கொரோனா பாதிப்பால் உதவி நாடி நிற்கும் மக்கள் கொரோனா பாதிப்பால் உதவி நாடி நிற்கும் மக்கள் 

பொருளாதார நெருக்கடிகளால் பயன்பெறும் தனியார் வங்கிகள்

உலகின் 64 ஏழை நாடுகள் தங்கள் குடிமக்களின் நல ஆதரவுப் பணிகளுக்கு செலவழிக்கும் தொகையைவிட, வெளிநாட்டுக் கடனுக்கு வட்டியாக செலுத்தும் தொகை அதிகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அனைத்துலக கடன் நெருக்கடியால் இன்று அதிக அளவில் பயன்பெற்றுவருவது, தனியார் வங்கிகள் என, தன் கவலையை வெளியிட்டுள்ளது, Christian Aid எனும் கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு.

கடன்பெற்றுள்ள ஏழை நாடுகளுக்கு ஆதரவாக, உலகின் வளர்ந்த நாடுகளைக்கொண்ட G20 அமைப்பின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் அண்மையில் எடுக்கப்பட்டுள்ள முடிவை பாராட்டியுள்ள Christian Aid அமைப்பு, இத்தகைய ஒரு போக்கை தனியார் வங்கிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோய் பரவலாலும், அதன் விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகள், பணக்கார நாடுகளிடம் வாங்கிய கடனுக்கான வட்டியை அடுத்த ஆறு மாதங்களுக்குப்பின் வழங்கினால் போதும் என, அந்நாடுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மீண்டும் ஒருமுறை நீடித்துள்ள G20 நிதி அமைச்சர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது, Christian Aid அமைப்பு.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஏழை நாடுகள் பல, கொரோனா தொற்று நோயாலும், பொருளாதார இழப்புகளாலும் துயருறும் வேளையில், தனியார் வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டியை தொடர்ந்து வசூலித்து வருகின்றன என Cafod, Oxfam, போன்ற பல அரசுசாரா அமைப்புக்களுடன் இணைந்து, Christian Aid அமைப்பு, தன்  கவலையை வெளியிட்டுள்ளது.

அண்மைய ஆய்வு முடிவுகளின்படி, உலகின் 64 ஏழை நாடுகள் தங்கள் குடிமக்களின் நல ஆதரவுப் பணிகளுக்குச் செலவழிக்கும் தொகையைவிட, வெளிநாட்டுக் கடனுக்கு வட்டியாக செலுத்தும் தொகை அதிகம் எனவும், 44 நாடுகள், தங்கள் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கு செலவிடும் தொகையைவிட, கடனுக்கென திருப்பிச் செலுத்தும் தொகை அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, இவ்வாண்டிலும், வரும் 2021ம் ஆண்டிலும், உலகப் பொருளாதார நிலை, இறங்குமுகமாகவே இருக்கும் என எச்சரித்துள்ளது IMF எனும் உலக நிதி நிறுவனம். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2020, 14:29