அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்காகச் செபிக்கும் ஞாயிறு - அக்டோபர் 18 அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்காகச் செபிக்கும் ஞாயிறு - அக்டோபர் 18 

பொதுக்காலம் 29ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தச் சிறைக் கொடுமையிலிருந்து கூடுதல் சக்திபெற்று வெளிவந்து, பழங்குடியின மக்களுக்கு விண்ணகத்தின் வழியைக் காட்டும் தம் பணியைத் தொடரவேண்டும் என்று செபிப்போம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

வேதனை நிறைந்த உள்ளத்துடன் இன்றைய ஞாயிறு வழிபாட்டில் இறைவனை நாடி வந்திருக்கிறோம். ஸ்டனிஸ்லாஸ் லூர்துசாமி என்கிற 83 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், மும்பையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வயதில் மிக முதிர்ந்த ஒருவரை, சிறையில் அடைத்த அவலத்தை, இந்திய நடுவண் அரசு, முதல்முறையாக நடத்திக் காட்டியுள்ளது. அதுவும், ‘பார்கின்சன்ஸ்’ எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய், இருதயம் தொடர்பான குறைபாடுகள் உட்பட, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுள்ள அவரை, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், இராஞ்சியிலிருந்து மும்பைக்கு இழுத்துச்சென்று, அங்கு சிறையில் அடைத்திருப்பது, மனிதாபிமானமற்ற கொடுமை. இது, இந்திய நடுவண் அரசு, தனக்குத்தானே சூட்டிக்கொண்ட கேவலமான ஒரு மகுடம்.

எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இக்கொடுமையைப்பற்றி, இறைவனிடம் முறையிட வந்திருக்கிறோம். நாம் மேற்கொண்டுள்ள இந்த இறைவேண்டல் முயற்சியை, தமிழகத் திருஅவையுடன் இணைந்து மேற்கொள்கிறோம். அக்டோபர் 18, இஞ்ஞாயிறன்று, தமிழக ஆயர் பேரவை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்காகச் செபிக்கும்படி விடுத்துள்ள விண்ணப்பம் இதோ:

அக்டோபர் 18 ஞாயிறு, நாளை, 'ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உழைத்த தந்தை ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, தமிழகத் திருஅவை தனது தோழமையை உறுதிப்படுத்தும் நாள்' என்று அனுசரிக்க உங்களை அழைக்கிறது. அன்று, நாம், ஒவ்வொரு பங்கிலும், தந்தை ஸ்டான் சுவாமியினுடைய உடல்நலத்திற்காகவும், விடுதலைக்காகவும், திருப்பலியை ஒப்புக்கொடுக்கவும், திருப்பலி முடிந்தவுடன், ஆலயத்திற்கு முன்பாகக் கூடி, தந்தை ஸ்டான் சுவாமியினுடைய கைதைக் கண்டித்து, அவரை உடனே விடுதலை செய்யச் சொல்லி கோரிக்கை வைத்து, பங்கு அளவிலான நிகழ்வை நடத்தவும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், தொடர்ந்து, ஸ்டான் சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்படும்வரை, அவரது விடுதலைக்காக, செப, தவங்களில் ஈடுபடவும், மனித நேயமிக்க மற்ற மக்களோடும், தோழமை அமைப்புகளோடும் இணைந்து, அமைதியான வழியில் போராடவும், வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

இறையரசின் விழுமியங்களில் ஒன்றான நீதியை இவ்வுலகில் நிலைநிறுத்த உழைத்துவந்த அருள்பணி ஸ்டான் அவர்கள்மீது நடத்தப்பட்டுள்ள இந்த அரசியல் சதியைப் புரிந்துகொள்ள, இன்றைய நற்செய்தி நமக்கு உதவியாக உள்ளது. "அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்" (மத்தேயு 22:15) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இயேசுவுக்கு நிகழ்ந்ததுபோலவே, இக்காலத்தில் அவரது பணியாளர் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. அருள்பணி ஸ்டான் அவர்களை பேச்சில் சிக்கவைப்பதற்கு, National Investigation Agency (NIA) எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு, பல மாதங்களாக முயன்று வந்தது. இதுவரை நடைபெற்ற விசாரணைகள் அனைத்திலும், அருள்பணி ஸ்டான் அவர்கள்மீது எவ்வித குற்றத்தையும் சுமத்தமுடியவில்லை. ஆனால், விசாரணை என்ற பெயரில், அவரது கணணியைப் பறித்த NIA அமைப்பு, தீவிரவாதக் குழுக்களைப் பற்றிய தகவல்களை, அருள்பணி ஸ்டான் அவர்களுக்குத் தெரியாமல், அந்தக் கணணிக்குள் புகுத்திவிட்டனர். தற்போது, மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதென்றும், 2018ம் ஆண்டு நடைபெற்ற Bhima-Koregaon வன்முறைகளைத் தூண்டிவிட்டதில் அவருக்கு தொடர்பு உண்டென்றும், அவர்மீது, பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இத்தனைக் கீழ்த்தரமான அரசியல் வேட்டைக்கு பலியாகும்வண்ணம், அருள்பணி ஸ்டான் அவர்கள் செய்தது என்ன? ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கென, அவர், கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு வழிகளில் பாடுபட்டு வந்துள்ளார். எழுதப்படிக்கத் தெரியாத அந்த அப்பாவி மக்களின் உரிமைகளை அவர்களுக்கு உணர்த்திவந்தார்.

அண்மைய சில ஆண்டுகளாக, இந்திய நடுவண் அரசும், 'கார்ப்பரேட்' (Corporate) என்று சொல்லப்படும் பெருநிறுவனங்களும் இணைந்து, பழங்குடியினரின் உரிமைச்சொத்தான நிலங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு, அந்த நிலங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து வருகின்றன. இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, மக்களை, குறிப்பாக, இளையோரை ஒருங்கிணைத்து, சட்டப்படி அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து விழிப்புணர்வையும், அந்த உரிமைகளைக் கோரி போராடும் வழிமுறைகளையும், அருள்பணி ஸ்டான் அவர்கள் வழங்கிவந்தார்.

ஆயிரக்கணக்கான பழங்குடியின இளைஞர்கள், தம் உரிமைகளுக்காகப் போராடிய வேளையில், அவர்களை 'நாக்சலைட்டுகள்' என்று முத்திரை குத்தி, எவ்வித வழக்கும் இன்றி, அவர்களை சிறையில் அடைத்தனர், காவல் துறையினர். வறுமைப்பிடியில் சிக்கித்தவித்த அவ்விளையோர், வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாத நிலையில், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட அருள்பணி ஸ்டான் அவர்கள், அநியாயமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்க, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வழக்கின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள், உலகின் பல பகுதிகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அரசு, அருள்பணியாளரைப் பழிவாங்கத் துடித்தது. தற்போது Bhima-Koregaon வழக்கில் அவரைத் தொடர்புபடுத்தி, தன் பழியைத் தீர்த்துக்கொண்டது.

கோவிட்-19 கொள்ளைநோய், இந்தியாவில், கட்டுப்பாடின்றி, மக்களை வதைத்துவரும் இவ்வேளையில், வயதில் முதிர்ந்தவர்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதை நினைவுறுத்தி, எந்த விசாரணையையும் தான் தங்கியிருக்கும் இடத்திலேயே நடத்தும்படி, அருள்பணி ஸ்டான் அவர்கள் கேட்டுக்கொண்டார். வயதில் முதிர்ந்த அந்த அருள்பணியாளர் கூறிய எதையும் கேட்காமல், அக்டோபர் 8ம் தேதி இரவில், அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு, கைது செய்வதற்கான எந்த ஆணையும் இன்றி சென்ற NIA அமைப்பு, அவரை இரவோடிரவாக இழுத்துச்சென்றது.

வயதில் முதிர்ந்த ஓர் அருள்பணியாளரை, ஒரு தீவிரவாதியைப்போல, இரவோடிரவாக கைது செய்திருப்பது, நம் நினைவுகளை, கெத்சமனி தோட்டத்திற்கு இட்டுச் செல்கின்றது. அங்கு, இரவில் செபித்துக்கொண்டிருந்த இயேசுவைப் பிடிக்கச்சென்ற கூட்டத்தினரிடம், அவர், "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது" (லூக்கா 22:52-53) என்று கூறிய சொற்கள், நம் உள்ளங்களில் எதிரொலிக்கின்றன.

அருள்பணி ஸ்டான் அவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் குறித்துக் கேள்விப்பட்டதும், இராஞ்சி உயர்மறைமாவட்ட துணை ஆயர், தியடோர் மஸ்கரீனஸ் அவர்கள், இயேசு கூறிய இச்சொற்களை நினைவுறுத்தும் ஒரு கூற்றை வெளியிட்டார். “பல வழிகளில் உடல் நலன் குறைந்திருந்த 83 வயது நிறைந்த அருள்பணியாளரை, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், இவ்வாறு அழைத்துச் சென்றிருப்பது, மிகவும் கொடுமையானது. இதுவரை, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளிலும், முழு ஒத்துழைப்பு கொடுத்துவந்த அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களை, தேசியப் புலனாய்வுத் துறை, இரவோடிரவாக அழைத்துச் சென்றிருப்பது, இந்த கைதின் பின்னணியில் இருப்போர் தீட்டிவந்த இருள்நிறை சதித்திட்டங்களை வெளிப்படுத்துகிறது” என்று ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன், அவர் பதிவுசெய்த ஒரு காணொளியில், தன்னை எவ்வழியிலாவது கைது செய்வதற்கு அரசு பின்பற்றிவரும் அநீதியான வழிமுறைகளைப்பற்றி அவர் தன் கருத்துக்களை, தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். அவரைப்போலவே, நாடெங்கும் துன்புறுத்தப்பட்டுவரும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்:

"எனக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது, எனக்கு மட்டும் நிகழ்வது அல்ல. இது, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு வழிமுறை. தற்போது ஆட்சியில் இருக்கும் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியதால், கேள்விகள் கேட்டதால், முற்போக்குச் சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்று அருள்பணி ஸ்டான் அவர்கள் கூறினார்.

அருள்பணி ஸ்டான் அவர்களுக்காகவும், அவரைப்போல் Bhima-Koregaon வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் 15 பேருக்காகவும் இந்த ஞாயிறன்று நாம் இறைவேண்டல் மேற்கொள்கிறோம். இவ்வேளையில், இன்றைய நற்செய்தி நமக்கு வழங்கியுள்ள ஓர் அரசியல் நாடகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் சிறிது சிந்திப்போம். அரசியல் நாற்றம் அதிகமாகவே வீசும் இன்றைய நற்செய்திப் பகுதியில், மூன்று எண்ணங்களை கருத்தில் கொள்வோம்.

இயேசுவை பேச்சில் சிக்கவைத்து, அவரை வீழ்த்துவதற்கென்று, கருத்தளவில் எதிர் துருவங்களாய் இருக்கும், பரிசேயர்களும், ஏரோதியரும், கூட்டணி அமைத்தல் - இயேசுவை மனதார வெறுத்தவர்கள், அவரைப் புகழ்ந்து பேசிய வெளிவேடம் - "சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்ற இயேசுவின் கூற்று - ஆகிய மூன்று எண்ணங்கள், நமக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

பாம்பும், கீரியும் போல, ஒருவரையொருவர் கடித்துக் குதற ஆசைப்படும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரங்களில், கரங்கள்கோர்த்து, மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, நாம் பலமுறை வேதனையடைந்திருக்கிறோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய நற்செய்தி. ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். இயேசுவை ஒழிக்கும் ஒரே நோக்கத்துடன், அரசியலும், மதமும் இணைந்து வருகின்றன.

அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும், வாழ்வில், அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம்.

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல், நமக்கு அடுத்தப் பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். அவர்களை, 'வெளிவேடக்காரரே' என்று அழைத்து, அவர்களைப்பற்றிய உண்மைகளை தோலுரித்துக் காட்டினார்.

சீசருக்கு வரி செலுத்துவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” (மத்தேயு 22:21) என்ற புகழ்பெற்ற வரிகளை, இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கொடுக்கப்பட்டால், இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான், இவ்வுலகம், ஒரு சிலருக்கு மட்டும் விண்ணகமாகவும், பெருமளவு மக்களுக்கு நரகமாகவும் மாறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், உரிமைகளை இழந்து நரக வாழ்வு வாழும் மக்கள் நடுவே உழைத்துவரும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தச் சிறைக் கொடுமையிலிருந்து கூடுதல் சக்திபெற்று வெளிவந்து, பழங்குடியின மக்களுக்கு விண்ணகத்தின் வழியைக் காட்டும் தம் பணியைத் தொடரவேண்டும் என்றும், அவரைப்போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் விடுதலைப் பெறவேண்டும் என்றும், சிறப்பாக செபிப்போம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2020, 15:07