புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர் 

மத்தியதரைக்கடல் கல்லறைத் தோட்டமாக மாறி வருகிறது

பல்வேறு அநீதிகள் மற்றும், ஆபத்துக்களுக்கு அஞ்சி, தரமான வாழ்வைத் தேடும் புலம்பெயர்ந்தோருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன - இயேசு சபை அருள்பணி Ripamonti

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோர் ஆகியோருக்குப் பணியாற்றுவதற்கென, நாற்பது ஆண்டுகளுக்குமுன், இயேசு சபையின் முன்னாள் உலகளாவியத் தலைவரும், இறையடியாருமான அருள்பணி Pedro Arrupe அவர்களால் துவக்கப்பட்ட JRS அமைப்பின் நோக்கம், எவ்வாறு இக்காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று, இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் விளக்கியுள்ளார்.

உரோம் நகரில் இயங்கும், இயேசு சபையினரின் Astalli புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் அருள்பணி Camillo Ripamonti அவர்கள் கூறுகையில், இந்த நாற்பதாம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தியையும் அதிகக் கவனத்துடன் செயல்படுத்த முனைந்துள்ளதாகத் தெரிவித்தார்.  

ஐரோப்பா, புலம்பெயர்ந்தோர் குறித்த தனது மனநிலையில் மாற்றத்தைக் கொணர்வதற்கு வெகுதொலைவில் உள்ளது என்றும், இவ்வாண்டில் மட்டும், மத்தியதரைக்கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் தொள்ளாயிரம் பேர் இறந்துள்ளனர் என்றும், அருள்பணி Ripamonti அவர்கள் கூறினார்.

மத்தியதரைக்கடல், கடந்த பல ஆண்டுகளாக, கல்லறைத் தோட்டமாக மாறியுள்ளது என்றும், இவ்வியாழனன்றுகூட இடம்பெற்ற இரு படகு விபத்துக்களில் ஏறத்தாழ நூறு பேர் இறந்துள்ளனர் என்றும் கூறிய அருள்பணி Ripamonti அவர்கள், பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் அமைப்பு, லிபியக் கடற்பகுதியில் பலியான 74 பேர் பற்றியும், விபத்தில் உயிர் தப்பிய 47 பேர் பற்றியும் குறிப்பிட்டுள்ளது என்று கூறினார்.

கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து எட்டு கப்பல் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்றும், மத்தியதரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்குச் செல்ல ஆபத்தான படகுப்பயணம் மேற்கொண்டவர்களில் 900 பேர் வரை இறந்துள்ளனர் என்றும் கூறிய அருள்பணி Ripamonti அவர்கள், லிபியாவின் துறைமுகம், பாதுகாப்பானதல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு அநீதிகள் மற்றும், ஆபத்துக்களுக்கு அஞ்சி, தரமான வாழ்வைத் தேடி வரும் புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் பணிகளை, மேலும் சிறப்பாக ஆற்ற, திருத்தந்தையின் ஊக்கமூட்டும் செய்தி உதவியுள்ளது என்றும், இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், Astalli அமைப்பின் தலைவர் அருள்பணி Ripamonti அவர்கள் கூறினார்.

இயேசு சபையினரின் JRS அமைப்பு, 1980ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2020, 15:07