இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை தலைவர்கள் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை தலைவர்கள்  

கொள்ளைநோயினால் காயமுற்றுள்ள இந்தியாவிற்காக...

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவை, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறை, 'இந்திய ஒருங்கிணைப்பு ஞாயிறு' என்று கொண்டாடுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவை, நவம்பர் 29ம் தேதி சிறப்பிக்கப்படும், திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறை, 'இந்திய ஒருங்கிணைப்பு ஞாயிறு' என்று கொண்டாடுகிறது.

2017ம் ஆண்டு, இந்த ஆயர் பேரவையின் 29ம் பொது அவை கூடிய வேளையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து, மூன்றாம் முறையாக, இவ்வாண்டு நடைபெறும் ஒருங்கிணைப்பு ஞாயிறு, "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்ற சொற்களை, தன் மையக்கருத்தாக கொண்டுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயினால் மிகவும் காயமுற்றுள்ள இந்தியாவிற்கு ஒருங்கிணைப்பு ஞாயிறு ஆறுதலையும், செபத்தின் வலிமையையும் கொணரும் என்று தான் நம்புவதாக, இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Filipe Neri Ferrão அவர்கள் கூறினார்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும், கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலகில் நற்செய்தியைப் பரப்பும் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் Ferrão அவர்கள், உயிர்த்த இயேசு நம் உலகப் பயணத்தில் உடன்வருவது நமக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த 132 மறைமாவட்டங்களின் 190 ஆயர்கள், CCBI எனப்படும் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவையின் உறுப்பினர்கள். இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த 9294 பங்குத்தளங்களிலும், ஏனைய நிறுவனங்களிலும், 21,018 அருள்பணியாளர்கள், மற்றும் 564 குழுமங்களின் துறவியர் பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2020, 14:27