இந்திய இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி இந்திய இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி 

ஏழைக் கைதிகளுக்கு செவிமடுப்பதில் மகிழ்ச்சி

அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி : இயேசு சபையிடமிருந்தும், பழங்குடி மக்களிடமிருந்தும் நான் கற்றுக்கொண்ட எளிமையான வாழ்க்கை முறைகள் எனக்கு உதவுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு சபையில் தான் பெற்ற பயிற்சியும், பழங்குடி இன மக்களிடையே ஆற்றிய ஐம்பது ஆண்டுகால பணி அனுபவமும், எத்துன்பங்களையும் தாங்கும் வலிமையை தனக்குத் தந்துள்ளதாக, சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்திய இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஏழை பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்காக அவர்களோடு இணைந்து போராடிவந்ததன் விளைவாக, NIA எனும் தேசிய புலனாய்வு அமைப்பால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு, மும்பை Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 84 வயதான இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், தன்னுடன் சிறையில் இருக்கும் ஏழை கைதிகளின் வரலாற்றிற்கு செவிமடுப்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

முதுமையின் காரணமாகவும், பார்க்கின்சன்ஸ் உடல் நோயின் காரணமாகவும் தான் அனுபவிக்கும் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள, இயேசு சபையிடமிருந்தும், பழங்குடி மக்களிடமிருந்தும் தான் கற்றுக்கொண்ட எளிமையான வாழ்க்கை முறைகள் தனக்கு உதவுகின்றன என, ஓர் அருள்பணியாளருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் தெரிவித்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏழைக் கைதிகளுக்கு செவிமடுப்பது, தனக்கு மன நிறைவைத் தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏழைக் கைதிகளின் துயர்களிலும், புன்னகையிலும், தான் கடவுளைக் காண்பதாக உரைத்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், தன்னுடைய அன்றாடத் தேவைகளுக்கு தன் உடன்கைதிகளே மனமுவந்து உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னைப்போல் தெலுங்கானா மாநிலத்திலிருந்து கைது செய்யப்பட்டு, அதே மும்பை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் எண்பது வயதான, மனித உரிமை நடவடிக்கையாளர், கவிஞர், மற்றும், ஆசிரியரான Varavara Rao அவர்களுக்காகச் செபிக்குமாறும் விண்ணப்பித்துள்ளார், அருள்பணி ஸ்டான் சுவாமி.

கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி, கைது செய்யப்பட்டு, அதற்கு அடுத்த நாளிலிருந்து மும்பை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமியின் அடுத்த வழக்கு விசாரணை, இவ்வாரம் வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2020, 14:15