JRS அமைப்பிற்கு ஜோ பைடன் அவர்களின் காணொளிச் செய்தி

ஒவ்வோர் அன்னியரிலும் நாம் அடுத்தவரைக் காணமுடியும் என்பதை, இயேசு சபையின் JRS என்ற அமைப்பு, உறுதியாக நம்புகிறது - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் அன்னியரிலும் நாம் அடுத்தவரைக் காணமுடியும் என்பதை, இயேசு சபையின் JRS என்ற அமைப்பு, உறுதியாக நம்புகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார்.

நவம்பர் 14 இச்சனிக்கிழமையன்று, JRS அமைப்பு, தன் 40வது ஆண்டு நிறைவைச் சிறப்பித்ததையொட்டி, ஜோ பைடன் அவர்கள் இவ்வமைப்பினருக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில், சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களான புலம்பெயர்ந்தோர் மற்றும் வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கென JRS என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதை, தன் செய்தியின் துவக்கத்தில் கூறினார்.

நாம் இந்த 40ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், இவ்வுலகை சீரழித்துள்ள கொள்ளைநோயை எதிர்த்துப் போராடும் பல்வேறு மருத்துவர்கள், தாதியர், மருத்துவ ஆய்வாளர்கள் இன்னும் பல்வேறு பணியாளர்கள், புலம்பெயந்தோர் என்பதை நாம் உணர்கிறோம் என்பதையும், ஜோ பைடன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்டோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு மனிதாபிமான முறையில் உதவிகள் செய்வதில், அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு முன்னோடியாக இருந்தது என்பதை தன் செய்தியில் நினைவுறுத்தியுள்ள ஜோ பைடன் அவர்கள், ஒவ்வோர் ஆண்டிலும், 1,25,000 புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம் தரும் இலக்கை அடைவதற்கு, தன் அரசு உழைக்கும் என்ற வாக்குறுதியையும் முன் வைத்துள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய, நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவருமே உழைக்கவேண்டும் என்றும், அத்தகையப் பணியை ஆற்றிவரும் JRS அமைப்பை இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்றும் கூறி, அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள, அவர்களுக்கு உறுதுணையாக செயல்படும் வகையில், 1980ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி, இயேசுசபை புலம்பெயர்ந்தோர் பணி என்று பொருள்படும் JRS என்ற அமைப்பை, இயேசு சபையின் அன்றைய உலகத்தலைவரும், இறையடியாருமான அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் உருவாக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2020, 15:04