேசா: வத்திக்கான்

வானொலி நிலைய அறிவிப்பாளர் ஒருவர், கோடீஸ்வரர் ஒருவரிடம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அவர், அவரிடம், உங்களது வாழ்வில் உங்களை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது எது என்று கேட்டார். அதற்கு கோடீஸ்வரர், நான் அதனை நான்கு நிலைகளில் முயற்சி செய்தேன். முதல் நிலையில், ஏராளமான செல்வத்தையும் பொருள்களையும் சேர்த்தேன். ஆனால் அவற்றில் நான் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை. இரண்டாவது நிலையில், விலைமதிப்பில்லாத கற்களையும், கனிமங்களையும் சேகரித்தேன். இதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மூன்றாவது நிலையில், கால்பந்து அணிகளையும், கடற்கரை பயணியர் மாளிகைகளையும் வாங்கினேன், இவ்வாறு பல திட்டங்களைத் தீட்டினேன். அவற்றிலும் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. நான்காவது நிலையில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, மாற்றுத்திறனாளி சிறாருக்கு சக்கர நாற்காலிகள் வாங்கிக் கொடுக்கச் சொன்னார். அவற்றை வாங்கி எனது நண்பரிடம் கொடுத்தேன். ஆனால் எனது நண்பரோ, அவற்றை நானே நேரில் போய் அந்த சிறாரிடம் கொடுக்குமாறு சொன்னார். நானும் அவற்றைக் கொண்டுபோய் கொடுத்தேன். அப்போது அந்தச் சிறார் ஒவ்வொருவர் முகத்திலும் சுடர்விட்ட ஆனந்த ஒளியை எப்படி விவரிப்பது? என்று, அந்த கோடீஸ்வரர், அந்த அனுபவத்தை இவ்வாறு விவரித்தார்.

ஒவ்வொரு சிறாரும் அந்த நாற்காலிகளில் அமர்ந்து சிரித்த முகத்தோடு அங்குமிங்கும் ஆனந்தமாய் சுற்றி வந்தனர். ஏதோ ஒரு சுற்றுலா தலத்தில் இருப்பதுபோன்ற உணர்வு அங்கிருந்த எங்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. எனது மனமும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. நான் அவர்களிடம் விடைபெற்று திரும்புகையில், ஒரு சிறுவன் எனது காலை இலேசாகப் பிடித்து இழுத்தான். உடனே குனிந்து அந்தச் சிறுவனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிறுவன், ஐயா, உங்கள் முகத்தை எனது மனதில் பதியவைக்க ஆசைப்படுகிறேன், நாம் விண்ணகத்தில் சந்திக்கும்போது, நான் உங்களை மீண்டும் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்று சொன்னது என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், எனது வாழ்க்கையையே அது மாற்றியது. அந்தச் சிறுவன் அன்று உதிர்த்த அந்த சொற்கள், நாம் உயிரோடு இருக்கையில், நன்மை செய்வதே உண்மையான மகிழ்ச்சி என்பதையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தன. இவ்வாறு அந்த கோடீஸ்வரர், அந்த வானொலி நேர்காணலில் பதில் சொன்னார்.

வறியோர் உலக நாள்

“உன் கரத்தை ஏழைக்கு நீட்டு” (சீராக். 7:32) என்ற தலைப்பில் நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை, நான்காவது வறியோர் உலக நாளைச் சிறப்பித்தது. அந்த நாள் காலையில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏறத்தாழ நூறு வறியோர் பங்கேற்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், நம் அனைவருக்கும் ஆண்டவர் பல்வேறு திறமைகளை, கொடைகளைக் கொடுத்திருக்கிறார், அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்று சிந்திக்க அழைத்தார். நமது வாழ்வை உற்றுநோக்குகையில், பலவேளைகளில், நம்மிடம் குறைவாக உள்ளவற்றை மட்டுமே பார்க்கிறோம். இக்காலக்கட்டத்தில் நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்கிறோம். எனவே நம்மை மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பதில் வாழ்வை வீணாக்கவேண்டாம். வறுமையின் மிக மோசமான நிலை, அன்புக்காக ஏங்குவதாகும். வாழ்வில் நமக்கு என்ன குறைவாக உள்ளது என்பது பற்றி சிந்திக்காமல், ஏழைகளுக்கு கரத்தை நீட்டினால், நாம் பெற்றுள்ள திறமைகள்  பலுகிப்பெருகும். பண்டிகைகள் நெருங்கி வருகையில், எதை வாங்கலாம் என்றே மக்கள் சிந்திக்கின்றனர். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த இயேசு போன்று உண்மையிலேயே இருப்பதற்கு, என்னால் எதைக் கொடுக்க முடியும்? என்ற சரியான கேள்வியை நாம் கேட்கவேண்டும். இவ்வாறு மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் 15ம் தேதி, காலை ஏழு மணியளவில், இத்தாலியின் கோமோ என்ற நகரில், தான் உதவிசெய்த ஏழை ஒருவராலே கொலைசெய்யப்பட்ட அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனி (Roberto Malgesini) அவர்கள் பற்றிக் குறிப்பிட்டார். 51 வயது நிறைந்த, அருள்பணி மால்ஜெஸீனி அவர்கள், கோட்பாடுகளில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக, வறியோரில் இயேசுவைப் பாரத்தார், அவர்களுக்குப் பணிபுரிவதில் வாழ்வுக்கான பொருளைக் கண்டார். அவர், ஏழைகள் வடிக்கும் கண்ணீரை, தனது கனிவன்பால் வற்றச் செய்தார், கடவுளின் பெயரில் அவர்களைத் தேற்றினார். ஏழைகளுக்குப் பணியாற்றுவதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை கூறினார்.

ஆட்சியரான சிறுமி, விருந்தளித்த உணவகம்

பணக்காரர்கள் மட்டுமே செல்லக்கூடிய பெரிய உணவகம் ஒன்றிற்கு, ஒருநாள், ஏழை ஒருவர், தனது மகளை உணவருந்த அழைத்துச் சென்றார். அந்த உணவகத்தில் ஓரமாக ஒரு மேஜையில் அமர்ந்துகொண்டு, பணியாளரிடம், தோசை ஒன்று கொண்டுவருமாறு கூறினார். அதோடு அவரிடம், எனது மகள் பத்தாவது அரசுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்திருக்கிறாள், அப்படி வந்தால், நகரத்திலுள்ள பெரிய உணவகத்தில் அவளுக்கு சிற்றுண்டி வாங்கித் தருவதாக உறுதியளித்தேன் என்று சொன்னார். அதைக் கேட்ட பணியாளர், அந்த சிறுமிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவரிடம், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு எதுவும் வேண்டாம், எனது மகளுக்கு ஒரு தோசை மட்டும் போதும், அதற்கு மட்டுமே என்னிடம் காசு இருக்கின்றது என்றார். பின்னர் அந்த பணியாள், உணவகத்தின் உரிமையாளரிடம் சென்று விவரத்தைச் சொன்னார். அந்த சிறுமியின் அப்பாவுக்கும் ஒரு தோசை கொடுக்கிறேன், அதற்குரிய பணத்தை நான் செலுத்துகிறேன், ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லை, எனது ஊதியத்தில் அதை கழித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அதைக் கேட்ட அந்த உணவக உரிமையாளர், நீ உனது ஊதியத்தில் கொடுக்க வேண்டாம், நானே அந்த சிறுமிக்கு விருந்து தருகிறேன், அந்தச் சிறுமிக்கும் அவளது அப்பாவுக்கும் மட்டுமல்லாமல், அங்குச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் இன்று விருந்து தருகிறேன் என்று சொன்னார். இதை சிறிதும் எதிர்பார்க்காத அந்த சிறுமியும் அவளது அப்பாவும் உரிமையாளருக்கு கலங்கிய கண்களோடு நன்றி கூறிச் சென்றனர்.

இது நடந்து சில ஆண்டுகள் சென்று, அந்த சிறுமியும் படித்து முன்னேறி, IAS தேர்வில் வெற்றிபெற்று, அந்த நகருக்கே ஆட்சியராக நியமனம் பெற்று அங்கே வந்தார். அவர் அங்கு வந்தபின் ஒரு நாள் அந்த உணவகத்திற்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதாவது, மாவட்ட ஆட்சியர் அந்த உணவகத்திற்கு உணவருந்த வருகிறார் என்பதே அந்தச் செய்தி. அந்த உணவகத்திற்கு ஆட்சியர் வருகிறார் என்று கேட்ட நகர மக்களில் பலர் அங்கு கூடியிருந்தனர். உணவக உரிமையாளரும் புதிய ஆட்சியர் வருகிறார் என்று மகிழ்ச்சியோடு இருந்தார். அந்த ஆட்சியரும், தனது அப்பா அம்மாவுடன் அங்குச் சென்றார். ஆனால் யாருமே அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. உணவகத்தில் நுழைந்த அந்த ஆட்சியர் முதலில், அந்த உரிமையாளரையும், பணியாளரையும் அருகருகே நிற்கவைத்து, அவர்களது காலடிகளில் விழுந்து வணங்கினார். அவர்கள் இருவரும் எதுவும் புரியாமல் திகைத்து நின்றனர். அப்போது அந்த ஆட்சியர் அவர்களிடம், நீங்கள் என்னையும், எனது அப்பாவையும் மறந்திருக்கலாம், ஆனால் நான் எனது பத்தாவது தேர்வில் தேர்ச்சியடைந்து இங்கு வந்தபோது அதை நீங்கள் ஒரு கொண்டாட்டமாகவே மாற்றினீர்கள், நீங்கள் அன்று செய்த சிறிய விடயம்தான், வாழ்க்கையில் மேலும் முன்னேறவேண்டும் என்ற ஆவலை என்னில் விதைத்தது. உங்களால்தான் இன்று நான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பின்னர் அவர், இன்று இங்கு இருக்கும் எல்லாருக்கும் நானே விருந்து தருகிறேன் என்றும் கூறினார். (நன்றி Positive Stories Ghibran)

கூடுதலாக ஒரு தோசை வாங்க முடியாமல் இருந்த அந்த ஏழை அப்பாவின் நிலையை அந்த பணியாளர் புரிந்துகொள்கிறார். தனது ஊதியத்திலிருந்து உதவிசெய்ய நினைத்த அந்த பணியாளரின் மனிதாபிமானத்தை, உரிமையாளர் புரிந்துகொள்கிறார். அந்த இருவரும் அன்று செய்த அந்த உதவி, தானும் அவர்கள்போல் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தை அந்த சிறுமியின் மனதில் அன்று பதியவைத்தது. அதனால் நாம் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்று நினைத்தால், அந்த உதவியை காலம் தாழ்த்தாமல் அப்பொழுதே செய்ய வேண்டும் என்று, இந்த கதையை, யூடியூப்பில் பதிவுசெய்துள்ள Ghibran என்பவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏன், எதற்கு என்றே தெரியாமல், சிலநேரங்களில் யாருக்காவது நாம் உதவிசெய்யத் தோன்றும். அன்றைக்கு அந்த நொடியில் அந்த உதவியைச் செய்துவிடவேண்டும். அந்த நொடியைத் தவறவிட்டால், பின்னர் நமது உதவி அவர்களுக்கு தேவைப்படாமல்கூட இருந்துவிடலாம். சரியான நேரம் பார்த்துச் செய்யும் உதவியை நாம் செய்வதில்லை, மாறாக, நம் வழியாக கடவுள் அதை ஆற்றச் செய்கின்றார். எனவே, ஒருவருக்கு உதவி செய்யவேண்டுமென்ற தூண்டுதல் ஏற்படுகையில், ஏன், எதற்கு என்று சிந்தித்து, காலத்தைக் கடத்தாமல், அதை உடனடியாகச் செய்யவேண்டும். கொரோனா கொள்ளைநோய் காலத்தில், ஏழைகள் மற்றும், ஆதரவற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருஅவையும், வறியோர் உலக நாளை சிறப்பித்து, பொருளின்றி, அன்பின்றி வறுமையில் வாடுவோரின் நிலைமைகளை உணர்த்தியிருக்கிறது. மற்றவருக்குப் பயன்படுத்துவதற்காகவே, கடவுள் நமக்கு கொடைகளையும், திறமைகளையும் கொடுத்திருக்கிறார். அதை உணர்ந்து வாழ்கையில், அவை பன்மடங்காக பெருகும்.  கொடைகள் அருளப்படுவது, தேவையில் இருப்போருக்கு அளிப்பதற்காகவே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2020, 14:57