திருஅவையின் தலைமைப்பீட, புனித பேதுரு பெருங்கோவில் திருஅவையின் தலைமைப்பீட, புனித பேதுரு பெருங்கோவில் 

திருத்தந்தையர் வரலாறு - இரு திருத்தந்தையர் ஆட்சி

அருள்பணியாளர் போனிபாஸ் திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டபோது, இவருக்கு திருத்தந்தையாக பதவி ஏற்பதில் விருப்பமே கிடையாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருஅவையின் நாற்பதாவது திருத்தந்தையான முதலாம் இன்னோசென்டின் மறைவுக்குப்பின் 417ம் ஆண்டு மார்ச் 18ந் தேதி திருத்தந்தையாக, அதாவது உரோம் ஆயராக பொறுப்பேற்றுக்கொண்டார் திருத்தந்தை சோஸிமுஸ் (Zosimus). கிரேக்கத்தைச் சேர்ந்த இவர் திருத்தந்தையான சிறிது காலத்திலேயே ஆப்ரிக்க ஆயர்களுடன் முரண்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அக்கால வழக்கப்படி மட்டுமல்ல, இக்கால வழக்கப்படியும், திருஅவைக்குள் எந்த ஒரு பிரச்சனையும் முதலில் அந்தந்த தலத்திருஅவையால் நோக்கப்படவேண்டும். அதுதான் முறையும்கூட. இது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. நம் திருத்தந்தை சோஸிமுஸ் பொறுப்பேற்ற சில காலத்திலேயே ஆப்ரிக்காவின் Apiarius என்ற அருள்பணியாளர், அவரின் மறைமாவட்ட ஆயரால் திருஅவையிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். பிரச்சனையை அங்கேயே விவாதிக்காமல், அந்த அருள்பணியாளர் அதனை ஒரு புகாராக உரோம் நகருக்கு அனுப்ப, திருத்தந்தையும் அதனை ஏற்று அது குறித்து விசாரிக்க ஒரு குழுவை ஆப்ரிக்காவிற்கு அனுப்பி வைத்துவிடுகிறார். ஆப்ரிக்க ஆயர் மாநாட்டில் இப்பிரச்சனை முதலில் விசாரிக்கப்படட்டும் என்றுதான் திருத்தந்தை கூறியிருக்க வேண்டும். ஆனால், திருத்தந்தை நேரடியாக இதில் தலையிட்டது, அன்றைய தலத்திருஅவைகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக நோக்கப்பட்டு, மனக்கசப்பு வளர்ந்தது. இது திருத்தந்தை சோஸிமுஸ் அவர்களின் மரணத்திற்குப் பின்னும் தொடர்ந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாகவே பதவியிலிருந்த திருத்தந்தை சோஸிமுஸ், 418ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி மரணமடைய, அடுத்த நாளே புனித போனிபாஸ் (Boniface) திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருத்தந்தை முதலாம் தமாசுஸால் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, பின்னர் திருத்தநதை முதலாம் இன்னோசென்டால், கான்ஸ்தாந்திநோபிள் நகரில் அவரின் பிரதிநிதியாக நியமிக்கப்படடிருந்தார். திருத்தந்தை சோஸிமுஸ் இறந்தவுடன், அதேநாளில் உரோம் அருள்பணியாளர்களுள் சிலர் ஒன்றிணைந்து இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தைக் கைப்பற்றி, தங்கள் சார்பாக தலைமை திருத்தொண்டர் Eulalius என்பவரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஏனைய திருஅவை உயர் அதிகாரிகளையும் இவர்கள் பசிலிக்காவிற்குள் நுழைய விடவில்லை. இந்த சூழ்நிலையில்தான் மறுநாள் வயதான அருள்பணியாளர் போனிபாஸ் திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டார். இவருக்கு திருத்தந்தையாகப் பதவி ஏற்பதில் விருப்பமேயில்லை. வயதான, எளிமையான இவர், அருள்பணியாளராக இருந்தபோது பிறரன்பு நடவடிக்கைகளுக்கும், அறிவாற்றலுக்கும், நல்லொழுக்கத்திற்கும் பெயர்பெற்றவராக இருந்தார். 418ம் ஆண்டு டிசம்பர் 29ந்தேதி ஞாயிறன்று திருத்தந்தை போனிபாஸ், புனித Marcellus பசிலிக்காவிலும், திருத்தொண்டர் Eulalius இலாத்தரன் பசிலிக்காவிலும் திருத்தந்தையர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். 

ஒரே நேரத்தில் இரு திருத்தந்தையர்களின் ஆட்சி துவங்கியது. அப்போது உரோமை ஆளுனராக இருந்த Symmachus என்பவருக்கும், திருத்தந்தை போனிபாஸை  பிடிக்காது என்பதால், அவர் பேரரசர் ஹொனாரியுஸிடம் (Honarius) நயமாகப் பேசி Eulaliusஐ திருத்தந்தையாக அங்கீகரித்தார். ஆகவே, திருத்தந்தை பொனிபாஸுக்கு ஆதரவான குழு, இத்தாலியின் ரவென்னா (Ravenna) நகர் சென்று பேரரசரை சந்தித்து முறையிட்டது. அவரும் இத்தாலிய ஆயர் பேரவையைக் கூட்டி விவாதித்தார். ஆனால் சுமூகமான முடிவு காணப்படவில்லை. ஆகவே, இத்தாலி, Gaul பகுதி (பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, வட இத்தாலி ஆகியவைகளை உள்ளடக்கியது), மற்றும், ஆப்ரிக்க ஆயர்கள் அடங்கிய மாநாடு கூட்டப்படும் வரை, இரு திருத்தந்தையர்களும் உரோமைவிட்டு வெளியேற வேண்டும், உரோமுக்குள் நுழையக்கூடாது என்று மன்னர் கட்டளை பிறப்பித்தார். இத்தாலியின் Spoleto ஆயர் Achilleus அவர்கள், உரோமில் அவ்வாண்டின் உயிர்ப்பு விழா கொண்டாட்டங்களில் தலைமை தாங்க பணிக்கப்பட்டார். திருத்தந்தை பொனிபாஸ்  இதனை ஏற்று புனித Felicitas கல்லறைத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தார். ஆனால் Eulalius, உரோமுக்குத் திரும்பி, தானே அவ்வாண்டின் உயிர்ப்பு விழா நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவேன் என கிளர்ச்சி செய்தார். இதனால் கோபமுற்ற பேரரசர் ஹொனாரியுஸ், திருத்தந்தை போனிபாஸே உண்மையான திருத்தந்தை என அறிவித்தார். Eulalius,  இத்தாலியின் Nepi அல்லது அதன் அருகாமையில் உள்ள ஒரு மறைமாவட்டத்தின் ஆயராக மாற்றப்பட்டார் எனத் தெரிய வருகிறது. இந்த மோதல்கள் 15 வாரங்கள் தொடர்ந்ததாக வரலாறு கூறுகிறது.

திருஅவை ஒரே குடும்பமாக பல்வேறு நாடுகளில் பரவியிருந்த வேளையில், மேற்கத்திய ஆயர்களுக்கு தனிச்சிறப்பு அதிகாரங்களை வழங்கும் போக்கை திருத்தந்தை பொனிபாஸ் நீக்கினார். பல்வேறு ஒழுங்கு முறைகளையும் திருஅவைக்குள் கொணர்ந்தார். இதனால் சிலரின் எதிர்ப்புக்கும் உள்ளானார். இளம் பேரரசர் இரண்டாம் Theodosiusன் விரோதத்தையும் சம்பாதித்தார். இருப்பினும் திருஅவைக்குள் சில கட்டுப்பாடுகளின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி நிலைநாட்டி வந்தார் திருத்தந்தை பொனிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித அம்புரோஸ் அவர்களுடன் மிலான் நகரில் சிலகாலம் வாழ்ந்து, பின்னர் திருத்தந்தையான முதலாம் செலஸ்டின் அவர்களிடமிருந்து நம் வரலாற்றை அடுத்த வாரத்தில் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2020, 14:09