தேடுதல்

மூடிய கோவிலின் முன் தெருவில் பக்தியோடு செபிக்கும் பெரு நாட்டு மக்கள் மூடிய கோவிலின் முன் தெருவில் பக்தியோடு செபிக்கும் பெரு நாட்டு மக்கள்  (AFP or licensors)

திருப்பலி என்பது வெறும் மக்கள் கூட்டமல்ல

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் பிறன்பு மனப்பான்மையுடன் ஆற்றி, மனித குலத்திற்கான தன் அர்ப்பணத்தை வெளிப்படுத்தியுள்ளது திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திருவழிபாட்டு நிகழ்வுகள், தற்போது படிப்படியாக அனுமதிக்கப்பட்டுவருவது குறித்து, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளனர், பெரு நாட்டு ஆயர்கள்.

ஒவ்வொரு கோவிலின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியே அனுமதிக்கப்பட்டவேண்டும் எனவும், மேலும் சில கட்டுப்பாடுகளுடனும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட அரசு அனுமதித்துள்ளதைப் பற்றி தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், ஞாயிறு திருப்பலிகளும், ஏனைய மத வழிபாட்டு நிகழ்வுகளும் சாதாரண கூட்டங்களாகவோ, பொழுதுபோக்கு அம்சங்களாகவோ நோக்கப்படாமல், அவைகளுக்குரிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

அனைத்து மத வழிபாட்டு நிகழ்வுகளும், அரசியலைப்பு விதிகளின்படி, மத சுதந்திரத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதால், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் மீது அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என ஆயர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, தங்கள்பகுதியின் சூழலுக்கு ஏற்ப, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன், மக்கள் தகுந்த வகையில் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் பங்குபெற உதவ வேண்டியது அந்தந்த பகுதி ஆயர்களின் கடமை என்கிறது பெரு ஆயர் பேரவையின் அறிக்கை.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் பிறன்பு மனப்பான்மையுடன் ஆற்றி, மனித குலத்திற்கான தன் அர்ப்பணத்தை வெளிப்படுத்தியுள்ள தலத்திருஅவை, அரசின் கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாட்டுகளை கடைப்பிடிப்பதில், அதே அர்ப்பண உணர்வுடன் செயல்படும் என மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள். (Fides)

29 October 2020, 14:25