பங்களாதேஷ் கத்தோலிக்க சமுதாயம் பங்களாதேஷ் கத்தோலிக்க சமுதாயம்  

இஸ்லாமிய குழுவால் கிறிஸ்தவ கிராமம் தாக்கப்பட்டது

இஸ்லாமிய வன்முறை குழு ஒன்று, பங்களாதேஷில், ஒரு கிறிஸ்தவ கிராமத்தை தாக்கியதுடன், அங்கிருந்த அன்னை மரியா கோவிலையும் சேதப்படுத்தியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்லாமிய வன்முறை குழு ஒன்று, பங்களாதேஷில், ஒரு கிறிஸ்தவ கிராமத்தை தாக்கியதுடன், அங்கிருந்த அன்னை மரியா கோவிலையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியிலுள்ள Ichhachhara என்ற கிராமத்தில், கிறிஸ்தவர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை, பொய் ஆவணங்களுடன் கைப்பற்றியிருந்த இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து, சட்டத்தின் துணையுடன், அந்த நிலம் திருப்பி பெறப்பட்ட சில மணி நேரங்களில், அந்த கிறிஸ்தவர் வாழ்ந்துவந்த கிராமம் முழுவதும் தாக்கப்பட்டுள்ளது.

Moulvibazar மாவட்ட அரசு நிர்வாகத்தால் அநீதியான நில ஆக்ரமிப்பு அகற்றப்பட்டதால் கோபமுற்ற Rafiq Ali என்ற இஸ்லாமியர், ஏறக்குறைய 60 இஸ்லாமியர்களை திரட்டிவந்து, கிறிஸ்தவக் கிராமத்தை தாக்கியதுடன்,   Sylhet மறைமாவட்டத்தின் கீழுள்ள அந்த கிராமத்தின் அமல உற்பவ அன்னைமரியா கோவிலையும் சேதப்படுத்தியுள்ளார்.

Moulvibazar மாவட்ட பகுதியில் சிறுபான்மையினராக வாழும் Khasia இன கிறிஸ்தவர்களை தாக்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் ஞாயிறு வழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு என பயன்படுத்திய இந்த கோவிலின் உள்புகுந்து சேதப்படுத்தியதுடன், அதன் வெளிச்சுவர்களையும் உடைத்துள்ளதாக தெரிவித்தார், அமலமரி தியாகிகள் துறவுசபையின் அருள்பணியாளரும், பங்குத்தந்தையுமான ஜோசப் கோமஸ்.

Khasia என்ற மங்கோலிய இனத்தைச் சேந்த மக்கள், ஏறக்குறைய 40,000 பேர் பங்களாதேஷில் வசிக்கின்றனர், இவர்களுள் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள். வெற்றிலைப் பயிரிட்டு அதிலிருந்து வரும் வருமானத்தை நம்பி இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2020, 14:44