தேடுதல்

அனைத்துப் புனிதர்கள் அனைத்துப் புனிதர்கள் 

புனிதர் அனைவரின் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

நம்மைச்சுற்றி வாழும் 'அடுத்தவீட்டுப் புனிதர்களை'க் கொண்டாட கத்தோலிக்கத் திருஅவை வழங்கியுள்ள அற்புதமான வாய்ப்பு, புனிதர் அனைவரின் பெருவிழா.
ஞாயிறு சிந்தனை 011120

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

2014ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும், திருத்தந்தை 23ம் யோவான் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். அவ்வேளையில், கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் யோவான் பவுல் (John Paul II - A Saint for Canada) என்ற நூல் வெளியானது. கனடா நாட்டில் வாழும் Thomas Rosica என்ற அருள்பணியாளர் வெளியிட்ட இந்நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள், இன்று நாம் கொண்டாடும் புனிதர் அனைவரின் பெருவிழாவன்று, புனிதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன:

"ஒருவர் 'முத்திப்பேறு பெற்றவர்' என்றோ 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல அது. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பு அல்ல... முத்திப்பேறு பெற்றவராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர், கடவுளின் கருணையைச் சார்ந்து, கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியோரையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில், அவர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச்சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது."

அருள்பணி Thomas Rosica அவர்கள் கூறியுள்ள இப்பண்புகள் பலவற்றையும், தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தியவர்கள், புனிதர்கள். இவர்களில் சிலரை, கத்தோலிக்கத் திருஅவை, அருளாளர்கள் என்றும், புனிதர்கள் என்றும், உலகிற்குப் பறைசாற்றுகின்றது. ஆனால், அந்த அதிகாரப்பூர்வமான பறைசாற்றலைப் பெறாமல், இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்கள், நம் கண்முன்னே, நற்செய்தியின் சான்றுகளாக, வலம்வருகின்றனர்.

வாழ்க்கையை நற்செய்தியாக மாற்றியப் பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். லூத்தரன் சபையைச் சேர்ந்த ஆல்பர்ட் அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில், தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப்பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில், மருத்துவமனையொன்றை நிறுவி, பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச் செய்துவந்தார்.

இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதற்கு அடுத்த ஆண்டு, அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் சென்றார். இரயிலில் வந்திறங்கிய அவரை வரவேற்க, பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆல்பர்ட் அவர்கள், இரயிலைவிட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்கவேண்டும் என்று வேண்டியபடி, ஆல்பர்ட் அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்தவர்களிடம் திரும்பிவந்தார் ஆல்பர்ட். நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான், முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.

இளமையில், நற்செய்தியை, மறையுரைகளாய் வழங்கி புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில், நற்செய்தியை, வாழ்வாக்கினார். நடமாடும் மறையுரையாக வாழ்ந்த மருத்துவர் ஆல்பர்ட் அவர்கள், புனிதர் என்ற பட்டத்தைப் பெறாதவர். இவரைப் போல், இன்னும் பலகோடி மனிதர்கள், புனிதர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனினும், உன்னத மனிதர்களாக நம் உள்ளங்களில் குடிகொண்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களாக நம்மை வதைத்துவரும் கொள்ளைநோய் கொடுமையால் துன்புற்ற பலருக்கு, உடலளவிலும், ஆன்மீக அளவிலும் உதவிகள் புரிந்து, அப்பணிகளில் தங்கள் உயிரையே வழங்கிய பல்லாயிரம் நல்ல உள்ளங்களை, இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். இவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அடுத்தவீட்டுப் புனிதர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். நம்மைச்சுற்றி வாழும் 'அடுத்தவீட்டுப் புனிதர்களை'க் கொண்டாட கத்தோலிக்கத் திருஅவை வழங்கியுள்ள அற்புதமான வாய்ப்பு, புனிதர் அனைவரின் பெருவிழா.

 புனிதர் அனைவரின் பெருவிழாவன்று, 'பேறுபெற்றோர்' என்ற ஆசீருடன், இயேசு வழங்கிய புனிதத்துவத்தின் பல்வேறு அம்சங்கள், நமது நற்செய்தியாக ஒலிக்கிறது. இப்பகுதியை நாம் அடிக்கடி கேட்டு, சிந்தித்திருக்கிறோம். இன்றைய சிந்தனைக்கு நாம் இரு எண்ணங்களை மட்டும் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். இயேசு மலை மீது அமர்ந்ததையும், அவர் வழங்கிய ஆசி மொழிகளையும் நம் சிந்தனைகளின் மையமாக்குவோம். "இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர்ந்தார்" (மத். 5:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

மலை... உடலிலும், மனதிலும், மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளைச் சூழ்ந்திருக்கும் அமைதி, மலைப்பகுதிகளில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வை உருவாக்கும். மேலும், மலைமீது நிற்கும்போது, நமது பார்வை, பரந்து விரிந்ததாக மாறும். அமைதி, தூய்மை, புத்துணர்வு, பரந்து விரிந்த பார்வை, என்ற உன்னத அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களில் கருதப்படுகின்றன.

மலைமீது அமர்ந்த இயேசு, தன் போதனைகளை, ஆசி மொழிகளுடன் ஆரம்பிக்கிறார். அவர் ஆசீரால் நிறைந்தவர் என்பதால், அவர் இவ்வுலகில் வாழும் அனைவரையும், குறிப்பாக, இவ்வுலகில் துயரங்களைச் சந்திப்போரை, ஆசீர்வதித்து, தன் படிப்பினைகளை வழங்குகிறார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார்.

இந்தக் கூற்றை சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று எப்படி சொன்னீர்?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்து இறைவனையேத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும் இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும், நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர்பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர்பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தையும் சபிக்கப்பட்டதாய் காணும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசீர்களை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை, நமக்கு வந்த சாபங்கள் என்று பெரிதுபடுத்துவதால், நம் வாழ்வு, சாபங்களால் நிறைந்துள்ளதைப்போன்ற உணர்வைத் தருகிறது.

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் அறிவிக்கவந்த தலைமைத் தூதர் கபிரியேல், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். மரியாவைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் மலைப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார். 'பேறுபெற்றோர்' அதாவது, 'ஆசி பெற்றவர்' என்று இயேசு மலை மீது முழங்கிய கூற்றுகள், உலகப் புகழ்பெற்றவை:

மத்தேயு 5 3-10

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; துயருறுவோர் பேறுபெற்றோர்; கனிவுடையோர் பேறுபெற்றோர்; நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்...

'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறிய ஆசி மொழிகள், பல்லாயிரம் உள்ளங்களில் உன்னத எண்ணங்களை விதைத்துள்ளன. அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியை, இம்மலைப்பொழிவில் ஆணித்தரமாக அறிவித்துள்ள இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோரையும் அதிகம் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, அவர்கள் மேற்கொண்ட அகிம்சை வழி போராட்டங்களுக்கு, உந்துசக்தியாக இருந்தது.

பேறுபெற்றோர் என்று இயேசு கூறிய இந்த வரிசையில், இறுதியாக அவர் கூறியுள்ள நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் என்ற சொற்கள், நம் எண்ணங்களை, மும்பைச் சிறையில் வாடும் அருள்பணி ஸ்டான் சுவாமி, மற்றும் அவருடன் சிறைப்பட்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவர் மீதும் திருப்புகின்றன. பேறுபெற்றோர் வரிசையில் கூறப்பட்டுள்ள எட்டு பேறுகளில், ஏனைய ஏழு பேறுகளைப்பற்றி இயேசு கூடுதலான விளக்கங்கள் தரவில்லை. இறுதியில், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று கூறிய இயேசு, அதன் விளக்கத்தையும் வழங்கியுள்ளார். இந்த விளக்கத்துடன் இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தி நிறைவடைகிறது.

மத்தேயு 5:10-12

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

அனைத்துப் புனிதரின் பெருவிழாவான இந்த ஞாயிறன்று, இயேசு கூறிய இச்சொற்கள், சிறையில் வாடும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கும், ஏனைய மனித உரிமை போராளிகளுக்கும் மன உறுதியையும், நிறைவான ஆசீரையும் வழங்க இறைவனை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2020, 12:11