அமெரிக்க புதிய அரசுத்தலைவர் ஜோ பைடன் அமெரிக்க புதிய அரசுத்தலைவர் ஜோ பைடன்  

அமெரிக்க புதிய அரசுத்தலைவருக்கு ஆயர்கள் வாழ்த்து

அமைதி, உடன்பிறந்த உணர்வு, மற்றும், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர் சிறப்பு கடமையைக் கொண்டிருக்கின்றனர் - பேராயர் Gomez

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் (Joseph Robinette Biden) அவர்களுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான, Los Angeles பேராயர் Jose Gomez.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுள்ள ஜோ பைடன் அவர்கள், பொதுநலனுக்காக, உரையாடல் மற்றும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பார் என்ற தனது நம்பிக்கையையும், பேராயர் Gomez அவர்கள் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் 35வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய, கத்தோலிக்கரான ஜான் எப் கென்னடி (John Fitzgerald Kennedy) அவர்களுக்குப்பின், தற்போது அந்நாட்டில், கத்தோலிக்க அரசுத்தலைவராக, ஜோ பைடன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்று, பேராயர் Gomez அவர்கள் தன் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுத் தலைவர்கள் அனைவரும், தேசிய ஒன்றிப்பு உணர்வில் இணைந்து, பொதுநலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு, காலம் கனிந்துள்ளது என்று கூறியுள்ள பேராயர் Gomez அவர்கள், கத்தோலிக்கர் மற்றும், அமெரிக்கர்கள் என்ற முறையில், அனைவரும் நம் வாழ்வில் கிறிஸ்துவுக்குச் சான்று பகரவேண்டும் மற்றும், இந்த உலகில் அவரது இறையாட்சியைக் கட்டியெழுப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைதி, உடன்பிறந்த உணர்வு, மற்றும், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு, கத்தோலிக்கர் சிறப்பு கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்றும், நாட்டில் உண்மையான தேசபக்தி உணர்வு புதுப்பிக்கப்படுவதற்குச் செபிப்போம் என்றும் கூறியுள்ள பேராயர் Gomez அவர்கள், சனநாயக வாழ்வுக்கு, தன்னொழுக்கம் மற்றும், நற்புண்புகள் கொண்ட மக்கள் தேவைப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2020, 15:17