திருமண விருந்து உவமை - மத்தேயு 22:1-14 திருமண விருந்து உவமை - மத்தேயு 22:1-14 

பொதுக்காலம் 28ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

வாழ்வில் நமக்கு வந்த அழைப்புக்கள், அந்த அழைப்புக்களை ஏற்க மறுத்த நேரங்கள், ஆகியவற்றைச் சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஜான் கென்னடி அவர்கள், அமெரிக்க அரசுத்தலைவராக இருந்தபோது, ஒரு முறை, வெள்ளைமாளிகையில், சிறப்பு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். கலைத்துறையில் மிகவும் புகழ் பெற்றவர்களை மட்டும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்களில், வயதில் முதிர்ந்த William Faulkner என்பவரும் ஒருவர். அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர். அரசுத்தலைவர் கென்னடியிடமிருந்து வந்திருந்த அந்த அழைப்பைப் பெற்ற வில்லியம் அவர்கள், "எனக்கு அதிக வயதாகிவிட்டது. எனவே, புது நண்பர்களை உருவாக்க எனக்கு விருப்பமில்லை" என்று பதில்சொல்லி, அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இப்படி ஓர் அரியவாய்ப்பை வில்லியம் அவர்கள் மறுத்துவிட்டாரே என்று நாம் எண்ணலாம். அழைப்பை ஏற்க மறுத்ததற்கு, அவர் சொன்ன காரணம், நமக்கு எரிச்சல் மூட்டலாம். வில்லியம் அவர்களிடம் குறைகாண்பதற்கு முன், நம்மைப்பற்றி கொஞ்சம் சிந்திப்போமே. வாழ்வில் நமக்கு வந்த அழைப்புக்கள், அந்த அழைப்புக்களை ஏற்க மறுத்த நேரங்கள், சிலவேளைகளில், அழைத்தவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட போக்கு ஆகியவற்றைச் சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவன் தரும் ஒரு விருந்தை, இறைவாக்கினர் எசாயா விவரிக்கும்போது, முதலில், அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இவை வெறும் உணவுப்பொருட்களின் பட்டியலைப்போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்துவந்த அடிமைவாழ்வின் பின்னணியிலிருந்து சிந்தித்தால், இந்தப் பட்டியல், அவர்கள் ஏங்கித்தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும்.

பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய், புலம்பெயர்ந்தோராய், நாடோடிகளாய் வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் உண்டதெல்லாம், பரிதாபமான உணவு வகைகளே. விலங்குகளுக்குத் தரப்படுவதுபோல், பெரிய பாத்திரங்களில், அல்லது, பாய்விரிப்பில் கொட்டப்படும் உணவை, அந்த அடிமைகள் உண்ணவேண்டும். அதுவும், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு உண்ணவேண்டும். பொறுமையாய், நாகரீகமாய் காத்திருந்தால், ஒன்றும் கிடைக்காது. இப்படி, ஒவ்வொரு நாளும், ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்கள், ஆற அமர நாற்காலிகளில் அமர்ந்து, விருந்துண்பது எப்படி என்பதையே மறந்திருந்தனர். அவர்களிடம், இறைவன் தரும் விருந்தைப்பற்றி, இறைவாக்கினர் எசாயா, இவ்விதம் கூறுகிறார்:

இறைவாக்கினர் எசாயா 25: 6

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.

இறைவாக்கினர் எசாயா, இந்த வாசகத்தில் குறிப்பிட்டிருக்கும் திராட்சை இரசத்தைக் கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போம். நல்ல, சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில், அன்னை மரியா, கானாவில் நடந்த திருமணத்தின்போது, இயேசுவை அணுகிய அந்த நிகழ்வு, நம் நினைவில் நிழலாடுகிறது.

“வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசத்தை” உருவாக்க, நேரமும், கவனமும் தேவை. நேரம் எடுத்து, கவனம் செலுத்தி உணவுப்பொருட்களையோ, திராட்சை இரசங்களையோ உருவாக்கும் அந்தப் பழக்கத்தையே, பல நூற்றாண்டுகளாய் இழந்து தவித்தனர், இஸ்ரயேல் மக்கள். சுவையுள்ள திராட்சை இரசத்துடன் விருந்து கொடுத்து பெருமைகொண்ட காலங்களெல்லாம், அவர்களுக்கு, தூரத்துக் கனவுகளாக இருந்தன. இவ்விதம் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த உணவுப் பட்டியல், தங்கள் பாரம்பரியப் பெருமையை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பைத் தந்திருக்கும். அல்லது, வரப்போகும் விடுதலை வாழ்வைப்பற்றிய நம்பிக்கையை, அவர்கள் உள்ளங்களில் வளர்த்திருக்கும்.

விருந்தையும், உணவுப்பட்டியலையும் இவ்வளவு விரிவாக நாம் சிந்திக்கவேண்டுமா என்ற எண்ணம் எழலாம். அதற்கு காரணம் உண்டு. அன்று, தங்கள் சுயமரியாதையை இழந்து, உணவுக்காகப் போராடிய இஸ்ரயேல் மக்களைப்போல, நாம் வாழும் இன்றையச் சூழலிலும் உணவுக்காகப் போராடும் பலகோடி மக்களை எண்ணிப்பார்க்க இன்றைய வாசகங்கள் நமக்கு ஓரு வாய்ப்பைத் தருகின்றன.

உலகின் பல நாடுகளில், பசியின் கொடுமையால், உயிருக்குப் போராடுவோரை நினைத்துப்பார்க்க; அவர்கள் மீண்டும் மனிதர்களாக வாழ்வதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்பதை எண்ணிப்பார்க்க; இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. குறிப்பாக, நமக்கு உணவு வழங்கும் விவிசாயிகளை, முன்னேற்றம் என்ற பெயரால், பட்டினியால் கொல்லும் இந்திய அரசின் செயல்பாடுகள், நம்மில் எத்தனை பேரை பாதித்துள்ளது என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக நாம் மேற்கொள்ள இந்த ஞாயிறு அழைப்பு விடுக்கிறது.

தங்கள் சுயநலத்திற்காக வறியோரின் உழைப்பை உறுஞ்சுவதும், தங்கள் தேவை நிறைவேறியதும், அம்மக்களைத் தூக்கியெறிவதும், அரசியல் தலைவர்களுக்கு பழக்கமான ஒரு பாணி. நம் நடுவிலும், பயன்படுத்தி தூக்கியெறியும் இந்தப் போக்கு எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதை ஆய்வு செய்வது நல்லது. தூக்கியெறியும் கலாச்சாரம், நம்மில் எவ்வளவு பாதகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்.

அக்டோபர் 4, கடந்த ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற தலைப்பில் வெளியிட்ட திருமடலில், 'தூக்கியெறியும் உலகம்' என்ற பகுதியில் தன் வேதனைகளை இவ்வாறு வெளியிட்டுள்ளார்: "மனித குடும்பத்தில் முக்கியமானவர்கள் அல்ல என்று கருதப்படும் வறியோர், மாற்றுத்திறனாளிகள், 'இதுவரை பயனில்லை' என்ற முத்திரை குத்தப்பட்ட, பிறக்காத உயிர்கள், 'இனியொரு பயனில்லை' என்ற முத்திரை குத்தப்பட்ட, வயதில் முதிர்ந்தோர், ஆகியோர் தூக்கியெறியப்படுகின்றனர். உணவில் துவங்கி, பல்வேறு பொருள்களை வீணாக்கும் போக்கு, வேதனையளிக்கும் அளவு அதிகரித்துள்ளது. தூக்கியெறியப்படும் உணவைப்போலவே, மனிதர்களும் நடத்தப்படுகின்றனர். உலகின் பல பகுதிகளில், கொரோனா தொற்றின் விளைவாக, வயதில் முதிர்ந்தோருக்கு நிகழ்ந்ததை நாம் பார்த்தோம். அவர்கள் அவ்விதம் மரணமடைந்திருக்க வேண்டியதில்லை" (திருமடல் 18,19)

தூக்கியெறியும் கலாச்சாரம் நம் உள்ளங்களில் அடுத்தவரைப்பற்றிய உணர்வுகளையும் பெருமளவு மழுங்கடித்துவிட்டது. வறுமைப்பட்ட பல நாடுகளில் நிலவும் வறட்சியும், பட்டினிச் சாவுகளும் நாம் பல ஆண்டுகளாகக் கேட்டுவரும் ஒரு செய்தி என்பதால், அது நம் உள்ளத்தைத் தொடாமல் போக வாய்ப்பு உண்டு.

அரசன் தந்த அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் வயலுக்கும், கடைக்கும் போன மனிதர்களை, இன்றைய  நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். அதேபோல், வறுமைப்பட்ட நாடுகளில் நிகழும் பட்டினிச் சாவுகளைப்பற்றி கேள்விப்படும்போது, "வறுமையும், பட்டினியும் உலகில் எல்லா இடங்களிலும் இருக்கத்தானே செய்கின்றன. என்னால் என்ன செய்யமுடியும்?" என்று, அப்பிரச்சனை வழியே வரும் அழைப்பை அலட்சியப்படுத்திவிட்டு, நம் சொந்த வாழ்வில் மீண்டும் மூழ்கிவிடும் ஆபத்து நமக்கும் உண்டு.

வறுமைப்பட்ட நாடுகளில் நிகழும் பட்டினிச் சாவுகளைப் பற்றிப் பேசும்போது, முன்னர் வாசித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. இந்தப் பட்டினி சாவுகளால் சிறிதும் பாதிக்கப்படாமல், தனக்கு விடப்பட்ட பணியை மட்டும் செய்துவிட்டுத் திரும்பிய ஒரு புகைப்படக் கலைஞரைப் பற்றிய செய்தி அது.

மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் புகைப்படங்கள், அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் சிறந்த படத்திற்கு, ஒவ்வோர் ஆண்டும், Pulitzer என்ற விருது வழங்கப்படும். 1994ம் ஆண்டு, இந்த விருதைப்பெற்ற புகைப்படம், சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். அங்கு நிலவிய பட்டினிக் கொடுமையை விளக்கும் ஒரு படம். எலும்பும் தோலுமாகக் காணப்படும் ஒரு பெண் குழந்தை, தரையில் ஊர்ந்துசெல்வதாக, அப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. பல நாள்கள் பட்டினி கிடந்ததால், எழுந்துநடக்கும் சக்தியை இழந்திருந்த அக்குழந்தை, அருகிலிருந்த  உணவு மையத்திற்கு, ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அக்குழந்தைக்குப் பின்புறம், பிணம்தின்னும் கழுகு ஒன்று அமர்ந்திருந்தது. அக்குழந்தை எப்போது இறந்து விழும், தன் விருந்தை ஆரம்பிக்கலாம் என்று அந்தக் கழுகு காத்திருந்தது. சூடானில், மனிதர்கள், உணவின்றி இறந்து வந்ததால், பிணம் தின்னும் கழுகுகளுக்கு பெருமளவு உணவு கிடைத்தது என்பதை, அந்தப் படம் சொல்லாமல் சொன்னது.

விருதுபெற்ற அந்தப் படத்தை எடுத்தவர், Kevin Carter என்ற 33 வயது இளைஞர். ஐ.நா.அமைப்பு, சூடானில் மேற்கொண்ட பணிகளை படங்களாகப் பதிவுசெய்யச் சென்றவர் அவர். அவருக்கு Pulitzer விருது கிடைத்த அன்று, பலர், அவரிடம் “அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது?” என்று கேட்டார்கள். அவர் பதிலுக்கு, "நான் அந்தப் படத்தை எடுத்தபின், கழுகை விரட்டிவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டேன். அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது" என்று சொன்னார். அவர் சொன்ன அந்தப் பதிலைக் கேட்டபின், ஒரு நாளிதழ், "குழந்தைக்கு இந்தப் பக்கம் அமர்ந்து படம் எடுத்த இவருக்கும், குழந்தைக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த அந்தப் பிணம் தின்னும் கழுகுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை." என்று, Kevin Carterஐப் பற்றி எழுதியிருந்தது: விருதுபெற்ற இந்தப் புகைப்படத்தினால் அவர் பெற்ற கண்டனங்கள் Kevin Carterன் மனதை உடைத்தன. விருதுபெற்ற அதே ஆண்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார்.

பசி, பட்டினி, வறுமை இவற்றை நாம் எவ்விதம் நோக்குகிறோம்? பட்டினிச் சாவுகள் நமக்கு வெறும் புள்ளி விவரங்களா? தினசரி செய்திகளா? காட்சிப் பொருள்களா? அல்லது, இவை அனைத்தும், இறைவன் நமக்குத் தரும் சிறப்பான அழைப்புக்களா? நான், எனது, என்ற சிறைகளிலிருந்து வெளியேறுவதற்கு, இறைவன் நமக்குத் தரும் அழைப்புக்களை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு, நம் அன்றாட வாழ்வில் மட்டும் கவனம் செலுத்துவது, வலியச் சென்று, நம்மையே, தன்னலச் சிறைகளுக்குள், மீண்டும் அடைத்துக்கொள்ளும் வழிகள். இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை, எத்தனை முறை, கொன்று, குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு, இன்றும், இனி வரும் நாட்களிலும், பதில்கள் தேடுவது, நமக்கு மீட்பைத் தரும்.

மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள திருமண விருந்து உவமை, திருமண உடை அணியாத ஒருவரை, அரசர் தண்டிக்கும் புதிரான ஒரு நிகழ்வுடன் நிறைவடைகிறது. தான் அழைத்தவர்கள் வரவில்லை என்பதால், அரசர், சாலையோரங்களில் காணும் அனைவரையும் கூட்டிவரச் சொன்னார். அப்படியே நல்லோர், தீயோர் யாவரும் வந்து சேர்ந்தனர்... விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. அந்நேரத்தில் அங்கு வரும் அரசர், அங்கிருந்த ஒருவர் திருமண ஆடை அணியாததைக் கண்டு கோபம் கொள்கிறார். அவருக்குத் தண்டனையும் வழங்குகிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது  அநியாயமாகத் தெரிகிறது. தெருவோடு போன ஒருவரை வீட்டுக்குக் கூட்டிவந்து, அவர் சரியான உடை அணியவில்லை என்று கூறி, அவரை தண்டிப்பதா? என்று நாம் எரிச்சலடையலாம். ஆனால், இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரத்தைக் கொஞ்சம் ஆய்வுசெய்தால் சிறிது தெளிவு பிறக்கும்.

இஸ்ரயேல் சமுதாயத்தில், வீடுகளில் விருந்துண்ண செல்லும்போது, வாசலருகே தொட்டிகளில் உள்ள நீரை எடுத்து, விருந்தினர் ஒவ்வொருவரும் தங்கள் கரங்களையும், கால்களையும் சுத்தப்படுத்திய பிறகே வீட்டுக்குள் செல்லவேண்டும். வீட்டிற்குள் நுழைந்ததும், நறுமணத் தைலம் கரங்களிலும், தலையிலும் பூசப்படும். இவை அனைத்தும் இணைந்து, தூய்மைப்படுத்தும் சடங்கு என்று அழைக்கப்பட்டது.

அரசர் அளிக்கும் விருந்து என்றால், விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் தங்களையே சுத்தம் செய்து, நறுமணத் தைலம் பூசிக்கொள்வதோடு, கொடுக்கப்படும் சிறப்பான உடையையும் அணிந்துகொள்ள வேண்டும். சாலையோரத்திலிருந்து திரட்டப்பட்ட மக்கள் என்றாலும், ஒவ்வொருவரும் தங்களையே சுத்தப்படுத்திக்கொண்டபின், தரப்பட்ட ஆடைகளை அணிந்தபின்னரே விருந்துண்ணும் இடத்திற்குச் செல்லவேண்டும். இந்தப் பழக்கங்கள் பிடிக்காதவர்கள் விருந்துக்குச் செல்லாமல் இருந்திருக்க வேண்டும். விருந்துக்கும் சென்று, அங்கு கடைபிடிக்கவேண்டிய முறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பது, அழைத்த அரசரை அவமதித்ததாகக் கருதப்படும். எனவேதான், திருமண ஆடை அணியாத அந்த மனிதர் மீது அரசர் அவ்வளவு கோபம் கொண்டார் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இறைவன் தரும் அழைப்பு, நம் வாழ்வில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதை  ஏற்பதோ, அலட்சியப்படுத்துவதோ நாம் எடுக்கும் முடிவு. அவரது அழைப்பை ஏற்ற பின்னரும், விருந்தில் கலந்துகொள்ளும் பக்குவத்துடன் அங்கு நுழையவேண்டும் என்பதும், திருமண விருந்து உவமை வழியே இயேசு நமக்கு முன் வைக்கும் ஒரு சவால். இறைவன் தரும் அழைப்பிலும் பல எதிர்பார்ப்புக்கள், சவால்கள், கடமைகள் இருக்கின்றன. இறைவன் அழைப்பைப் பெற்றுவிட்டோம் என்ற உரிமையை மட்டும் பெரிதுபடுத்தி, அழைப்புடன் வரும் கடமைகளை ஒதுக்கிவிடுவது, அல்லது அலட்சியப்படுத்துவது, அழைத்த இறைவனையே அலட்சியப்படுத்துவதற்கு சமமாகும்.

திருமண விருந்து உவமையின் முத்தாய்ப்பாக, மகுடமாக இயேசு கூறும் வார்த்தைகள்: "அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்." (மத்தேயு நற்செய்தி 22: 14) அந்தச் ‘சிலரி’ல் ஒருவராக நாமும் அழைப்பை ஏற்போம்; இறைவன் வழங்கும் ஆனந்த விருந்தில் தகுந்த முறையில் பங்கேற்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2020, 14:45