"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25: 40) "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25: 40) 

கிறிஸ்து அரசர் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

அரசர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

கிறிஸ்து அரசர் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

உலகின் பல நாடுகளில், மன்னராட்சி மறைந்து, மக்களாட்சி மலர்ந்துள்ளதென்று நம் வரலாற்று நூல்கள் சொல்கின்றன. ஆனால், உண்மையில், இன்றைய உலகில், பல தலைவர்கள், அரசர்களாக, அரசிகளாக, வலம்வருகின்றனர் என்பதை அறிவோம். குறிப்பாக, கடந்த ஓராண்டளவாய் இவ்வுலகை வதைத்துவரும் கொள்ளைநோய் காலத்தில், தாங்கள் எது செய்தாலும், தங்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்ற இறுமாப்பில், பல நாடுகளின் தலைவர்கள், சர்வாதிகார அரசர்களைப்போல் நடந்துகொள்வதைக்கண்டு, வெட்கமும், வேதனையும் அடைகிறோம். இத்தகையதொரு காலக்கட்டத்தில், ‘அனைத்துலகின் அரசர் கிறிஸ்து’ என்ற திருநாள் வழியே, நம் வேதனைக்கு மாற்றுமருந்தைக் கண்டுபிடிக்க, தாய் திருஅவை, இஞ்ஞாயிறன்று, நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்துத் திருநாள்களில், இந்த ஒரு திருநாள், நமக்குள் சங்கடங்களை உருவாக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்துவை, நல்லாயன், நல்லாசிரியர், நண்பர், மீட்பர், என்று... பல கோணங்களில் எண்ணிப்பார்க்கும்போது, உள்ளம் நிறைவடைகிறது. இன்றைய முதல் வாசகத்தில், (எசேக்கியேல் 34:11-12,15-17) பரிவுகொண்ட ஓர் ஆயனாக, இறைவன், தன்னையே உருவகித்துப் பேசுவதைக் கேட்கும்போது, நம் உள்ளம் மகிழ்கிறது. அதைவிட அதிகமாக, இன்றைய பதிலுரைப்பாடலாக வழங்கப்பட்டுள்ள “ஆண்டவரே என் ஆயர்” என்ற திருப்பாடல் 23ன் வரிகள், நம் வாழ்வில் பலமுறை நமக்கு ஆறுதல் வழங்கியுள்ளன. ஆனால், கிறிஸ்துவை, அரசராக கற்பனை செய்து பார்க்கும்போது, சங்கடங்கள் எழுகின்றன. அரசர் என்றதும், மனத்திரையில் தோன்றும் காட்சிகளே, இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம்.

அரசர் என்றதும், பட்டும், வைரமும் மின்னும் உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் ஓர் உருவம், நம் கற்பனையில் வலம் வருவதால், சங்கடமடைகிறோம். ‘அரசர்’ என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப்பார்த்தால், இயேசு, நிச்சயமாக அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர். ஓர் அரசை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது!

அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், எல்லைகள் இல்லை, எல்லையைப் பாதுகாக்க, போர் இல்லை, படைகள் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை... ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு, இவை எதுவுமே தேவையில்லை.

இதில், இன்னும் ஆழமான ஓர் உண்மை என்னவென்றால், இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். இந்த அரசில், எல்லாரும் அரசர்கள். இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு, தலையை உயர்த்தி, உயர்வானதோர் இடத்தில் அவரைத் தேடினால், ஏமாற்றமடைவோம். உயர்ந்திருக்கும் நம் தலை தாழ்ந்தால்தான், அவரைக் காணமுடியும். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவியவண்ணம் இருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அவர்கள் காலடிகளைக் கழுவ வரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே, கிறிஸ்து அரசர் திருநாள் நம்மை அழைக்கிறது.

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிவுற்றபின்னரும், உலகத்தில், பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. முதல் உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில், தங்கள் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, இன்னும் பலகோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. அரசர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார்.

அன்று நிலவிய அதிகார வெறி, முதல் உலகப்போருடன் முடிவடையாமல், இரண்டாம் உலகப்போரையும் உருவாக்கியது. இன்றும், அதே அதிகார வெறி, மூன்றாம் உலகப்போரை, சிறு, சிறு துண்டுகளாக, உலகெங்கும் நடத்திவருகின்றது. கொள்ளைநோய் என்ற துயரத்தைக் களைவதற்குப் பதில், அந்தத் துயரத்தை, அரசியலாக்கி, தங்கள் அதிகார வெறியை வளர்த்துக்கொள்ளும் தலைவர்களை இன்று காண்கிறோம்.

‘நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில், செப்டம்பர் மாதம் வெளியான இரு செய்திகளின் தலைப்புகள், அதிகார வெறிகொண்ட தலைவர்களில் இருவரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. "அவரை நீக்க இயலாது என்ற எண்ணத்தை, உங்கள் மீது சுமத்த டிரம்ப் விரும்புகிறார்" (Trump Wants You to Think You Can’t Get Rid of Him) என்பது, செப்டம்பர் 24ம் தேதி வெளியான ஒரு செய்தியின் தலைப்பு

இச்செய்தியை உறுதிசெய்வதுபோல், டிரம்ப் அவர்கள் செயல்படுவதைக் காண்கிறோம். அமெரிக்க ஐக்கிய நாட்டில், நவம்பர் மாதத் துவக்கத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி, இரண்டு வாரங்கள் சென்ற பிறகும், தன் தோல்வியை ஏற்று, அடுத்தவருக்கு வழிவிட மறுக்கும் டொனால்டு டிரம்ப் அவர்கள், முடிசூடா மன்னர்களாக, அரியணைகளில் தங்களையே பிணைத்துக்கொண்ட பல தலைவர்களுக்கு பரிதாபமான ஓர் எடுத்துக்காட்டு. இதேபோல் செயல்படும் இரஷ்யத் தலைவரைப்பற்றி மற்றொரு செய்தி வெளியானது. "தான் என்ன செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று விளாடிமிர் புடின் நினைக்கிறார்" (Vladimir Putin Thinks He Can Get Away With Anything) என்பது, செப்டம்பர் 22ம் தேதி வெளியான செய்தியின் தலைப்பு.

வல்லரசுகள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் இவ்விரு நாடுகளின் தலைவர்களைப்போலவே, இன்னும் பல்வேறு நாட்டுத் தலைவர்களும், பிரதமர்களும் நடந்துகொள்கின்றனர். பெலாருஸ், சீனா, வடகொரியா, பிலிப்பீன்ஸ், பிரேசில், வெனிசுவேலா என்று பல நாடுகளில், தற்போது தலைவர்களாக இருப்போர், முடிசூடா மன்னர்களாக தங்களை எண்ணி வருகின்றனர். இந்தியாவின் பிரதமரும், அவரைச்சுற்றி துதிபாடும் ஏனையோரும், கொள்ளைநோயினால் உருவான முழுஅடைப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள்மீது பல்வேறு சட்டங்களைத் திணித்துவருவதும், கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைப்பதும், சர்வாதிகாரப்போக்கின் வெளிப்பாடுகளே.

இத்தகையத் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசர் என்று பறைசாற்றுகிறது, கத்தோலிக்கத் திருஅவை. கிறிஸ்து என்ற அரசரிடமிருந்து, மக்கள், குறிப்பாக, தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, தலைவர்கள், பாடங்களைப் பயில்வார்களா என்பது தெரியவில்லை. நாம் பாடங்களை பயில முன்வருவோமே!

உண்மை அரசரின் பண்புகளை கற்றுக்கொள்ள, இன்று நாம் கேட்கும் நற்செய்தி வாசகம், உதவியாக உள்ளது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும் இந்த இறுதி உவமையில் பங்கேற்கும் கதைமாந்தர்கள் பலருடன், ஆண்டவர் தன்னையே இணைத்து, அவர்கள் வடிவாகவே மாறுகிறார். அரியணையில் வீற்றிருப்பவராகமட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல், இவ்வுலகில் துன்புறும் பலராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் இறைவன். 'பசியால் இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர் சொல்லவில்லை; மாறாக, ‘நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' (மத்தேயு 25: 35-36) என்று அரசர் சொல்கிறார்.

"பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை நம்மால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர் கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில் அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, ஒரு விளக்கம் தரும்போது, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை அடையாளப்படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாத நான் சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான் சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம் புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச் சவாலாக அமைகிறது.

சிறைக்கைதிகளில் இயேசுவைக் காண்பதோடு, அவர்கள் விடுதலைபெற்று வெளியே வரும்வேளையில், அவர்களை சமுதாயத்தில் ஒருவராக உணரச்செய்வதும் நம் பொறுப்பு. இது கடினமான ஒரு சவால் என்பதை வெளிப்படுத்தும் ஓர் உண்மை நிகழ்வு இது: சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்துவந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "சாமி, சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு எனக்கு எளிதாக அனுமதி கிடைத்துவிடும். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.

மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம் உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே.

சிறையில் இருக்கும் இயேசுவைப்பற்றி இன்று கூடுதலாகச் சிந்திக்க, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் ஒரு முக்கிய காரணம். அநீதியான முறையில் மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் அவர்கள், மற்றொரு சிறைக்கைதியின் உதவியுடன் எழுதி, அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு மடலில், தான் சிறையில் அனுபவித்துவரும் மனிதாபிமானத்தை புகழ்ந்து பேசியுள்ளார். பார்க்கின்சன்ஸ் நோயினால் துன்புறும் அவர், உண்பதற்கும், குளிப்பதற்கும், அவருடன் தங்கியிருக்கும் இருவர் உதவி செய்வதாகக் கூறியுள்ளார். இவ்விருவரும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்காக செபிக்கும்படியும் அவர், தன் மடல்வழியே விண்ணப்பித்துள்ளார். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்ற அநீதியான பழியைச் சுமந்து, மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 83 வயதான அருள்பணி ஸ்டான் அவர்கள் உருவில், இயேசுவும் அந்தச் சிறையில் தங்கியுள்ளார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்றும்,  இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்றும், இன்றைய நற்செய்தி ஆணித்தரமாகக் கூறுகிறது.

வறியோர் வடிவில் இறைவன் வாழ்வதை மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்ள கடந்த வாரம் சிறப்பித்த வறியோரின் உலக நாள் நமக்கொரு வாய்ப்பை வழங்கியது. இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில், கிறிஸ்து அரசருக்கு முன் நாம் நிற்கும் வேளையில், அரசர் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, உரிமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள வறியோருக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக, அரசனாக, நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி. இறுதித் தீர்வையில் இக்கேள்விக்கு நாம் தரப்போகும் பதில், இன்று முதல் நம் வாழ்வில் செயல்வடிவம் பெறட்டும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2020, 13:35