சிரியா நாட்டின் அலெப்போ நகரின் இடிபாடுகள் சிரியா நாட்டின் அலெப்போ நகரின் இடிபாடுகள் 

நல்ல சமாரியருக்காகக் காத்திருக்கும் சிரியா நாடு

போர்களையும், மோதல்களையும் விடுத்து, மனிதரின் உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான பல்வேறு தீர்வுகளை, 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடல் வழங்கியுள்ளது - ஆயர் Abou Khazen

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'அனைவரும் உடன்பிறந்தோர்' ('Fratelli tutti’) என்ற திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள நல்ல சமாரியார் உவமையில், கள்வர் கையில் அகப்பட்டு அடிபட்டிருக்கும் மனிதராக, சிரியா நாடு உள்ளது என்றும், நல்ல சமாரியர் வந்து தங்களைக் காப்பதற்காக, தங்கள் நாடு காத்திருக்கிறது என்றும், அந்நாட்டில் பணியாற்றும் கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கூறினார்.

சிரியாவில் இலத்தீன் வழிபாட்டு முறையினருக்கு அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகப் பணியாற்றும் ஆயர் Georges Abou Khazen அவர்கள், திருத்தந்தையின் திருமடல், சிரியா போன்ற நாடுகளை மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது என்று, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அல் அசார் தலைமை குரு Ahmad al-Ṭayyib அவர்களுடன் திருத்தந்தை கையெழுத்திட்ட 'மனித உடன்பிறந்த நிலை' ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியதாக திருத்தந்தையின் திருமடல் உள்ளதெனக் கூறிய ஆயர் Abou Khazen அவர்கள், இந்தத் திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இஸ்லாமிய உலகையும் ஊடுருவிச் செல்லவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார்.

தங்கள் துயர்களைத் துடைக்க நல்ல சமாரியர் வருவார் என்று சிரியா நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்று கூறிய ஆயர் Abou Khazen அவர்கள், அதற்கு மாறாக, அவர்களை மேலும் தாக்குவதற்கு, கள்வர்கள் வருவதாகவும், காயப்பட்ட மக்களைக் கண்டுகொள்ளாமல் மதத் தலைவர்கள் கடந்துசெல்வதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

போர்களையும், மோதல்களையும் விடுத்து, மனிதரின் உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான பல்வேறு தீர்வுகளை, 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடல் வழங்கியிருப்பது, சிரியாவுக்கு மிகவும் தேவையான ஒரு திருமடல் என்று ஆயர் Abou Khazen அவர்கள், எடுத்துரைத்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2020, 15:10