அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பிவந்தார்...  அவரோ ஒரு சமாரியர். - லூக்கா 17,15-16 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பிவந்தார்... அவரோ ஒரு சமாரியர். - லூக்கா 17,15-16 

விவிலியத்தேடல்: பத்து தொழுநோயாளர் நலமடைதல் 7

தன்னை குணமாக்கியவரைத் தேடிச்சென்று, அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், அந்த சமாரியர், இயேசுவைத் தேடிச்சென்றது, நமக்கு சிறந்ததொரு பாடமாக அமைகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர் நலமடைதல் 7

பத்து தொழுநோயாளரை இயேசு குணமாக்கிய புதுமையில், இதுவரை நாம் மேற்கொண்ட தேடல்களில், தொழுநோயாளருக்கு நாம் தரவேண்டிய மதிப்பை முதல் பாடமாக பயில முயன்றோம். மனித சமுதாயத்தில் நாம் உருவாக்கிக்கொண்ட பல்வேறு செயற்கையான பிரிவுகளை கடந்து, துன்பங்கள் நம்மை ஒருங்கிணைக்கும் என்பதையும், அத்துன்பங்கள் நீங்கியதும், நாம், பழைய பிரிவுச்சுவர்களை, மீண்டும் எழுப்பிவிடுகிறோம் என்பதையும், இரண்டாவது பாடமாகக் கற்றுக்கொண்டோம்.

யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்திருந்த பத்து பேரை, தொழுநோய் என்ற துன்பம் ஒருங்கிணைத்தது என்பதையும், அந்த நோய் நீங்கியதும், சமாரியர் ஒருவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் என்பதையும், சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். தொழுநோயிலிருந்து குணமான சமாரியருக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை, நற்செய்தியாளர் லூக்கா, இவ்வாறு விவரித்துள்ளார்:

லூக்கா நற்செய்தி 17: 15-19

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பிவந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ள இக்காட்சியை, இன்னும் சிறிது விரிவாக, கொஞ்சம் கற்பனை கலந்து சிந்திப்போம். குணம்பெற்ற சமாரியர், தன்னுடன் குணமான ஏனைய யூதர்களுடன் சேர்ந்து, குருக்களிடம் செல்லஇயலாது என்பதை உணர்கிறார். அதற்குப்பதிலாக, அவர் இயேசுவைத் தேடிச்செல்கிறார். அவர் அவ்வாறு தேடிச் சென்றபோது சந்தித்த சவால்களை, நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

இயேசு ஓர் ஊருக்குள் வந்தபொழுது (லூக்கா 17:12), அந்த ஊருக்குள் நுழையமுடியாத பத்து தொழுநோயாளர்கள், அந்த ஊரின் எல்லையில் அவரைச் சந்தித்தனர் என்பதை அறிவோம். நோயிலிருந்து குணமான சமாரியர், இப்போது ஊருக்குள் சென்றால் மட்டுமே இயேசுவைச் சந்திக்கமுடியும். அவர், தொழுநோயிலிருந்து குணமானவர் என்றாலும், அவர் உடுத்தியிருந்த கிழிந்த உடைகள், அவரை இன்னும் ஒரு தொழுநோயாளியாகவே காட்டியிருக்கும். எனவே, இயேசுவைத் தேடி, ஊருக்குள் சென்ற அவரைக் கண்டு, மக்கள் பயந்து ஓடியிருக்கலாம், அல்லது, அவரை, கல்லெறிந்து விரட்டியிருக்கலாம். மக்கள் காட்டிய வெறுப்பையெல்லாம் பொருள்படுத்தாமல், அந்த சமாரியர், இயேசுவைத் தேடியிருக்கவேண்டும். எத்தனை துன்பங்கள் வந்தாலும் சரி, தன்னை குணமாக்கியவரைத் தேடிச்சென்று, அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், அந்த சமாரியர், இயேசுவைத் தேடிச்சென்றது, நமக்கு சிறந்ததொரு பாடமாக அமைகிறது.

அந்த சமாரியரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போம். தேவைகள் உருவாகும் வேளையில், நம்மில் பலர், இறைவனைத் தேடிச்செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறோம். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பல முறை, நாம், இறைவனை, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில், தேடிச்சென்றிருக்கிறோம். ஆனால், நம் தேவைகள் நிறைவேறியபின், இறைவனுக்கு நன்றி கூற, அதே அளவு ஆர்வமும், தொடர் முயற்சிகளும் நம்மிடம் உள்ளனவா என்பதை எண்ணிப்பார்க்க, குணம்பெற்ற சமாரியர் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக, உந்துசக்தியாக அமைந்துள்ளார்.

திரும்பிவந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து, இயேசுவுக்கு வேதனை. அந்த வேதனை, "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற கேள்வியாக வெளிவருகிறது.

இயேசுவின் வேதனை நிறைந்த இக்கேள்விக்கு, நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி, கலவரங்கள், போர்கள், கொள்ளைநோய் போன்ற பல்வேறு துன்பங்களில் ஒருங்கிணையும் நாம், அத்துன்பங்கள் விலகியதும், மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோம் என்ற உண்மை, இயேசுவின் கேள்வியில் வெளிப்படுகிறது. நமது பதில் என்ன?

“பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” (லூக்கா 17: 17-18) என்ற இக்கேள்வியை, இயேசு, சமாரியரிடம் நேரடியாக எழுப்புவதாக லூக்கா கூறியுள்ளார். மற்ற ஒன்பது போரும் தன்னை தனிமைப்படுத்திவிட்டு தங்கள் குருக்களிடம் சென்றனர் என்பதை, ஒரு குறையாக, அவர் இயேசுவிடம் கூறியிருக்கலாம். ஆனால், அவரது உள்ளமெங்கும் நன்றி உணர்வு ஒன்றே நிறைந்திருந்தால், வேறு யாரையும் குறைசொல்லும் மனநிலையில் அவர் இல்லை. சமாரியரின் அந்த மனநிலையும், நமக்கு பாடங்களைச் சொல்லித்தருகின்றது. இப்புதுமை நமக்குச் சொல்லித்தரும் 3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வைப்பற்றிய பாடம்.

உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? நன்றியுள்ளவர்கள் ஒருவர் எனில், நன்றி மறந்தவர்கள் ஒன்பது பேர் இருப்பர் என்பதைத்தான், “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற கேள்வி நமக்கு நினைவுறுத்துகிறது.

உலகைச் சுற்றிவந்த இரு வானதூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதை இது. இருவரும் தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களை திரட்டியவண்ணம் சென்றனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடை நிறைந்து வழிந்ததால், அவரால் அதைச் சுமக்கமுடியாமல் தடுமாறினார். மற்றொருவரின் கூடையிலோ மிகக் குறைந்த செபங்களே இருந்தன.

முதல் தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக எழும் செபங்களைத் திரட்டினார். மற்றொருவரோ, இவ்வுலகிலிருந்து நன்றியாக எழும் செபங்களைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்ற வேண்டுதல்கள் திரட்டப்பட்டக் கூடை நிரம்பி வழிய, நன்றி செபங்கள் திரட்டப்பட்டக் கூடையோ, ஏறத்தாழ காலியாக இருந்தது. கிடைத்த நன்மைகளுக்கு நன்றிசொல்லும் நேரங்களைவிட, இன்னும் தேவை என்று விண்ணப்பிக்கும் நேரங்களே, நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம்.

நாம் மேற்கொள்ளும் செபங்களை, சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே, நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம். பொதுவாகவே, ஒவ்வொருநாளும், நம் உரையாடல்களில், நன்றியையும், மகிழ்வையும் வெளிப்படுத்தும் நேரங்களை விட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரமே அதிகம்.

இல்ல விழா ஒன்றில், வயதுமுதிர்ந்த ஒருவர் ஒரு 'ஜோக்' அடித்தார். அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். சிறிது நேரம் கழித்து, அவர் அதே 'ஜோக்'கை மீண்டும் அடித்தார். சூழ இருந்தவர்களில் ஒரு சிலரே மீண்டும் சிரித்தனர். ஆனால், சிரிப்பில் அவ்வளவு தீவிரம் இல்லை. மூன்றாம் முறை, நான்காம் முறை என்று, அதே 'ஜோக்'கை அவர் மீண்டும் மீண்டும் அடித்தபோது, சூழ இருந்தவர்கள், சிரிப்பதை நிறுத்திவிட்டு, சிறிது கோபமடைந்தனர். அப்போது அவர் சொன்னார்: “ஒரு 'ஜோக்'கிற்கு உங்களால் மூன்று, நான்கு முறைகளுக்கு மேல் சிரிக்கமுடியவில்லை. ஆனால், ஒரு சோகத்தை மட்டும், மீண்டும், மீண்டும் நினைவுகூர்ந்து அழுகிறீர்களே அது ஏன்?” என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தார்.

அதேபோன்றதொரு கேள்வியை நாம் நமக்குள் எழுப்புவோம். ஒவ்வொரு நாளும், இந்த உலகம் மோசம் என்பதை காட்டும் வகையில் வரும் ஒரே மாதிரியான செய்திகளை மீண்டும் மீண்டும் படிக்கிறோம். உலகம் மோசம் என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். ஆனால், இவ்வுலகில் நல்லவைகளும் நடக்கின்றன என்ற உண்மையை, ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சொல்லி, நம் நம்பிக்கையை வளர்க்கவும், நன்றி உணர்வை வளர்க்கவும் மறுக்கிறோம்.

குறிப்பாக, கடந்த பத்து மாதங்களாக, கொள்ளைநோயையும், அதன் விளைவாக உலகின் பல நாடுகளிலும் நிகழும் அவலங்களையும் மீண்டும், மீண்டும் கேட்டுவருகிறோம். இந்த அவலங்கள் நடுவிலும், எத்தனையோ உன்னதமான செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. அவலங்களுக்கு நாம் அளிக்கும் நேரத்தையும், முக்கியத்துவத்தையும், நல்லவற்றிற்கும் அளித்தால், நம் உள்ளங்கள் நன்றியால் நிறையும்.

ஊடகங்கள் சொல்லும் இருளான உலகையேப் பார்த்து, பார்த்து மனக் கண்களின் பார்வைத்திறனைக் குறைத்துக் கொள்வதற்குப் பதில், உலகில் தீமைகளை விட நன்மைகளே அதிகம் என்ற உண்மையை, நமக்கு நாமே தினமும் சொல்லப் பழகிக் கொள்வோமே!

எப்போதும் நன்றி நிறைந்த மனநிலையில் வாழ வேண்டும் என்பதை உணர்த்த, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வலம்வரும் ஒரு சிந்தனைத் தொகுப்பு இதோ:

நீங்கள் இன்று காலை ஓரளவு சுகத்துடன் கண் விழித்திருந்தால், பேறுபெற்றவர்கள். இந்த வார இறுதிக்குள் இறக்கவிருக்கும் பத்து இலட்சம் மக்களைவிட நீங்கள் பேறுபெற்றவர்கள்.

போர் அபாயம், சிறைவாசம், சித்திரவதைகள் ஏதும் இல்லாமல் உங்கள் வாழ்வு செல்கிறதென்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள். உலகில் ஒவ்வொரு நாளும் 50 கோடி மக்களுக்கு இந்த நிலை இல்லை.

பயமேதுமின்றி உங்களால் ஒரு சமய வழிபாட்டில் கலந்துகொள்ள முடிந்தால், நீங்கள் உலகின் 30 கோடி மக்களைவிட பேறுபெற்றவர்கள்.

உடுத்த உடையும், இரவில் உறங்க ஒரு வீடும் உங்களுக்கு இருந்தால், உலகின் 75 விழுக்காட்டு மக்களைவிட நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள்.

உங்களால் இந்த மின்னஞ்சலை வாசிக்கமுடிந்தால், வாசிக்க விருப்பம் இருந்தும் வாசிக்கமுடியாமல் தவிக்கும் 20 கோடி மக்களை விட நீங்கள் எவ்வளவோ மேலான இடத்தில் இருக்கிறீர்கள்.

நம் உள்ளங்கள் நன்றி உணர்வுகளால் நிறைந்திருக்கும்போது, நம்மைச் சூழ்ந்துள்ள பல்வேறு உடல், உள்ள நோய்கள் நீங்கும். அவ்வேளையில், இயேசு, அந்த சமாரியரை நோக்கிச் சொன்ன சொற்களையொத்த ஓர் ஆசீரை நாமும் பெறுவோம்: "எழுந்து செல்லும். உமது நம்பிக்கையும், நன்றியுணர்வும் உமக்கு நலமளித்தன" (காண்க. லூக்கா 17:19)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2020, 12:38