இயேசு சபை அருள்பணி Stan Swamyக்கு ஆதரவாக இயேசு சபை அருள்பணி Stan Swamyக்கு ஆதரவாக 

ஏழைகளின் பக்கம் அருள்பணி ஸ்டான் சுவாமி நின்றதால் சிறைத் தண்டனை

நம் சகோதரருள் ஒருவர் அநீதியான முறையில் துன்புறும்போது, அதைப் பார்த்துக்கொண்டு நாம் அமைதியாக, வெறும் பார்வையாளராக இருந்துவிடமுடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அநீதியான முறையில், அண்மையில் சிறைவைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நம் சகோதரருள் ஒருவர் அநீதியான முறையில் துன்புறும்போது, அதைப் பார்த்துக்கொண்டு நாம் அமைதியாக, வெறும் பார்வையாளராக இருந்துவிடமுடியாது என்றும், ஒடுக்கப்பட்டோரின் குரலாக அனைவரின் குரலும் ஒலிக்கவேண்டும் என்றும், ஒருமைப்பாட்டு குரலை எழுப்பியுள்ளார், கொல்கத்தாவின் இஸ்லாமிய குரு Maulana Shafique Qasmi

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள இயேசுசபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு ஆதரவாக, அவர் விடுதலையை வேண்டி இடம்பெற்ற அமைதி ஊர்வலத்தின் இறுதியில் உரையாற்றிய கொல்கத்தாவின் முக்கிய மசூதியான Nakhoda மசூதியின் தலைமைக்குரு Shafique Qasmi அவர்கள், அருள்பணியாளரை கைதுசெய்திருப்பதைக் கண்டிப்பதாகவும், அவரின் விடுதலைக்காக அரசிடம் விண்ணப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வித குற்றமும் செய்யாத ஒருவரைக் கைது செய்துள்ள அரசு, அவரை விடுவிக்கவில்லையெனில், அனைத்து சிறுபான்மையினரும் ஒன்றிணைந்து அவரின் விடுதலைக்காகப் போராடவேண்டியிருக்கும், என்ற எச்சரிக்கையையும் மத்திய அரசுக்கு விடுத்துள்ளார் இஸ்லாமிய மதகுரு Shafique Qasmi.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலையை வேண்டி நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான கொல்கத்தா புனித சேவியர் பல்கலைக்கழக துணைவேந்தர், இயேசு சபை அருள்பணி  பீலிக்ஸ் ராஜ் அவர்கள் பேசுகையில், ஏழைகளுக்காக குரல் எழுப்பும் இறைவாக்கினர்களின் குரலாக அருள்பணி Stan Swamy அவர்களின் குரல் இருந்தது எனவும், புனித அன்னை தெரேசாவை ஒத்த பணி உணர்வை அவர் கொண்டிருந்தார் எனவும் கூறினார்.

ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோர் மத்தியில் உழைத்த அன்னை தெரேசா அவர்கள், மதமாற்றத்தில் ஈடுபட்டார் என பொய்க்குற்றம் சுமத்தப்பட்டதுபோல், பழங்குடியினரின் உரிமைகளுக்காக உழைத்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என பொய்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் என்று கூறிய அருள்பணி பீலிக்ஸ் ராஜ் அவர்கள், நீதிவேண்டி நிகழ்ந்த போராட்டத்தில், ஏழைகளின் பக்கம் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் நின்றதால் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மேலும் கூறினார். (ASIANEWS)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2020, 15:01