கர்தினால் ஜோசப் கூட்ஸ் கர்தினால் ஜோசப் கூட்ஸ்  

பாகிஸ்தான் குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்பட...

நாட்டின் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது. மதம், கலாச்சாரம், இனம், மற்றும், சமுதாய நிலை ஆகிய பாகுபாடுகள் இன்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பும், நீதியும் வழங்கவேண்டியது அரசின் கடமை – பாகிஸ்தான் கர்தினால் கூட்ஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெறும் ஆள்கடத்தல்கள், கட்டாய மதமாற்றங்கள், மற்றும், கட்டாயத் திருமணங்கள் ஆகிய விவகாரங்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மதத்தின் அடிப்படையில் அல்லாமல், மனித உரிமைகள் என்ற அடிப்படையில் இடம்பெறவேண்டும் என்று, அந்நாட்டு கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Arzoo Raja மற்றும், ஏனைய கிறிஸ்தவ வளர்இளம்பருவத்தினர் கடத்தப்பட்டு, இஸ்லாமுக்கு கட்டாயமாக மதம் மாறவைத்து, அவர்களை கட்டாயத் திருமணம் செய்துகொள்ளும் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கென, கராச்சியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் கூட்ஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தானில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களாகிய நாங்கள், நாட்டின் குடிமக்கள் என்றும், நாட்டின் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது என்றும், மதம், கலாச்சாரம், இனம், மற்றும், சமுதாயநிலை ஆகிய பாகுபாடுகள் இன்றி, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பும், நீதியும் வழங்கவேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார், கர்தினால் கூட்ஸ்.

பாகிஸ்தானில் ஆள்கடத்தல்கள், கட்டாய மதமாற்றங்கள், மற்றும், கட்டாயத் திருமணங்கள் ஆகியவை, தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என்ற சட்டம் உள்ளது என்றும், கர்தினால் கூட்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கராச்சி உயர்மறைமாவட்டத்தின் நீதி மற்றும், அமைதி பணிக்குழு நடத்திய இக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் கூட்ஸ் அவர்கள், கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு, கட்டாயமாகத் திருமணமும் செய்துவைக்கப்படும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும் பணியாற்றிவரும் அனைவருக்கும் தன் நன்றியையும் தெரிவித்துள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2020, 14:48