மூன்று மாதங்களுக்குமுன் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட பெய்ரூட் துறைமுகப்பகுதி தற்போது மூன்று மாதங்களுக்குமுன் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட பெய்ரூட் துறைமுகப்பகுதி தற்போது 

ஒன்றிணைந்த அமைதி வாழ்வின் எடுத்துக்காட்டாக இருந்த லெபனான்

மத்தியக் கிழக்கின் அமைதி, மற்றும், கிறிஸ்தவ-இஸ்லாமிய இணக்க வாழ்வுக்கு எதிராகச் செல்லும் இரகசியத் திட்டங்கள் குறித்து எச்சரிக்கும் கர்தினால் ராய்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஒன்றிணைந்த அமைதி வாழ்வின் எடுத்துக்காட்டு என புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் புகழப்பட்ட லெபனான் நாடு, இன்று, தீவிரவாதப் போக்குகளாலும், பிரிவினை வாதங்களாலும் மடிந்துபோகும் நிலையிலிருப்பதாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் Bechara al-Rahi.
லெபனான் நாட்டின் நலனையும், சுயாட்சியையும் அழிக்கும்விதமாக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயலாற்றும் உள்நாட்டு சில குழுக்கள் குறித்து எச்சரிக்கையை வெளியிட்ட மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் ராய் அவர்கள், மத்தியக் கிழக்கின் அமைதி, மற்றும், கிறிஸ்தவ-இஸ்லாமிய இணக்க வாழ்வுக்கு எதிராகச் செல்லும் இரகசியத் திட்டங்கள் குறித்தும் எச்சரித்தார்.
லெபனான் நாட்டின் வருங்காலத்திற்கென மூன்று திட்டங்களை முன்வைத்த கர்தினால், சமுதாய அக்கறையுள்ள ஒரு மக்களாட்சி அரசை நிறுவுதல், முன்னேற்ற நடவடிக்கைகளை மனதில்கொண்ட அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பின் உரிமைகளை அமல்படுத்தல் போன்றவை, லெபனான் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்றார்.
அண்மையில் ஐரோப்பாவில் இடம்பெற்ற மதத் தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட கர்தினால் ராய் அவர்கள், மதங்களிடையே இணைக்க வாழ்வின் எடுத்துக்காட்டாகவும், கிழக்குக்கு மேற்குக்கும் இடையேயான இணைப்பாகவும் செயல்பட்ட லெபனான் நாடு, தொடர்ந்து அதேபாதையில் செயல்பட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளிப்படுத்தினார்.
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி லெபனான் நாட்டில் இடம்பெற்ற வெடி குண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சமுதாயப் பணிகளை ஆற்றிவரும் தலத்திருஅவை, ஐந்தாயிரம் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகையும், ஒவ்வொரு மாதமும் 25,000 உணவு அட்டைகளும், ஐந்தாயிரம் மருத்துவ உதவிப் பொருட்களும், 3000 வீடுகளை புணரமைப்பதற்குரிய உதவிகளையும் செய்து வருகின்றது. (AsiaNews)
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2020, 16:02