'Manos Unidas' என்ற கத்தோலிக்க அரசுசாரா அமைப்பின் பணிகள் 'Manos Unidas' என்ற கத்தோலிக்க அரசுசாரா அமைப்பின் பணிகள்  

வன்முறை அச்சத்தில் 30 விழுக்காட்டு பெண்கள்

பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளை சமுதாயம் தட்டிக்கேட்காமல் இருப்பதால், இந்த வன்முறைகள் அதிகரித்து வருகின்றன - 'Manos Unidas' அமைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் உலகநாள் நவம்பர் 25 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, ஸ்பெயின் நாட்டில், பணியாற்றும் 'ஒருங்கிணைந்த கரங்கள்' என்று  பொருள்படும் 'Manos Unidas' என்ற கத்தோலிக்க அரசுசாரா அமைப்பு ஒன்று, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, இன்றைய உலகில், 30 விழுக்காட்டு பெண்கள், வன்முறைகளுக்கும், வன்முறைகள் தொடர்பான அச்சத்திற்கும் ஒவ்வொரு நாளும் உள்ளாகின்றனர் என்று தெரிய வருகிறது.

கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக, பல நாடுகளில் விதிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில், பெண்கள் கூடுதலாக வன்முறைகளுக்கு உள்ளாயினர் என்றும், இதனை, 'கொள்ளைநோயின் நிழல்' என்றும் ஐ.நா. அவை கூறியுள்ளது.

பெண்களுக்கு, குறிப்பாக, இளம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக நிகழும் வன்முறைகளை சமுதாயம் தட்டிக்கேட்காமல் இருப்பதால், இந்த வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று 'Manos Unidas' அமைப்பின் பொதுச்செயலர் Ricardo Loy அவர்கள் வருத்தத்துடன் கூறினார்.

கொள்ளைநோய் காலத்தில் 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களில் 1 விழுக்காட்டு பெண்களே சட்டத்தின் உதவிகளைத் தேடி வந்துள்ளனர் என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

மெளனமாக தங்கள் வன்முறைகளைத் தாங்கிவந்துள்ள பெண்கள் துணிவுடன் அவற்றை வெளியிடுவதற்கும், அதன் காரணமாக, வன்முறைகளை மேற்கொண்டோருக்கு சட்டத்தின்படி தண்டனைகள் கிடைப்பதற்கும் 'Manos Unidas' உதவி செய்து வருவதாக, பொதுச் செயலர் Ricardo Loy அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2020, 14:52