கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ  

உறவுப்பாலங்களை எழுப்ப மதத் தலைவர்களுக்கு அழைப்பு

மாண்பும், மனிதாபிமானமும், இரக்கமும் உள்ளவர்களாக, அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டியது, மதத் தலைவர்களின் கடமை - கர்தினால்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரான்சிலும், உலகெங்கிலும் மதத்தின் பெயரால் பயங்கரவாத மற்றும், வன்முறைச் செயல்கள் நடத்தப்பட்டுள்ள இவ்வேளையில், நல்லிணக்கப் பாலங்களை கட்டியெழுப்புவோம் என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், யாங்கூன் பேராயருமாகிய, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

"அமைதிக்கு மதங்கள்" என்ற அமைப்பின் இணைத் தலைவர் என்ற முறையில், நவம்பர் 4, இப்புதனன்று அறிக்கை வெளியிட்டுள்ள, கர்தினால் போ அவர்கள், பிரிவினைகளை ஆழப்படுத்துவதைக் கைவிட்டு, மக்கள் மத்தியில் நல்லிணக்க வாழ்வையும், ஒருவரை ஒருவர் மதிப்பதையும் ஊக்குவிப்போம் என்று, மதத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கை, நமக்கும், மற்றவருக்கும், அழிவையும் சாவையுமே  கட்டவிழ்த்துவிடும் என்றும், பழிவாங்குதலைப் புறக்கணித்து, மாண்பும், மனிதாபிமானமும், இரக்கமும் உள்ளவர்களாக, அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டியது,  மதத் தலைவர்களின் கடமை என்பதையும், கர்தினால் போ அவர்கள் நினைவுபடுத்தியுள்ளார்.

பேச்சு சுதந்திரம், எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி அது மனித உரிமையாகும், அதற்கு பண்பட்ட பழக்கவழக்கமுறை தேவைப்படுகின்றது என்றும், பேச்சு சுதந்திரம் என்பது, மதங்கள் கொண்டிருக்கும், அனைத்து மனித உயிர்களின் மாண்பை மதிக்கின்ற, விழுமியத்திலிருந்து வருவதாகும் என்றும், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 30ம் தேதி பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில், Notre Dame கத்தோலிக்கப் பேராலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் மூவர் உயிரிழந்தது, நவம்பர் 2, இத்திங்களன்று, வியன்னாவில் முக்கிய யூதத் தொழுகைக்கூடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டது ஆகியவற்றுக்குப்பின் உலக மதத் தலைவர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2020, 14:55