இளவரசர் சார்ல்ஸ் அவர்களைச் சந்திக்கும் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் அவர்களைச் சந்திக்கும் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் 

வறிய நாடுகளுக்கு ஆற்றும் உதவிகளைக் குறைப்பது தவறு

மக்கள் பெருமளவில் புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்படுவது, மனித வர்த்தகம் போன்ற கொடுந்துன்பங்களைக் களைவதற்கு, பிரித்தானியா அரசு தன் வளங்களைப் பயன்படுத்தவேண்டும் - கர்தினால் நிக்கோல்ஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரித்தானிய அரசு, உலகின் மிக வறிய நாடுகளுக்கு ஆற்றும் உதவிகளைக் குறைப்பதற்குத் திட்டமிட்டு வருவது, அரசின் பிற்போக்கு மனநிலையை வெளிப்படுத்துகின்றது என்று, அந்நாட்டு கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் குறை கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் உள்நாட்டு உற்பத்தியிலிருந்து, உலகின் மிக வறிய நாடுகளுக்கு வழங்கப்படும் 0.7 விழுக்காட்டு நிதி உதவியை, 0.5 விழுக்காடாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருவது குறித்து, அரசுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ள, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இந்த திட்டத்தால், இன்றைய நிலவரப்படி, வறிய நாடுகளுக்கு அனுப்பப்படும் உதவியில், ஏறத்தாழ 400 கோடி பவுண்டு குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மிகவும் தேவையில் இருப்பவர்களுக்கு உதவும் முறையை வைத்து, ஒரு நாட்டின் பெருமை கணிக்கப்படும் என்றும், பிரித்தானியா, உண்மையிலேயே மாபெரும் நாடாக விளங்க விரும்பினால், அது, வறிய நாடுகளுக்கு உதவும் நிதியைக் குறைப்பது, தன் மதிப்பை பின்னடையச் செய்வதாக இருக்கும் என்றும், கர்தினாலின் மடல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் பெருமளவில் புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்படுவது, மனித வர்த்தகம் போன்ற கொடுந்துன்பங்களைக் களைவதற்கு, அரசு தன் வளங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், உலகம் துன்பங்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், பிரித்தானிய அரசு, உதவிகளைக் குறைக்க நினைப்பது, சரியான முடிவு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.  

இப்பூமியின் ஒரு பகுதியில் நிலவும் வறுமை, துன்பம், சீரழிவு ஆகியவை, பிரச்சனைகளை உருவாக்கும் தளமாக அமைந்து, இறுதியில் அது முழு உலகையும் பாதிப்பில் நிறுத்தும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் உடன்பிறந்தோர் (2020, பத்தி 137) என்ற திருமடலில் கூறியிருப்பதையும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2020, 14:45